Monday, March 21, 2016

சந்திரஹாசம் – இன்னொரு பாகுபலி







தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் எழுத்திலும் ஓவியர் பால சண்முகத்தின் ஓவியங்களோடும் விகடன் பிரசுரமாக வெளி வந்துள்ள கிராபிக்ஸ் நாவல் சந்திரஹாசம் சில தினங்கள் முன்புதான் வாங்கினேன்.

பாகுபலி திரைப்படம் போல பிரம்மாண்டமாக வெளி வந்துள்ள புத்தகம் என்று சொல்வது சரியாக இருக்கும். வேறு பல காரணங்களுக்காகவும் இந்த நூலை பாகுபலியோடு ஒப்பிடுவது பொருத்தமாக உள்ளது.

மாறவர்ம பாண்டியனின் இரண்டு மகன்களான வீர பாண்டியனுக்கும் சுந்தர பாண்டியனுக்கும் இடையிலான அரியணைக்கான மோதலே சந்திரஹாசம் கதை. இலங்கை ,மீதான பாண்டியர் படையெடுப்போடு தொடங்குகிற நாவல் மதுரையை கைப்பற்ற மாலிக்காபூர் படையெடுத்து வருவதோடு முடிகிறது. அரியணை பாகுபலிக்கா இல்லை பல்வாள் தேவனுக்கா என்ற மோதல் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியவில்லை. எப்போதுமே கதாநாயகர்கள் நல்லவர்களாகவும் வில்லன் மோசமான குணம் படைத்தவனாக இருக்கிற பார்முலா சந்திரஹாசத்திலும் உள்ளது.

ஒவ்வொரு பக்கத்திலும் ஓவியங்களின் பிரம்மாண்டமும் அழகும் வண்ணங்களின் கலவையால் நம்மைக் கவருகிறது. சின்னச் சின்ன விஷயங்கள் கூட நுணுக்கமாக வரையப்பட்டுள்ளது ஓவியரின் திறமைக்குச் சான்று. ஓவியங்கள் ஆக்கிரமிப்பு மேலோங்கியபோதும் கிடைக்கிற வாய்ப்புக்களில் தோழர் சு.வெங்கடேசனின் மொழியாற்றல் ஒளிர்கிறது.  

இந்த நூலை அலைபேசி வாயிலாக தரவிறக்கம் செய்து பார்க்கலாம் என்று சொல்லி அதற்கென்று ஏதோ எண்ணெல்லாம் கொடுத்துள்ளனர். அதை இன்னும் முயற்சிக்கவில்லை. புத்தகத்திற்குள் ஒரு சினிமா என்ற விளம்பரம் சொல்கிறது. ஏதாவது பின்னணி இசையெல்லாம் இருக்குமா என்று தெரியவில்லை.

நூல் மிகவும் உயர்தரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. காகிதங்களின் வழவழப்பு, அட்டை, புக் மார்க் செய்ய கொடுக்கப்பட்டுள்ள சந்திரஹாசம் வாளின் மாதிரி என எல்லாமே அருமை. ஆனால் ஆயிரம் ரூபாய் என்பது பெரும்பாலான வாசகர்களுக்கு கட்டுப்படியாகாத விலை. கணக்கு பார்க்காமல் புத்தகங்களுக்காக செலவழிக்கிற நான் கூட கொஞ்சம் யோசித்து, வேறு ஒரு செலவில் மிச்சமான தொகை கொண்டே வாங்கினேன். இது குறித்து விகடன் நிறுவனம் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

வாங்கியாச்சு, படிச்சாச்சு, அப்புறம் எதற்கு விலை பற்றி விகடன் யோசிக்க வேண்டும் என நீங்கள் கேட்பது புரிகிறது.

இந்த நூலை பாகுபலி உடன் பல காரணங்கள் இருக்கிறது என்றும் சிலதை முன்னரே சொல்லியுள்ளேன்.

பாகுபலி படம் பார்க்கும் போது தோன்றும் பிரமிப்பு அரங்கை விட்டு வெளியே வந்து யோசித்தால் எதுவும் மனதில் நிற்கவில்லை. அழுத்தமான கதை இல்லாததால் அப்படி.  இந்த நூலும் அப்படித்தான். படிக்கும் போது ஏற்படும் பிரமிப்பு முடித்ததும் மறைந்து போகிறது, அதே காரணத்தாலேயே.

பாகுபலி போலவே சந்திரஹாசத்திலும் கதை இன்னும் முடியவில்லை. இரண்டாவது பாகம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

பாகுபலி முதல் பாகம் பார்த்தவர்களால் எப்படி இரண்டாவது பாகத்தை பார்க்காமல் இருக்க முடியாதோ, அது போலவே சந்திரஹாசம் இரண்டாவது பாகத்தையும் படிக்காமல் இருக்க முடியாது.

எனவே விகடன் நிறுவனத்தாரே, விலையைக் கொஞ்சம் குறையுங்கள்.

1 comment:

  1. இரண்டாம் பாகம் மட்டுமல்ல தோழரே, இன்னும் சில பாகங்கள் வரவுள்ளன. தெரியாதா? நீங்கள்தான் தொடர்புகொண்டால் கூடத் தொடர்வதில்லையே? அப்புறம் எப்படித் தெரியும்?

    ReplyDelete