Monday, June 6, 2016

இதுதான் அவரின் சூப்பர் பஞ்ச்

 மறைந்த குத்துச்சண்டை கதாநாயகன், அமெரிக்கா வியட்னாம் மீது தொடுத்த அராஜகப் போரில் பங்கேற்க மறுத்தார். அதற்காக அவர் அளித்த விளக்கம், குத்துச்சண்டையில் அவர் தனது போட்டியாளர் மீது வீசிய குத்தை விட சக்தி மிக்கதாய் இருக்கிறது. அதன் வலிமைக்குக் காரணம் அவர் சொன்னதில் இருக்கிற சத்தியம். 

களத்திலும் நிஜத்திலும் கதாநாயகனாய் இருந்த முகமது அலிக்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலி.



லூயிஸ்வில்லேயில் நீக்ரோ என்றழைக்கப்படுகிற என் மக்கள் நாய்களை விட இழிவாக நடத்தப்படுகிறார்கள், சாதாரண மனித உரிமைகள் கூட அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. அப்படி இருக்கையில் அவர்கள் ஏன் என்னை சீருடை அணியச் சொல்கிறார்கள்? பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிற வியட்னாமில் உள்ள ப்ரௌன் நிற மக்கள் மீது வெடிகுண்டுகளையும் துப்பாக்கி குண்டுகளையும் வீசி அழிக்க அழைக்கிறார்கள். 

உலகெங்கிலும் உள்ள மற்ற நிறத்தவர்கள் மீதான வெள்ளையர்களின் ஆதிக்கத்தை தக்க வைப்பதற்காக, என் வீட்டிற்கு  பத்தாயிரம் மைல்கள் அப்பால் இருக்கிற ஏழை நாட்டின் மீது குண்டு வீசவும் கொளுத்தவும் நான் கண்டிப்பாகச் செல்ல மாட்டேன். இத்தீமைகள் முடிவுக்கு வர வேண்டிய நாள் நெருங்கி விட்டது. 

இப்படிப்பட்ட நிலை எடுப்பதற்காக நான் பல மில்லியன் டாலர்களை இழக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறார்கள். இதை நான் முன்பும் சொல்லியுள்ளேன். இப்போதும் சொல்கிறேன். என் மக்களின் உண்மையான எதிரி இருப்பது இங்கேதான்.

தங்களின் உரிமைகளுக்காக, சுதந்திரத்திற்காக, நியாயத்திற்காக போராடி வரும் மக்களை அடிமைப்படுத்துவதற்கான ஒரு கருவியாக மாறி என் மதத்தையோ, என் மக்களையோ, என்னையோ இழிவு படுத்திக் கொள்ள முடியாது. 

என்னுடைய இருபத்தி இரண்டு மில்லியன் மக்களுக்கு சுதந்திரமும் சமத்துவமும் இப்போரால் கிடைக்குமெனில் நாளையே கூட அவர்கள் அழைக்காமலேயே நான் போரில் இணைவேன். என் நம்பிக்கைகளுக்காக உறுதியாக நிற்பதால் நான் இழக்கப் போவது எதுவும் இல்லை. ஆகவே நான் சிறைக்குச் செல்லலாம். அதனால் என்ன? நானூறு வருடங்களாக நாங்கள் சிறையில்தானே இருக்கிறோம். 

No comments:

Post a Comment