Wednesday, June 22, 2016

அனைத்துமே அன்னியருக்கென்றால் ஆட்சிக்கு மட்டும் நீர் எதற்கு?

மதிப்பு மிக்க இந்தியப் பிரதமர் மோடி அவர்களுக்கு,

வணக்கம். ஒரு இந்தியப் பிரஜையின் கடிதம் இது. ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுக்கு நினைவு படுத்தவே இக்கடிதம்.

“நினைவு படுத்த” என்று சொன்னதும் உங்கள் தேர்தல் கால வாக்குறுதியான கறுப்புப்பணக் கைப்பற்றல் பற்றியோ ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில் பதினைந்து லட்சம் வரவு வைப்பதைப் பற்றியோ நினைவு படுத்தப் போகிறேன் என்று பதற வேண்டாம். அது “சும்மா” சொன்னது என்று உங்கள் கட்சியின் தலைவர் அமித் ஷா சொன்ன பிறகும் அது வரும் என்ற மூட நம்பிக்கையெல்லாம் எங்களுக்கு இல்லை.

தாங்கள் இந்திய நாட்டின் பிரதமராகத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உங்களுக்கு நினைவு படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. எப்போதோ ஒரு முறை வந்து போகும் விருந்தினர் போல தாங்கள் இந்தியாவிற்கு வருகை தருவதால் மறந்து விட்டீர்கள் போல.

எங்கள் மாநிலத்தில் “நாங்கள் சொல்வதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்” என்றொரு பிரபலமான ஒரு வசனம் உண்டு. அரசியலிலும் திரைப்படங்களிலும் பலரும் இந்த வசனத்தைப் பேசியுள்ளார்கள். “சொல்வதைச் செய்வோம்” என்பது உங்களுக்குக் கொஞ்சமும் பொருந்தாத ஒன்று. ஆயிரம் பொய் சொல்லியாவது கல்யாணம் செய் என்பது போல ஆயிரமாயிரம் பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவரல்லவா நீங்கள்!

ஆனால் சொல்லாததை செய்து கொண்டிருப்பதுதான் சிக்கலாக உள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் கதவுகளை ஏற்கனவே பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அகலத் திறந்து வைத்துள்ளீர்கள். கதவை திறந்து வைத்தால் காற்றுக்குப் பதிலாக குப்பைகளும் வீதிகளில் திரிகிறதுகளும் வரும் என்பது மட்டும் உங்களுக்கு தெரியாததல்ல.

இப்போது நீங்கள் எடுத்துள்ள முடிவு கதவுகளை முற்றிலுமாக தகர்க்கிற வேலைதான். விமானப் போக்குவரத்து, ரயில்வே, தொலை தொடர்பு மற்றும் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஆகியவற்றில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்புகளை முற்றிலுமாக தகர்த்தியுள்ளீர்கள்.

தொலை தொடர்பு, பாதுகாப்பு, ரயில்வே ஆகிய கேந்திரமான துறைகளில் அன்னியக் கம்பெனிகளின் ஆதிக்கம் அதிகரித்தால் அது தேசத்தின் பாதுகாப்பிற்கே ஊறு விளைவிக்கும் என்பது உங்களுக்குப் புரியாதா என்ன? இந்திய விமானத் துறையில் தனியார் கம்பெனிகளை அனுமதித்தார்கள். டெக்கானும் கிங்பிஷரும் காணாமல் போனது. ஜெட் ஏர்லைன்ஸும் இன்ன பிற கம்பெனிகளும் தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவர்கள் உள்ளே நுழைவதற்காக என்ன செய்தார்கள். இந்தியன் ஏர்லைன்ஸையும் ஏர் இந்தியாவையும் சீரழித்தார்கள். பிறகு இரண்டும் ஒன்றானது. ஆனாலும் இன்னமும் நிமிர முடியவில்லை. இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் தனியார் விமான நிறுவனங்கள் கூட தாங்கள் பயன்படுத்திய எரிபொருளுக்கான பெருத்த தொகையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்தாமல் ஏய்த்து வருகின்றன. உங்கள் அரசு வெறுமனே வேடிக்கை பார்த்து வருகிறது. அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்றி எங்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளத்தான் உங்களால் முடிகிறது.

