Thursday, June 9, 2016

கடைசி நிமிட கவனச் சிதறலில் மாறிய முடிவு

கடந்த ஞாயிறு (05.06.2016) அன்று வண்ணக்கதிரில்  வெளியான என்னுடைய "நேர்கோடு" சிறுகதை இங்கே. வேறு மாதிரி முடிக்க உத்தேசித்து கடைசி நொடியில் கவனம் சிதறி முடிவு மாறி விட்டது.  ஓவியம் தோழர் ஸ்ரீரசா.


நேர் கோடு
வேலூர் சுராதிருத்திக் கொண்டிருந்த நோட்டுப் புத்தகத்தை அப்படியே வீசி எறிந்தார் ராமநாதன். தொலைக்காட்சியின் மீது ஒரு கண்ணையும் அப்பாவின் மீது ஒரு கண்ணையும் வைத்திருந்த  குமார் நடுங்கிப் போனான். அடுத்து என்ன நடக்கும் என்ற நடுக்கம் வந்தது.

“சனியனே, எனக்குன்னு வந்து தொலைச்சியே, ஒரு கணக்கு உருப்படியா போடத் தெரியுதா? ஸ்டெப்பும் ஒழுங்கா வர மாட்டேங்குது, அப்படி ஸ்டெப்பு வந்தா கேர்லெஸ் மிஸ்டேக், ஜியாமெட்ரியாவது  தெளிவா போடறியா? ஒரு ஸ்கயர், ட்ரையாங்கிள் கூட போட வரலை. ஸ்கேல் வச்சுத்தான கோடு போடற, ஒன்னு கூட நேரா வர மாட்டேங்குது, நரம்புக் கோளாறு இருக்கறவன் மாதிரி வளைஞ்சு வளைஞ்சு எங்கேயோ போகுது. இப்படியே இருந்தா போர்ட் எக்ஸாமில முட்டை கூட வராது”

குமார் எதிர்பார்த்த ஒவ்வொரு வார்த்தையும் பிசகாமல் அப்படியே வந்தது ராமநாதனிடமிருந்து. அவன் எதிர்பார்க்காத தருணத்தில் அவனை தன்னருகே இழுத்து பளீர், பளீர் என்று  நாலு அறை முதுகில் சாத்தினார். கண்களில் நீர் கோர்த்துக் கொண்டாலும் அழக்கூடாது என்ற வைராக்கியத்தோடு சிவந்து போன முகத்தோடு விறைப்பாக நின்றான்.

“என்னங்க, தோளுக்கு கிட்ட வளர்ந்த புள்ளையப் போய் அடிக்கறீங்க?”

என்று வந்த மனைவி சிவகாமியின் குரலை ஒதுக்கித் தள்ளி மீண்டும் சத்தம் போட்டார் ராமநாதன்.

“எல்லாம் நீ கொடுக்கற செல்லம்தான். அந்த காலத்துல எம்.எஸ்.சி மேத்ஸ் பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் செஞ்சவன் நான். என் கிட்ட படிச்ச பையன்தான் இவனுக்கு கணக்கு டீச்சர். என்ன சார், உங்க பாச்சா எதுவும் உங்க பையன் கிட்ட பலிக்கலை போலருக்கேன்னு நக்கலா கேட்கிறான். ஸ்டாப் ரூமே சிரிக்குது. அப்படியே அங்கேயே ஒரு கயத்துல தொங்கிடலாமாங்கற அளவுக்கு அவமானமா இருந்தது”

“நம்ம புள்ளையோட பிரச்சினை என்னன்னு தெரியாம அவங்க கணக்கு வாத்தியாருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கும் தெரியாது. அவங்களூக்கெல்லாம் தெரிய வேண்டிய அவசியமும் கிடையாது. உங்களுக்கு நல்லா தெரியும்ல. அவனுக்கு அனுசரணையா நீங்கதான் இருக்கனும்னு டாக்டர் சொன்னது மறந்து போச்சா” என்று அவரும் பொறிந்து தள்ளினார்.

ராமநாதனின் நினைவுகள் இரண்டு மாதத்திற்கு முந்தைய ஒரு இரவுப் பொழுதுக்குச் சென்றது.

