Thursday, June 16, 2016

என்ன மனுஷன் சார் இவரு !!!!!

இந்த தலைப்பு ஓர் ஆச்சர்யத்தின் வெளிப்பாடு!

ஒரு ரசனையான மனிதனின் பல பரிமாணங்களை கண்டு வியந்து போனதின் விளைவு.

ஆமாம் இன்றைய பொழுது முழுதையும் என்னை ஆக்கிரமித்த ஒரு நூல் ஏற்படுத்திய பிரமிப்பு.

காலையில் சென்னை புறப்பட்டு கொஞ்ச நேரம் முன்புதான் வந்து சேர்ந்தேன். இடையில் இரண்டு மணி நேரம் காரிலேயே காத்திருப்பு. ஆனால் ஒரு நிமிடம் கூட அலுப்பு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொண்டது 

"புள்ளிகள், கோடுகள், கோலங்கள்"

இப்போது புரிந்து கொண்டிருப்பீர்களே,

ஆம் திரு பாரதி மணி அவர்கள் எழுதிய நூல்தான்.



சில வாரங்கள் முன்புதான் முகநூலில் அவருடைய நண்பர்கள் பட்டியலில் இணையும் வாய்ப்பு கிட்டியது. அதுவே இந்த நூலை சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்குவதற்கான தூண்டுதலாகவும் இருந்தது. 

ஒரு கலா ரசிகனாக, நாடக நடிகராக, அரசாங்க நெளிவு சுளிவுகளை கற்றறிந்த தொழில் நிறுவன நிர்வாகியாக, பல்வேறு ஆளுமைகளின் நெருங்கிய நண்பராக, திரைப்பட நடிகராக, தேர்ந்த சமையல் நிபுணராக பல முகம் காண்பிக்கிறார் திரு பாரதி மணி. 

ஐந்நூற்றி அறுபது பக்க நூலைப் பற்றி ஓரிரு பக்கத்துக்குள் அடக்குவது என்பது சாத்தியமில்லை. அதனால் அந்த முயற்சியில் நான் இறங்கவில்லை. 

நூல் முழுதும் இழையோடுகிற நகைச்சுவை இந்த நூலின் மிகப் பெரிய பலம். 

எதையும் மறைக்காமல் (தனது அளவான அதே நேரம் மிகுந்த ரசனையான மதுப் பழக்கம் உட்பட. சிவாஜி, ஜெமினி பற்றிய தகவல்களும் உண்டு) எழுதியுள்ள நேர்மை இன்னொரு பலம். 

ஜவஹர்லால் நேரு தொடங்கி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பேன்ட்ரி  கார் மேனேஜர் வரை பரிச்சயம்  உள்ளவர். வங்க தேச பிரதமராக பின்னால் பொறுப்பேற்ற ஹசீனா டெல்லியில் இருந்த காலத்தில்  அவருக்கு வங்க தேசத்து பத்மா நதியில் கிடைக்கும் "ஹீல்சா மீன்" கிடைக்கவும் செய்துள்ளார். டெல்லி நிகம்போத்காட் சுடுகாட்டில் பலருடைய தகனத்திற்கும் தூணாய் நின்றுள்ளார்.

ஆணவம் மிக்க அரசியல்வாதியாக இதுநாள் வரை நாம் அறிந்திருக்கிற ராஜீவ் காந்தியை டெல்லி விமான நிலையத்தில் அவரது அன்னை ஆட்சியை பறி கொடுத்திருந்த காலத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் சோதனை செய்து படுத்திய போதும் அவர் பொறுமையாக இருந்தார் என்பது புதிய செய்தி.

அரசு வேலையை விட்டுவிட்டு தனது கம்பெனிக்கு வந்து சேருமாறு பிர்லா அழைக்கிற போது இரண்டு மடங்கு சம்பளமும் பழைய வேலைக்கான நோட்டீஸ் பீரியட் சம்பளத்தையும் கேட்கிற துணிவு எனக்கு பிடித்திருந்தது. அவரது கோரிக்கையை பிர்லா ஏற்கிறார்.

அது போல எல்லா முதலாளிகளும் எல்லா தொழிலாளர்களிடமும் நடந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

இந்த நூலில் அவர் எழுதியதை விட எழுதாமல் விட்டதுதான் அதிகம். 

அது போல இந்த நூல் பற்றி நான் எழுதாததுதான் அதிகம்.

தயங்காமல் இந்த நூலை வாங்கலாம். சுவாரஸ்யத்திற்கு நான் கியாரண்டி.

நீங்களும் சொல்வீர்கள்,

என்ன ரசனையான மனுஷன் சார் இவரு !!!!

5 comments:

  1. நன்றி....திரு. ராமன். உங்கள் ப்ளாகை தொடர்ந்து படித்துவருபவன்.
    we belong to 'Mutual Admiration Society' !!

    ReplyDelete
  2. ராமன் அவர்களே ! அடுத்த தடவை சென்ன வந்தா - அதுக்கு நெ வாரும்- பாட்டையா வீட்டுக்கு போய் a class காஃபி,சிடை,முருக்கு,நு சாப்பிட்டு வாரும்.---காஸ்யபன்

    ReplyDelete
  3. படிக்கத் தூண்டுகிறது ... அருமை https://ethilumpudhumai.blogspot.in/

    ReplyDelete
  4. சுவையான விமர்சனம்! நூலின் விலை கிடைக்குமிடத்தையும் தெரிவித்து இருக்கலாமே!

    ReplyDelete
  5. நூலை வாங்கத் தூண்டும் அறிமுகம்

    ReplyDelete