Friday, March 18, 2016

தேர்தல் - சாதாரண அவஸ்தையா அது?

 

 

மைக்ரோ அப்சர்வர்கள் பட்ட அவஸ்தைகள்

நேற்றைய பதிவின் தொடர்ச்சி 

மாலை நான்கு மணிக்கு  புதிய ஆணைகள்  தருகிறோம், நிறுவனத்திற்கு ஒருவர் வந்து வாங்கிக் கொள்ளுங்கள்  என்று  சொன்னார்கள். எங்கள் 
அலுவலகத்தில்  ஒருவரை நேர்ந்து விட்டோம். தான் ஒரு பலியாடு 
என்று புரியாமல் அவரும் அப்பாவியாய் ஒப்புக்கொண்டார். நான்கு மணிக்கு சென்ற அவரை எட்டு மணி வரை காத்திருக்க வைத்து பிறகு 
அனைவருக்குமான ஆணைகளை கொடுத்தார்களாம். காலை நடந்த 
கூட்டத்தில்  டீ அல்ல தண்ணீர் கூட கொடுக்காமல்  அனுப்பி வைத்தார்கள்.  எட்டு மணி வரை காத்திருந்தவர்களுக்கும் அதே கதிதான். எங்களை கண்காணிக்கவா வரப்போகின்றீர்கள், சோறு, தண்ணீர் இல்லாமல்   உங்களுக்கெல்லாம்  இருக்குடா பிரச்சினை என்று சொல்லாமல்  சொல்லியுள்ளார்கள்.  அது எங்களுக்குத்தான் புரியவில்லை.  

ஆணைகளைப் பார்த்தால் அத்தனையும் மாறிப்போயிருந்தது.  யாருக்கும்  வேலூர் தொகுதி கிடையாது. பலருக்கு குடியாத்தம், அணைக்கட்டு, சிலருக்கு மட்டும்  காட்பாடி தொகுதி. நீ வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம் என்பது போல பார்த்தார்கள். கோட்டப் பொதுச்செயலாளரை  எப்படி திட்டுவது என்ற மரியாதையில் மௌனமாக இருந்து விட்டார்கள். 

அந்த வார ஞாயிறு அன்றே தொகுதி வாரியாக வகுப்பு. மாவட்ட ஆட்சியர் சொன்னதின் மறு ஒலிபரப்பு மட்டுமே. அடையாள அட்டை அளித்ததற்கு மேல் எதுவும் இல்லை. எங்களுக்காவது பரவாயில்லை. வேலூரில்தான் வகுப்பு, மற்றவர்கள் வெளியூருக்கு போக வேண்டியிருந்தது. மொத்தத்தில்  ஒரு ஞாயிற்றுக்கிழமை வீணானது. 

அடுத்த ஞாயிற்றுக்கிழமை அடுத்த வகுப்பு. பதினோரு மணிக்கு வரச்சொன்னார்கள்.  பனிரெண்டு மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டு விட்டது. அப்போது வாருங்கள். அப்போது போனால்  கே.வி.குப்பம் வகுப்பே முடியவில்லை.  ஒரு வழியாக ஒரு மணிக்கு துவக்கினார்கள். அந்த வகுப்பும்  மறு ஒலிபரப்புதான். பட்டினியாய் இருப்பது எப்படி என்பதற்கான  வகுப்பு என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். காட்பாடி தொகுதியில் எந்த வாக்குச்சாவடி என்பதற்கான ஆணை கொடுத்து விட்டார்கள். ஆனால் இவர்களோ அப்படி கொடுக்கவேயில்லை என்று சாதித்துக் கொண்டிருந்தார்கள். 

பனிரெண்டாம் தேதி ஒரு வழியாக வாக்குச்சாவடி எது என்பதற்கான ஆணையை கொடுத்து விட்டார்கள். பெட்டியை எடுத்துச்சென்ற பிறகு 
வாக்குப் பெட்டிகள் வைக்கும் மையத்திற்கே  வந்து அறிக்கையை அளித்து விட்டு போக வேண்டும் என்று சொன்னார்கள். உணவுக்கான 
ஏற்பாடு என்ன என்று சிலர்   கேட்ட போது கிராம நிர்வாக அதிகாரி 
பார்த்துக் கொள்வார் என்றார்கள். 

