Tuesday, March 1, 2016

அம்மா என்றால் வீரம்!

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் பி.சுகந்தி அவர்கள் எழுதிய கட்டுரை
தமிழக அரசியலில் இன்று ஆணவம், அதிகாரம், லஞ்சம்,ஊழல், சிறை இவற்றிற்குப் பெயர் “அம்மா”.ஆனால் அன்று இடதுசாரி இயக்கத்தில் எளிமைக்கு இலக்கணம், உழைப்பாளி மக்களின் போர்க்குரல், விடுதலைப் போராட்டத்தில் போர்ப்பறை, பெண்ணுரிமைக்கு வித்திட்ட வீராங்கனை இவற்றிற்குப் பெயர் அம்மா. அவர் தான் கே.பி. ஜானகியம்மாள்


தமிழகத்தில் வீறு கொண்டெழுந்த விடுதலைப் போரில் அந்நியனை எதிர்த்து தன் வெண்கலக் குரலால் விடுதலை வேள்விப் பாடல்களை வீதியெங்கும் பாடி பல்லாயிரம் மக்களை சுதந்திரப் போராட்டத்திற்கு புயலென புறப்பட்டு வரச் செய்த போர்ப்பறை அம்மா ஜானகி.தேச விடுதலைப்போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, விவசாயிகளின் உரிமை போராட்டம், நில மீட்புப் போராட்டம், பெண்ணுரிமைப் போராட்டம் இவையனைத்திலும் இரண்டரக் கலந்தவர்.சாதிய ஆணவத்தை தகர்த்தெறிந்து சமத்துவத்தை நிலை நாட்ட தன் வாழ்வை முன்னு தாரணமாக்கியவர். சுதந்திரப் போராட்ட வீரரும் சிறந்த நாடகக் கலைஞருமாக விளங்கியவர் தியாகி விஸ்வநாத தாஸ். அவரது சாதியை காரணம் காட்டி அவருடன் நடிக்க யாரும் முன் வராத போது அந்த நாடக மேடையையே சாதிய விலங்கொடிக்க பயன்படுத்தி அவருடன் இணைந்து நடித்த சமத்துவப் போராளி அம்மா.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மதுரைக்கு வந்த போது அவருடன் இணைந்து மதுரை வீதியெங்கும் விடுதலை முழக்கமிட்டு அடிமைச் சங்கிலி அறுத்தெறிய அறைகூவல் விடுத்தவர். விடுதலைப் போரில் நெஞ்சுக்கு நேராய் பல துப்பாக்கிகள் வந்த போதும் நெஞ்சுறுதியுடன் அதை எதிர்த்து நின்று பலமுறை சிறைச் சென்றவர். சிறையிலும் தன் குரல் வளத்தால் விடுதலைப் பாடல்களை பாடி சிறையையே அதிரச் செய்தவர். தென்னிந்தியாவில் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் பெண்மணி என்ற வீரவரலாற்றுக்குச் சொந்தக்காரர்.சுதந்திரத்திற்குப் பின்னும் மதுரை மாவட்டத்தில் ஜமீன்தாரர்கள் குத்தகை நில விவசாயிகளை விவசாய நிலங்களிலிருந்து வெளியேற்றிய போது அவர்களை குடும்பத்துடன் வயலில் இறக்கி போராட வைத்தவர். குத்தகை நிலத்தில் ஏரைப்பிடித்து அம்மா இறங்க பெண்களும், குழந்தைகளும் நிலத்தில் இறங்க போராடிய அனைவரும் சிறையிலடைக்கப்பட்டனர்.மதுரை ஜில்லா போர்டு உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக மதுரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாபெரும் மக்கள் தலைவர். 

அவர் சட்டமன்றத்தில் உழைப்பாளி மக்களின் உரிமைக் குரலை ஓங்கி ஒலித்தவர்.அனைத்திந்திய ஜனநாயக மாதச்சங்கம் துவங்கப்பட்டு அதன் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தன் இறுதி மூச்சு வரை பெண்ணுரிமைக்கும் குரல் கொடுத்தவர். பெண்ணுரிமைக்கென அவர் விதைத்த விதை தமிழகத்தில் இன்று பெண்கள் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பால் ஜனநாயக மாதர் சங்கமாய் வளர்ந்து நிற்கிறது.இந்திய, தமிழக அரசுகள் சிறந்த விடுதலைப் போராளி என அம்மாவை கௌரவித்து தாமிரப்பட்டயமும், உதவித்தொகையும் வழங்கிய போது என் தேச விடுதலைப் போராட்டத்திற்கு பாராட்டுப்பத்திரமா? வேண்டாம். உழைப்பாளி மக்களுக்கு வறுமையிலிருந்து விடுதலை இல்லை. பெண்களுக்கு சமத்துவம் இல்லை. எனவே நான் கனவு கண்ட சுதந்திரம் இல்லையென வருந்தி அரசு கொடுத்த பட்டயத்தையும், உதவித் தொகையையும் வாங்க மறுத்து விட்டார்.

அம்மாவின் லட்சியமே நமது லட்சியம். எந்த சாதியத் தடையை உடைக்க தன் நாடக மேடையை பயன்படுத்தினாரோ அத்தகைய சாதியை மறுத்து சமத்துவம் காண புறப்படும் பலர் இன்று படுகொலை செய்யப்படுகிறார்கள். ஆரம்பக் கல்வி முதல் ஐ.ஐ.டி வரை சாதியப் பாகுபாடுகளும், பாலினப் பாகுபாடுகளும் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றன.நாட்டு மக்கள் அனைவருக்கும் உயிர்கொடுக்கும் விவசாயிகள் இந்த அரசுகளின் கேடுகெட்ட கொள்கைகளால் சாவைத்தேடி ஓடுகின்றனர்.

வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களும் பெண்களை வன்முறைக்குத் தள்ளுகின்றன. அதிகரிக்கும் மதுப்பழக்க வழக்கத்தால் பெண்களும், குழந்தைகளும் வன்முறையில் வதைப்படுகிறார்கள்.ஆம் கே.பி.ஜே. தன் வாழ்நாளை எந்த உழைப்பாளி வர்க்கத்தின் வேருக்கு இட்ட அடி உரமாய் தன்னை கரைத்துக் கொண்டாரோ அவர்களின் விடுதலையை பெற்றுத்தரும் லட்சியத்தை வெல்வதே அம்மாவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.
                                                                                                                                 - பி.சுகந்தி

நன்றி = தீக்கதிர்  01.03.2016

No comments:

Post a Comment