Thursday, March 10, 2016

புத்திர பாக்கியம் – என்ன சொல்லுது ஜாதகம்?

06.03.2016 தேதியிட்ட தீக்கதிர் ஞாயிறு இணைப்பிதழான வண்ணக்கதிரில் பிரசுரமான எனது சிறுகதை “புத்திர பாக்கியம்” கீழே உள்ளது. ஓவியம் தோழர் ஸ்ரீரசா. சிறுகதை பற்றிய உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.

புத்திர பாக்கியம்
வேலூர் சுரா

அந்த திருமண அழைப்பிதழ்க் கடைக்குள் புழுக்கம் அதிகமாக இருந்தால் கொஞ்ச நேரம் காற்று வாங்கலாம் என்று வெளியே வந்தேன். மகளுக்கு இன்னும் மூன்று மாதம் கழித்து திருமணம். காண்ட்ராக்ட் முறை வந்த பின்பு பெரிய வேலைகள் இல்லையென்றாலும் அழைப்பிதழ் தயார் செய்வது, துணிமணிகள், நகைகள் வாங்குவது போன்ற வேலைகள் உள்ளதே! அழைப்பிதழ் வேலையை முடித்து விடுவோம் என்று வந்தால் மகளும் மகனும் மனைவியும் ஒரு மணி நேரமாக அழைப்பிதழ் அட்டையை தேர்வு செய்து கொண்டே இருக்கிறார்கள். சரி இது இப்போதைக்கு முடியப் போவதில்லை என்று நினைத்துக் கொண்டே  நீங்கள் தேர்வு செய்ததும் எனக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள் என்று சொல்லி விட்டு காரில் வந்து அமர்ந்து ஏசியைப் போட்டு விட்டு ஏதேனும் மின்னஞ்சல் வந்துள்ளதா என்று பார்ப்போம் என கைப்பேசியை உயிர்ப்பித்தேன். அரை மணி நேரம் கடந்தும் அழைப்பில்லாத காரணத்தால் மீண்டும் கடைக்குச் செல்லும் போதுதான் கூட்ட நெரிசலில் அந்த நபர் மீது இடித்துக் கொண்டேன்.

“ஹேய், நீ சுந்தர்தானே”

என்று அவர் என்னைக் கேட்க

நான் அவர் முகத்தை தலை நிமிர்ந்து பார்த்தேன். ஹரிஹரன். ஒரு காலத்தில் என் நண்பனாய் இருந்தவன். அவனைப் பார்த்த போதே பழைய நினைவுகளும் சேர்ந்தே வந்தது. மனதிற்குள் சட்டென்று ஒரு எரிச்சல் வந்தாலும் அதைக் காண்பித்துக் கொள்ளாமல்

“ஹரி, எப்படி இருக்க?” என்றேன்.

“நான் நல்லாதான் இருக்கேன். பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு” என்றான்.

“ஆமாம். என் கல்யாண நிச்சயதார்த்தம் நடந்த மறுநாள் பார்த்தது” என்றேன்.

அவன் முகம் மாறியது. அன்று எங்களுக்குள் நடந்த சண்டையை மறக்க முடியுமா என்ன?

எனது திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். நண்பர்கள் யாரையும் நான் அவ்வளவாக அழைக்கவில்லை. ஹரி பள்ளிக் காலத்திலிருந்தே என் நண்பன் என்பதால் அவனை மட்டும் அழைத்துச் சென்றிருந்தேன். மண மகளை அழைத்து வரும் போதே அவன் முகம் மாறியதை நான் கவனித்திருந்தாலும் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.

மறு நாள் காலை ஏழு மணிக்கு நான் காபி குடிக்கும் போதே வீட்டிற்கு வந்து விட்டான்.

“உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் தனியா பேசனும். மொட்டை மாடிக்கு வா”  என்று அழைத்துச் சென்றான்.

“என்னடா, அப்படியென்ன தலை போகிற அவசரம்? காலங்காத்தாலயே வந்துட்ட?”

“முதல்ல நீ இந்த கல்யாணத்தை நிறுத்து. உனக்கு இந்த பொண்ணு வேண்டாம்”

“எதுக்காக? என்ன காரணம்? நல்ல பொண்ணுனு விசாரிச்சு தெரிஞ்சதக்கு அப்பறமாதான் முடிவு பண்ணோம். நீ என்ன திடீர்னு வேணாம்னு சொல்ற”

“பொண்ணு நல்ல பொண்ணுதான். நல்ல குடும்பம்தான். ஆனாலும் வேண்டாம்”

“அப்ப ஏன் வேணாம்? அதை முதல்ல சொல்லு”

“இந்த வரன் எப்படி யார் மூலமா வந்தது? ஜாதகம் பாத்தீங்களா?”