தொலைதொடர்புத்துறையில் தனியாரின் அனுமதி வரலாறு காணாத பிரம்மாண்டமான ஊழலுக்கு இட்டுச் சென்றது. அ.ராசாவைப் பற்றி பேசுகிற முதலாளித்துவ ஊடகங்கள் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் பற்றி வாய் திறப்பதில்லை. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வளர்ச்சியை உங்கள் அரசே திட்டமிட்டு தடுக்கிறது. அதற்கு வர வேண்டிய பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை வராமல் தடுப்பது யார்?

ரயில்வேயில் அன்னிய முதலீடு அத்துறையை எங்கே கொண்டு போகும் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது. இப்போதே கட்டணங்கள் சமாளிக்க முடியவில்லை. முன்பதிவை ரத்து செய்வதை விட அப்படியே விட்டு விடுவது மேல் என்ற மன நிலைக்கு கொண்டு வந்து விட்டீர்கள்.

இடதுசாரிகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்த நேரத்தில் அவர்களின் நிர்ப்பந்தத்தால் பேடண்ட் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட மாறுதல்கள், உயிர் காக்கும் மருந்துகளின் விலைகளை குறைக்கவும் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவியது. அதையெல்லாம் தளர்த்தி மருந்து விலைகளை அதிகரிக்க வைத்தீர்கள். இப்போது மருந்து உற்பத்தித் துறையில் நூறு சதவிகித அன்னிய மூலதனத்திற்கு அனுமதி கொடுத்து இந்திய நோயாளிகளை மரணக்குழிக்குள் தள்ளுகிறீர்கள். உங்கள் பாரம்பரியக் கொலைத் தொழிலை வேறு வடிவில் தொடர்கிறீர்கள்.
ஆட்டை வெட்டி பலி கொடுப்பதற்கு முன்பு குளிப்பாட்டி மஞ்சள் பூசி அலங்காரம் செய்வது போல அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறுபது முறை கை தட்டி காயலான் கடை அணு உலைகளை உங்கள் தலையில் கட்டி விட்டார்கள். பாதுகாப்பு உடன்பாடு என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளை அமெரிக்காவின் கூலிப்படையாக மாற்றவும் கையெழுத்து இட்டுள்ளீர்கள்.

“உப்பிட்டவரை உள்ளவரை நினை” என்ற வாசகத்திற்கேற்ப நீங்கள் அடிக்கடி அமெரிக்க உணவை சாப்பிடுவதால் அந்த நாட்டிற்கு விசுவாசமாக இருக்கிறீர்கள் போலும். ஆனால் உங்களை தேவதூதன் என்று நம்பி ஏமாந்த மக்களையும் நினைத்துப் பார்ப்பதில் தவறில்லையே.

அனைத்து துறைகளிலும் அன்னிய மூலதனம்தான் கோலோச்ச வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அதனால் இந்தியப் பொருளாதாரம் தொழில், வேலை வாய்ப்பு, வளர்ச்சி எல்லாம் எப்படி பாதிக்கப்படும் என்பது பற்றியெல்லாம் அக்கறை இல்லாமல் உள்ளீர்கள். அனைத்திலும் அன்னியர்தான் வேண்டுமென்றால் அரியணையில் மட்டும் நீங்கள் ஏன் அமர வேண்டும்? அதையும் அமெரிக்காவிற்கே தாரை வார்க்க வேண்டியதுதானே?

சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த பாரம்பரியத்தின் தொடர்ச்சி அல்லவா நீங்கள்? அதனால் சுதந்திரம், ஜனநாயகம், இறையாண்மை ஆகியவையெல்லாம்  உங்கள் கட்சியின் அகராதியிலேயே இருக்காது.

உங்களின் மாயாஜாலங்களைப் பற்றி பெரும்பாலான மக்கள் புரிந்து கொண்டு விட்டனர். தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று இன்னமும் பிடிவாதம் பிடிக்கும் சொற்பமானவர்கள் கூட விரைவிலேயே புரிந்து கொள்வார்கள். அப்போது உங்களின் எந்த வாய்ச் சவடாலும் எடுபடாது.

அதன் பின்பு நீங்கள் நிரந்தரமாகவே அமெரிக்காவில் குடியிருக்கலாம். ஆனால் ஆட்சியில் இல்லாத உங்களுக்கு அமெரிக்கா விசா கொடுக்குமா என்பது சந்தேகமே!

எந்நாளும் நீங்கள் திருந்த வாய்ப்பில்லை
என்பதில் உறுதியாக உள்ள  ஒரு இந்தியன்

1 comment:

  1. சரியான யோசனை தந்துள்ளீர்கள்.

    ReplyDelete