Tuesday, June 7, 2016

172 கோடீஸ்வர எம்.எல்.ஏக்களுக்கு சமர்ப்பணம்




நான்கு  குரல்கள்



நடு நிசியில்
நான்கு  குரல்கள்
மாறி மாறி ஒலித்தன.

கோயில்தான் முதலில்
குரலெழுப்  பியது.

இன்று என்னிடம் ஒரு
எம்.பி வந்தான்
எனக்கு இன்னும் நிறையப்
பதவிகள் வேண்டும்,
ஏராளமாகச்
செல்வங்கள் வேண்டும் என
இறைவனைக் கேட்டான்.

தேவாலயம் 
திருப்பிச் சொன்னது.

இங்கும் அந்த
எம்.பி வந்தான்.
எனக்கு இன்னும் நிறையப்
பதவிகள் வேண்டும்.
ஏராளமாகச் செல்வம்
வேண்டும் என
ஏசுவைக் கேட்டான்.

மசூதி விழித்து 
மறுமொழி சொன்னது
இங்கும் அந்த
எம்.பி வந்தான்.
எனக்கு இன்னும் நிறையப்
பதவிகள் வேண்டும்.
ஏராளமாகச் செல்வம்
வேண்டும் என
அல்லாவைக் கேட்டான்.

அப்படியா என்று
அதிர்ந்து போய்
படுத்துக் கிடந்த
பாராளு மன்றம்
பதில் குரல் தந்தது.

இங்கும் அந்த
எம்.பி வந்தான்.
என்னை அனுப்பிய
சனங்கள் யார்க்கும்
ஏதும் வேண்டுமென
இதுவரை வாயைத் 
திறக்கவேயில்லை.

புத்தகத் திருவிழாவில் தோழர் கந்தர்வன் கவிதைத் தொகுப்பு நூல் வாங்கியிருந்தேன். அந்த நூலை சும்மா புரட்டிக் கொண்டிருந்த போது கண்ணில் பட்ட இந்த அற்புதமான கவிதை, இன்றும் பொருத்தமாய் உள்ளது. தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகியுள்ள 172 கோடீஸ்வர எம்.எல்.ஏ க்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம் 

1 comment:

  1. மற்றவர் கவிதையை மாற்றக்கூடாது. முயன்றுள்ளேன். எழுதிய கவிதை நாட்டு நடப்பைச் சரியாகச் சொல்கிறது.
    "இங்கும் அந்த
    எம்.பி வந்தான்.
    என்னை அனுப்பிய
    சனங்கள் யார்க்கும்
    ஏதும் வேண்டுமென
    இதுவரை வாயைத்
    திறக்கவேயில்லை."

    இதைக் கீழ்க்காணுமாறு மாற்றியுள்ளேன்.

    இங்கும் அந்த
    எம்.பி வந்தான்.
    செலவு அதிகம் என்று
    சம்பளத்தை அதிகரித்துக்கொண்டான்.
    தன்னை அனுப்பிய
    சனங்கள் யார்க்கும்
    ஏதும் வேண்டுமென
    இதுவரை வாயைத்
    திறக்கவேயில்லை."

    உங்கள் தலைப்பைப் பார்த்தபின்புதான் ஒன்று தெரிந்தது. காசு (சொத்து) என்பதால் கம்யூனிஸ்டுகள் எம்.எல்.ஏவாகத் தேர்வுபெறவில்லையோ?

    ReplyDelete