மூன்று வகுப்புக்கள் கொடுத்த நம்பிக்கையில் காலை உணவிற்கு பிரெட் டோஸ்டுகள், மதிய உணவிற்கு சப்பாத்தி, தக்காளி ஊறுகாய், இரண்டு 
தண்ணீர் பாட்டில்கள் என்ற தயாரிப்போடு போனதால் நான் தப்பித்தேன். ரொம்ப நல்லவர்களாக போனவர்கள்தான் மாட்டிக்கொண்டார்கள். கிராம நிர்வாக அதிகாரி கண்டு கொள்ளாமல் போன இடங்களில் கட்சிகளின் ஏஜெண்டுகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. உப்பிட்டவரை  உள்ளவரை நினை என்ற தமிழ்ப்பழமொழிக்கு ஏற்ப ஏஜெண்டுகளின்  தெனாவேட்டுக்கு  பதில் பேச முடியாமல் அமைதியாக 
இருக்க வேண்டிய நிலை, மைக்ரோ அப்சர்வர்களுக்கு மட்டுமல்ல 
தேர்தல் அலுவலர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. 

மற்ற விஷயங்களில் கறாராக இருந்த தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் மட்டும் கோட்டை விட்டு விட்டது. நானிருந்த வாக்குச்சாவடியிலும் அனைவருக்குமான உணவை கட்சிக்காரர்கள்தான் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதனுடைய விளைவு என்னவென்றால் மாலை நான்கு மணிக்கு மெதுவாக, ஆளுக்கு பத்து வோட்டுக்கள் போடலாமே என்று ஆரம்பித்தார்.  தேர்தல் அலுவலர்கள் அப்படியே நெளிந்தார்கள். ஒருவர் மட்டும் அப்சர்வர் சார் இருக்கார், சென்ட்ரல் கவர்ன்மென்ட் என்றார். வேண்டுமானால் போட்டுக்கொள்ளுங்கள், நான் என் அறிக்கையில் எழுதி விடுவேன், என்ன இந்த சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடக்கும் என்று சிரித்துக் கொண்டே சொன்னதிற்குப் பிறகு அப்படியே அடங்கிப் போய்விட்டது. 

ஆறே கால் மணிக்கெல்லாம் பெட்டியை எடுக்க வந்து விட்டார்கள். ஏழு மணிக்கெல்லாம் சடங்குகள் முடிந்து பெட்டிகள் லாரிக்கு போய்விட்டது. தேர்தல் அலுவலர்களுக்கேல்லாம் சுடசுட அங்கேயே பணம் கொடுத்து விட்டு பை பை என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். உங்களுக்கெல்லாம்  கொடுக்கச்சொல்லி எங்களுக்கு உத்தரவு இல்லை 
என்று சொல்லி லாரியை கிளப்பிக் கொண்டு பெட்டியோடு போயி விட்டார்கள். 

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு நான் வரும்போது  ஏழரை மணி. மைக்ரோ அப்சர்வர் அறிக்கையை வாங்க யாரும் தயாராக இல்லை. தொகுதி தேர்தல் அதிகாரிக்கு தொலைபேசி செய்ய அவருக்கு கீழே பணியாற்றும் யாருக்கும் தைரியமில்லை. நான் தொலைபேசி செய்த போது பதினைந்து நிமிடங்களில் வந்து விடுவேன். காத்திருங்கள் என்றார். சரியாக எட்டரை மணிக்கு வந்து சேர்ந்தார். Indian Punctuality.
இதற்குள்ளாக பல மைக்ரோ அப்சர்வர்களும் அங்கே வந்து சேர்ந்திருந்தார்கள். 