“ஏன் வேண்டாங்கறதுக்கு காரணத்தை சொல்லாம, என்னையே கேள்வி கேட்டுக்கிட்டு இருக்க”

“இந்த பொண்ணோட ஜாதகம் என் பிரபு அண்ணாவுக்கு வந்தது. இந்த பொண்ணுக்கு தோஷம் இருக்கு. புத்திர பாக்கியம் கிடையாதுனு ஆனைக்குடி ஜோசியரே சொல்லிட்டாரு. அதனால நாங்க மேற்கொண்டு பேசாம நிறுத்திட்டோம். இப்ப உன் தலைல கட்டி வைக்கப் பாக்கறாங்க”

“ஏய், அந்த ஆனைக்குடி ஜோசியர் என்ன கைனகாலஜிஸ்டா?”

“கிண்டல் செய்யாதடா. அவர் சொன்னா நூத்துக்கு நூறு பலிக்கும்”

“ஏண்டா பி.இ படிச்சவன் பேசற பேச்சாடா இது? சூரியன் பூமியை சுத்துதுங்கறதை வைச்சு கணிக்கிற ஜாதகத்தை எல்லாம் நீ நம்பலாமா?”

“தயவு செஞ்சு புரிஞ்சுக்கோடா, உன் நல்லதுக்காகவும் உன் வம்சம் தழைக்கனும்கறதுக்காகத்தான் சொல்றேன்”

“டெஸ்ட் ட்யூப் பேபி வந்த காலத்துல போய் இப்படி பேசறது முட்டாள்தனமா உனக்கு தெரியலையா?”

“நீ கேட்கலைனா பரவாயில்லை. நான் இப்பவே உங்க அம்மா கிட்ட பேசறேன்”

“அப்படி ஏதாவது செஞ்சே, உன்னை பொலி போட்டுறுவேன்.”

“இன்னிக்கு புதுசா வரப் போறவளுக்காக இத்தனை வருஷத்து நண்பனை அடிப்பேன்னு சொல்றியே, உனக்கே நியாயமா இருக்கா?

“உனக்கு அக்கா, தங்கை யாராவது இருந்திருந்தா, நிச்சயம் பண்ற கல்யாணத்தை நிறுத்தினா வர வலி என்னனு தெரியும்”

“உன் நல்லதுக்கு சொன்னா, என்னையே திட்டற. நான் சொல்றது உண்மையாகி வாரிசு இல்லாம தவிக்கிற போது என்னை தேடி வருவ”

“போடா, போடா, படிச்சவனுக்கு அழகா கொஞ்சமாவது யோசிச்சு பாரு. அப்பதான் உன் முட்டாள்தனம் தெரியும்”

அப்போது கோபமாக படியிறங்கிப் போனவனை இன்றுதான் பார்க்கிறேன். என் மனைவி முதல் முறையாக கருத்தரிக்கும் போதும் வர்ஷா, வருண் என்று குழந்தைகள் பிறந்த போதும் இவன் நினைவு வரத்தான் செய்தது. தேடிப் பிடித்து நாக்கை பிடுங்கிக் கொள்வது போல கேட்டு வரலாமா என்று கூட  யோசித்து அந்த சிந்தனையை பிறகு அலட்சியப்படுத்தி விட்டேன்.

நினைவுகள் சுருள் சுருளாய் ஓடிக் கொண்டிருந்த போது அப்பா என்று அழைத்துக் கொண்டே வருண் வெளியே வந்து விட்டான்.

ஹரியிடம் அறிமுகம் செய்து வைத்தேன். முதலில் பிறந்த மகளின் திருமணச் செய்தியையும் சொன்னேன். அடுத்ததாய் அந்த கேள்வியையும் கேட்டு விட்டேன்.

“ஆமாம் பிரபு எப்படி இருக்கான்? அவனுக்கு எத்தனை பசங்க?”

தலை குனிந்தபடியே மெல்லிய குரலில் சொன்னான்.

“கல்யாணமாகி இருபது வருஷமாகியும் குழந்தை இல்லை. ஜோசியர் சொன்ன எந்த பிராயச்சித்தமும் வேலைக்காகலை. இப்பதான் சென்னையில மெடிகல் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கறாங்க”

3 comments:

 1. One way The astrologer is correct, he may be pointed the wrong person but he pointed to correct fact.

  ReplyDelete
 2. கல்யாணமாகி இருபது வருஷமாகியும் குழந்தை இல்லை. ஜோசியர் சொன்ன எந்த பிராயச்சித்தமும் வேலைக்காகலை. இப்பதான் சென்னையில மெடிகல் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கறாங்க

  ReplyDelete
 3. அருமையான படிப்பினைக் கதை நண்பரே
  மக்கள் மூட நம்பிக்கையின் பிடியில் இருந்து இன்னும் விலகத்தான்இல்லை

  ReplyDelete