அந்த மன நல மருத்துவரின் அறைக்கு வெளியே ராமநாதனும் சிவகாமியும் உட்கார்ந்திருந்தார்கள். குமாரை உள்ளே மருத்துவர் சோதித்துக் கொண்டு இருந்தார். எதிலும் முழு கவனம் இல்லாமல் இருக்கிறானே, ஏதாவது கோளாறு இருக்குமோ என்று நகரத்திலேயே பெரிய மருத்துவரிடம் கூட்டி வந்திருந்தார்கள். அவர் குமாரோடு தனியாக பேச வேண்டும் என்று சொல்லி இவர்களை வெளியே உட்கார வைத்து விட்டார். ஒரு மணி நேரத்திற்குப் பின்பே அழைத்தார்.

 ‘’’டாக்டர், என்ன கோளாறு இவனுக்கு? சரி பண்ண முடியுமில்ல?” என்று கவலையோடு சிவகாமியும்

“எத்தனையோ வசதி செஞ்சு கொடுத்தும் ஒழுங்கா படிக்க மாட்டேங்கறான். ஒரு கோடு கூட சரியா  போட வர மாட்டேங்குது” என்று குற்றம் சொல்லும் தொனியோடு ராமநாதனும்

ஒரே நேரத்தில் கேட்க,

அவர்களை பொறுமையாக இருக்கச் சொல்லி விட்டு மருத்துவர் தொடர்ந்தார்.

“உங்க பையன் கிட்ட எந்த கோளாறும் இல்லை. அவன் ஒன்னும் பிலோ ஆவரேஜ் கிடையாது. ஒவ்வொருவருமே ஒரு வேலை செஞ்சுக்கிட்டு இருக்கிற போது அவங்க மைண்டில் திடீரென்று வேற ஏதாவது விஷயம் ஞாபகத்துக்கு வரும். அந்த விஷயத்திலேயிருந்து இன்னொன்று அப்படி சிந்தனை தாவிக்கிட்டே இருக்கும். இது வெறும் கவனச் சிதறல்தான். எல்லோருக்குமே இந்த பழக்கம் உண்டு. பொதுவா படிக்கிறபோதும் எழுதறபோதும் எல்லாருக்கும் நடக்கற ஒன்னுதான். பழைய பாட்டு ஞாபகம் இருக்கா “புத்தகம் கையிலே, புத்தியோ பாட்டிலே”

“சரி டாக்டர், இந்த கவனச்சிதறலை சரி செய்ய முடியாதா? அதனால எவ்வளவு மோசமா மார்க் வாங்கறான் தெரியுமா?” என்று கேட்டார் ராமநாதன்.

“நான் முன்னாடியே சொன்ன மாதிரி இது ஒரு நோய் கிடையாது. குறைபாடு என்ற வார்த்தை கூட சரியில்லை. கவனம் சிதறுகிற போது குமாரால உடனடியா மீண்டும் செஞ்சிக்கிட்டு இருந்த வேலைக்கு வர முடியல. மனதை ஒருமுகப்படுத்த சில பயிற்சிகள் இருக்கு. அதை தொடர்ச்சியா செஞ்சுக்கிட்டு வந்தா நிச்சயம் முன்னேற்றம் இருக்கும். ஆனா ஒன்னு இதுக்கு கொஞ்சம் நாள் பிடிக்கும். ஒரு மாசம், ரெண்டு மாசத்துல நீங்க பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. பரிட்சை, மார்க், ரேங்க் இதையெல்லாம் மறந்துட்டு நீங்க அவனுக்கு ஆறுதலாக இருக்கனும். பொறுமை உங்களுக்குத்தான் அதிகமாக தேவைப்படும் போல இருக்கு.”

“பெஸ்ட் ஆப் லக்” என்று குமாருக்கு கை கொடுத்து விட்டு “போய் அசிஸ்டெண்டை பாருங்க” என்று அனுப்பி விட்டார்.

சே என்று தன் தலையையே தட்டிக் கொண்டு மகனை பார்க்க  திரும்பினார். அங்கே குமாரை காணவில்லை. எங்கே என்று பார்க்கப் போனார். எதுவுமே நடக்காதது போல டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

நான்கைந்து நாட்கள் ஓடியிருக்கும்.

தேர்தல் பயிற்சி வகுப்புக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு போயிருந்த ராமநாதன், மதிய உணவு நேரத்தின் போது  மவுனத்தில் இருந்த அலைபேசியில் தனக்கு ஏதாவது அழைப்பு வந்திருக்கிறதா என்று பார்த்தார். சிவகாமியிடம் இருந்து பத்து மிஸ்டு கால்கள். அப்படியென்ன அவசரம் என்று நினைத்துக் கொண்டே இவர் எண்களை அழுத்தும் முன்பே அடுத்த அழைப்பு வந்து விட்டது.