தேர்தலுக்கு முன்பாக இவர்கள் அறிக்கைக்கான படிவம் எதுவும் அளிக்கவில்லை. கொடுத்த ஒரு புத்தகத்தில் மாதிரி படிவம் ஒன்று 
இருந்தது. அதை நாங்கள் தட்டச்சு செய்து படிவம் தயார் செய்து அதிலே 
அறிக்கை தயார் செய்திருந்தோம். தேர்தல் அதிகாரி அந்த சமயத்தில் ஒரு படிவம் தயார் செய்து அதை நிரப்புங்கள் என்று சொன்னார். வாங்கிப் பார்த்தால் அதே கேள்விகள்தான். படிவத்தின் வடிவம் மட்டும்தான் வேறு. இதிலே எழுதிக் கொடுங்கள் என்ற போது   எங்களுக்கு வேறு பிழைப்பில்லையா என்று   நாம் கோபமாக மறுத்து விட்டேன்.

எங்களுக்கு எப்போது பணம் தருவீர்கள்  என்று எல்லோரும் கேட்டார்கள். எனக்கு எதுவும் தெரியாது என்று கைவிரித்ததும்  பலரும் பொங்கி எழுந்து விட்டார்கள். ஏப்ரல் முதல் தேதி முதல் பட்ட அவஸ்தை அப்படியே வெடித்தது. தினசரி லட்சக்கணக்கான ரூபாயோடு புழ்ல்கிற வங்கி ஊழியர்களை என்ன பிச்சைக்காரர் என்று நினைக்கிறாயா என ஒருவர் கேட்க,  நீங்க வங்கி ஊழியருனா ரொம்ப ஒசத்தியா என்று மாநில அரசு ஊழியர் சண்டைக்கு வர இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல தொகுதி தேர்தல் அதிகாரி ஏதேதோ தாள்களில் முகத்தை புதைத்துக் கொண்டிருந்தார்.  

மைக்ரோ அப்சர்வர் போட வேண்டும் என்று மத்திய தேர்தல் ஆணையம்தானே சொன்னது, அவர்களே பணம் தருவார்கள் என்று ஒருவர் நக்கல் செய்ய, நிலைமை மேலும் சூடானது. அதன் பின்பு எங்கெங்கோ  தேர்தல் அதிகாரி யார் யாருக்கோ போன் செய்தார். அது என்னவோ தெரியல, யாருமே போன எடுக்கல. பணம் குடுக்க எங்களுக்கு  அதிகாரம் இல்லை, தாலுகா அலுவலகத்திற்குத்தான் உண்டு என்று சொல்லி சமாதானம் செய்யப்பார்த்தார். தாசில்தாரே அங்கே வர அவர் யாருக்கோ போன் போட்டு உடனே பணத்தோடு வா என்று உத்தரவிட்டார். இன்னும் ஐந்து நிமிடங்கள் காத்திருங்கள் என்றார். தேர்தல் அலுவலர்களுக்கு மட்டும் வாக்குச்சாவடியிலேயே பணம் தர முடிந்த நீங்கள் மைக்ரோ அப்சர்வர்களை மட்டும் ஏன் அலைக்கழிக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவே இல்லை.

அரை மணி நேரம் ஆனா போதும் யாரும் வரவில்லை. இதற்கு மேலும் காத்திருப்பது வீண் என்று கருதி, ஒன்பதரை மணிக்கு புறப்பட்டேன். இரண்டு நாட்கள் கழித்து தாலுகா அலுவலகத்திற்குப் போய் பணம் வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். போனவுடன் கொடுத்து விட்டார்கள். 

வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து புறப்படும் முன்பாக தேர்தல் 
அதிகாரியிடம் கீழ் வருமாறு கூறினேன். 

" வாக்குப்பதிவிற்கும்  எங்களைக் கூப்பிடுவீங்க இல்ல, கலெக்டர் கூட்டம் நடத்துவார் இல்ல, அன்னிக்கு வச்சுக்கிறோம் எங்க கச்சேரிய" 

ஆம் கச்சேரி காத்திருக்கின்றது. 
 
பின் குறிப்பு : வாக்கு எண்ணிக்கைக்கு எல்.ஐ.சி  ஊழியர்கள் யாரையும் அழைக்கவில்லை. ஆகவே கச்சேரி நிகழ்த்தும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

1 comment:

  1. ஒவ்வொரு தேர்தல் பணியும் மறக்க முடியாததுதான் நண்பரே

    ReplyDelete