Monday, June 13, 2016

அவரது திருமண நாளை முன்னிட்டு . . . .

சென்னை புத்தகக் கண்காட்சியில் என்.சி.பி.ஹெச் அரங்கில் கண்ணில் பட்டதும் கொஞ்சமும் யோசிக்காமல் வாங்கிய நூல் “கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து”. எங்களது மூத்த தோழர் காஸ்யபன் அவர்கள் எழுதிய குறு நாவல் இது.

இன்று அவரது ஐம்பத்தி ஐந்தாவது திருமண நாள். இந்த சிறப்பான நாளை ஒட்டி அவரது நூலை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். தம்பதிகளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.நூல்                       : கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து.
ஆசிரியர்                  : காஸ்யபன்
வெளியீடு                 : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
                              சென்னை – 600098.
விலை                     : ரூபாய் 45.00

வரலாற்று சம்பவங்களை தழுவி அதிலே புனைவும் குழைத்து எழுதப் பட்ட நாவல் இது. நக்ஸலைட் என்ற பெயரில் இயங்கும் ஐந்து பேர் கொண்ட ஒரு சிறு குழுவுக்கும் நேர்மையான காவல்துறை அதிகாரி வரதராஜுலுவிற்க்கும் இடையேயான போராட்டம் இக்கதை. வாரங்கலில் வேதியியல் படித்த வரதராஜுலுவின் மகன் கோபி அங்கே இருந்த புரட்சி மாணவர் சங்கத்துடனான மோதலில் அடிபட்டு மன நலம் பாதிக்கப்பட்டு ஐந்து வயது குழந்தை போல அவன் நினைவுகளும் செயல்களும் மாறி விடுகிறது.

வரதராஜூலுவின் தந்தை தேவராஜூலுவும் காவல்துறையில் ஏட்டாக பிரிட்டிஷ் காலத்தில் இருந்தவர். ஒரு அப்பாவியை அநியாயமாக தண்டிப்பதை விரும்பாமல் அவரை அழைத்துக் கொண்டு தப்பிக்கிற தேவராஜூலு ஆந்திரா சென்று கம்யூனிஸ்டாக மாறி தெலுங்கானா போராட்டத்தில் பங்கேற்கிறார். அவரோடு தப்பிக்கிற அப்பாவியான சுந்தரமும் கம்யூனிஸ்டாக மாறினாலும் வெளி உலகிற்கு கோவில் வேலை செய்பவராக காட்சியளிப்பார்.

இந்த ஃபிளாஷ்பேக் மூலமாக  தெலுங்கானாவில் அன்று நிலவிய நிலைமை, நில உடமையாளர்களின் அராஜகம், ஆயுதமேந்திய போராட்டம், அதன் தளபதிகளில் ஒருவரான தோழர் பி.சுந்தரய்யா பற்றியெல்லாம் ஒரு தெளிவான சித்திரத்தை நம் கண் முன்னே தோழர் காஸ்யபன் கொண்டு வந்து நிறுத்துகிறார்,

வரதராஜூலுவின் வீட்டிலிருந்து ஒரு பொக்கிஷத்தை கடத்தப் போவதாக அந்த குழு அறிவிக்கிறது. அதே போல வரதராஜூலுவோடு பணி புரிகிற இன்னொரு நேர்மையான காவல்துறை அதிகாரி ரகுவின் மனைவி பேருந்தில் செல்கிற போது ஒரு தகவல் கிடைத்து பாதியில் இறங்குகிறார். அதனால் தீவிரவாதிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கிறார். காவல் துறையில் ஏதோ ஓட்டை இருக்கிறதோ என்ற சந்தேகம் அந்த அதிகாரிக்கு வருகிறது. கோபியும் கடத்தப்படுகிறான்.

அப்படி கடத்தப்பட்டது என்ன?
ரகுவின் மனைவிக்கு தகவல் கொடுத்தது யார்?
கடத்தப்பட்ட கோபிக்கு என்ன ஆனது?
ஐவர் குழுவின் நோக்கங்கள் என்ன ஆனது?

ஒரு துப்பறியும் நாவல் போல பல முடிச்சுக்கள் போடப்பட்டு மனதை உருக வைக்கும் முடிவோடு அவை நேர்த்தியாக அவிழ்க்கப்படுகிறது.

தெலுங்கானா ஆயுதமேந்திய போராட்டத்தின்போது இருந்த லட்சியம் இப்போது காணாமல் போய் வெறும் தனி நபர் சாகஸம், தனி நபர் அழித்தொழிப்பு என்று தவறான பாதையில் சில இளைஞர்கள் செல்வது குறித்த ஆதங்கமே இந்நூலின் நோக்கம் என்று சொல்லலாம். ஆயுத வியாபாரிகளையும் அம்பலப்படுத்துகிறது இந்நூல்.

தோழர் காஸ்யபன் தனது அனுபவத்தின் மூலம் ஒரே மூச்சில் படிக்க வைக்கிறார். அவ்வளவு வேகமாகவும் விறுவிறுப்பாகவும் செல்லும், சில திருப்பங்களை நம்மால் யூகிக்க முடியும் என்றாலும். இக்கதையில் வருவது போல நிஜத்திலும் எல்லா காவல்துறை அதிகாரிகளும் நேர்மையாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

1 comment:

  1. நன்றி தோழா ! புரிந்து கொண்ட -புரியவைக்கும்-விமரிசனம் ! சபாஷ் தோழா !---காஸ்யபன்.

    ReplyDelete