“உடனே புறப்பட்டு கே.எஸ். ஹாஸ்பிடலுக்கு வாங்க” என்று சிவகாமி அழுது கொண்டே சொல்லி விட்டு போனை வைத்து விட்டார். கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே ஆட்டோ கிடைத்தது. போகும் வழியில் மனைவியை மீண்டும் அழைத்து விபரம் கேட்டார்.

காலையில் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடப் போயிருக்கிறான் குமார். இவன் பேட் செய்யும் போது வேகமாக வந்த ஒரு பந்தை முன் நோக்கிச் சென்று அடிக்கப் போயிருக்கிறான். கடைசி நொடியில் முன் வைத்த காலை பின் வைத்துள்ளான். இந்த குழப்பத்தில் பந்து தலையில் பட்டுள்ளது. எதிர்பாராமல் பந்து தலையில் பட்டதில் அப்படியே கீழே மள்ளாந்து விழுந்து விட்டான். ஸ்டம்புகளின் மீது தலை பட்டதில் ரத்தம் வந்து விட்டது. கூடப் போன நண்பர்களே பக்கத்தில் இருந்த மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவ மனைக்கு அழைத்துப் போய் விட்டார்கள்.

மருத்துவமனையின் ஐ.சி.யு வாசலில் முகத்தில் வடிந்த கண்ணீர் காய்ந்து போன சுவடோடு சிவகாமி காத்திருந்தார். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் படி எந்த பிரச்சினையும் இல்லை என்று டாக்டர் சொல்லி விட்டார். இன்னும் ஓரிரு மணி நேரத்தில் கண் விழித்து விடுவானாம் என்று நிம்மதிப் பெருமூச்சோடு கூறினார் அவர். நர்ஸின் அனுமதி பெற்று ஐ.சி.யு உள்ளே வந்தார். குமாரின் உடலில் ஏராளமான ட்யூப்கள் பொறுத்தப்பட்டிருந்தது. இதயத்துடிப்பை கண்காணிக்கும் இ.சி,ஜி மானிட்டர் அவர் கண்ணில் பட்டது. கோடுகள் குறுக்கிலும் நெடுக்கிலும் பச்சை நிறத்தில் ஓடிக் கொண்டிருந்தது.

கோடுகள் நேராக இல்லை என்பதற்காக முதல் முறையாக மகிழ்ந்தார் ராமநாதன்.


6 comments:

 1. Replies
  1. ஐயா, நீர் தாராளமாக விமர்சனம் வைக்கலா. அதை நான் வரவேற்கிறேன்.
   இப்படி அனாமதேயமாக ஒளிந்து கொண்டு விமர்சனம் வைப்பது அசிங்கம் இல்லையா? இப்படிப்பட்ட அசிங்கத்தை செய்கிற நீர் யார்? அனாமதேயமாக, அறுவெறுப்பான ஜென்மமாக இருப்பதை விட மொக்கையாக இருப்பது மேல். பொய் முகத்தோடு திரிகிறவர்கள் என்றும் திருந்தப் போவதில்லை

   Delete
 2. அருமை! இனிய பாராட்டுகள்!

  ReplyDelete
 3. நல்ல கதை! இதன் வேறொரு முடிவையும் இங்கே தந்திருக்கலாமே சார்?

  ReplyDelete
 4. "ஐ.சி.யு உள்ளே சென்ற போது இ.சி.ஜி மானிட்டரில் கோடுகள் நேராக ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அதைப் பார்த்து ராமநாதனால் மகிழ முடியவில்லை" என்றுதான் முடிக்க எண்ணியிருந்தேன். ஒரு குறும்படத்தில் "ஒரு நல்ல காரியம் செய்ததால் காதலியை தொடர்பு கொள்ள முடியாமல் போய் விடும். உன் சங்காத்தமே வேண்டாம் என்று அவள் முறித்துச் செல்வாள். பிறகு மீண்டும் தொடர்பு கொண்டு காதலை தொடர்வாள்" காதலி பிரிந்து போவதோடு முடித்திருந்தால் கவித்துவமாக இருக்குமே என்று அந்த இயக்குனரைக் கேட்டேன். நல்லது செஞ்சவனுக்கு எதுக்கு சார் தண்டனை தரனும் என்று அவர் பதில் சொன்னார். அந்த விவாதம் நினைவுக்கு வர முடிவை மாற்றி விட்டேன்

  ReplyDelete