Tuesday, March 15, 2016

நியாயங்கள் மாறும் உலகம் இது

ஒரே நேரத்தில் இரண்டு செய்திகளை நாளிதழ்களில் படித்திருப்பீர்கள், தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். 

பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடனை பல ஆண்டுகளாக செலுத்தாமல் ஏமாற்றி வருகிற மதுபான வியாபாரி விஜய் மல்லய்யா, வெளி நாட்டிற்கு பறந்து சென்றது ஒரு செய்தி என்றால் முறையாக தவணை செலுத்தியும் பாலன் என்ற விவசாயியின் ட்ராக்டரை பறிமுதல் செய்து காவல்துறையால் அடிக்க வைத்த கோடக் மஹேந்திரா என்ற தனியார் வங்கியின் அடாவடி இன்னொரு செய்தி. பாலனுக்கு நிகழ்ந்த கொடுமையின் வலி குறைவதற்கு முன்பே  அரியலூர் மாவட்டத்தில் அழகர் என்ற விவசாயியை நடுரோட்டில் அடித்து உதைத்து அவருடைய ட்ராக்டரை பறிமுதல் செய்தார்கள் சோழமண்டலம் என்ற தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். அந்த அவமானம் தாங்க முடியாமல் அழகர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார்.

பாஜக கட்சியின் அமோக ஆதரவோடு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ள விஜய் மல்லய்யாவின் கிங்பிஷர் விமான நிறுவனம் நஷ்டமடைந்து அது செலுத்த வேண்டிய கடன் தொகை பல்லாயிரம் கோடி ரூபாய்களாக இருந்தாலும் அவரது மதுபான கம்பெனிகள் தொடர்ந்து லாபத்தில்தான் செயல்பட்டு வந்தன. வங்கிகளுக்கு அவர் செலுத்த வேண்டிய கடனைக் கட்டாமல் ஐ,பி.எல் கிரிக்கெட் அணிக்காக, ஆடம்பரமான ஊதாரிச் செலவுகளுக்காக, பல கோயில்களில் தங்கக் கதவு, தங்கக் கூரை, தங்கத்தில் படிக்கட்டுக்கள் என்று அவர் பல கோடி ரூபாய்கள் செலவழித்துக் கொண்டுதான் இருந்தார்.

அவருடைய யுனைட்டெட் ப்ரவரிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியை விட்டுத் தருவதற்காக அவருக்கு வரவுள்ள கோடிக்கணக்கான ரூபாயை தங்களின் கடன் தொகையை திருப்பிக் கட்டுவதற்காக பயன்படுத்த வேண்டும் என்று வங்கிகள் வழக்கு தொடுத்தபோதுதான் விஜய் மல்லய்யா இந்தியாவை விட்டு வெளியேறி விட்டார் என்பதே தெரிய வந்தது.

குற்றவாளிகளை தப்ப விடுவதே மத்திய அரசுகளின் பாரம்பரியமாகி விட்டது. போபோர்ஸ் வழக்கில் தொடர்புடைய க்வொட்ரோஷி, யூனியன் கார்பைட் வாரன் ஆண்டர்ஸன் ஆகியோரை தப்ப விட்ட பெருமை நரசிம்மராவ், ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிகளுக்கு உண்டென்றால் லலித் மோடி மற்றும் விஜய் மல்லய்யா ஆகியோரை தப்ப வைத்த பெருமை மோடி அரசுடையது. முதலாளிகளை பாதுகாப்பதில் இரு கட்சிகளும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.

வங்கிகளிடமிருந்து கோடிக்கணக்கில் கடன் வாங்கி செலுத்தாமல் ஏமாற்றி வருகிற செல்வந்தர்கள் யார் என்ற பட்டியலை வெளியிடுவதே தவறு என்றும் அது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை (!) பாதிக்கும் என்று சாதிக்கிற அரசுகள்தான்  சொற்பத் தொகை வாங்கிய சாதாரண மனிதர்களின் புகைப்படத்தோடு நாளிதழ்களில் செய்தி வெளியிட்டு அவர்களை இழிவு படுத்தி தற்கொலைக்குத் தூண்டுகிறது.

விஜய் மல்லய்யாக்கள் கொஞ்சமும் கூச்சமில்லாமல் விமானம் ஏறி தப்பித்துச் செல்ல அனுமதிக்கிற நமது சமுதாய அமைப்பில்தான் சாதாரண விவசாயிகளான பாலனும் அழகரும் கடுமையாக தாக்கப்படுகிறார்கள். தற்கொலையை நோக்கி தள்ளப்படுகிறார்கள். பெரு முதலாளிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுமாறு நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டு பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தில் இயங்குகிறது என்று புலம்பி அவற்றின் பங்குகளை விற்கவும் சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.

முதலாளித்துவ சமுதாய அமைப்பு நீடிக்கிறவரை நியாயங்களும் சட்டங்களும் முதலாளிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் மாறு படுகிற அவலமும் நீடிக்கும். இந்த அமைப்பை மாற்றியமைக்கிற பணி நமக்கும் உள்ளது என்பதை புரிந்து கொண்டு நாம் செயலாற்ற வேண்டும்.

(எங்கள் கோட்டச்சங்க இதழான சங்கச்சுடருக்காக எழுதியது)

No comments:

Post a Comment