Sunday, December 1, 2019

நிறைவளித்த வாழ்த்துச் செய்தி . . .

எங்கள் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இதனை சாத்தியமாக்கிய எங்கள் கோட்டத் தோழர்கள் அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.








*மாதர் நடைபயணம்* 

*மையங்கள் தோறும் கரம் கோர்த்த வேலூர் கோட்டம்*
_________________________________

*பாலின வன்முறைக்கு எதிரான ஜனநாயக மாதர் சங்கத்தின் நடைபயணம் வலம் வருகிற பகுதிகள் பெரும்பாலும் வேலூர் கோட்டத்திற்கு உட்பட்டதாகவே உள்ளன. இரு பயணக் குழுக்களும் வெவ்வேறு வழிகளில் வேலூர் கோட்டத்திற்குள் பயணித்தன. ஆகவே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பங்களிப்பு சிறப்பாக அமைய வேலூர் கோட்டத்தின் பணி முக்கியமானதாக இருந்தது.*

*வேலூர் கோட்ட சங்கத்தின் தலைவர்கள் எஸ்.இராமன், பழனிராஜ், மணவாளன் ஆகியோரிடம் முதற்கட்டமாக பேசியபோது அவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை விளக்கினோம். ஆனால் தேவைகளோ, வேலூர் பணிகளோ அந்த எதிர்பார்ப்புகளை விட பன் மடங்காக அமைந்து விட்டது என்பதே உண்மை.* 

*பயணம் துவங்குவதற்கு முன்பே அதற்கான ஆயத்தங்களை கோட்ட சங்கம் திட்டமிட்ட வகையில் செய்தது. மாநிலம் முழுமையுமிருந்து வருகிற தோழர்களை நெய்வேலியில் வரவேற்று முதல் நாள் பயணத்தில் பங்கேற்கச் செய்கிற பணியை வேலூர் கோட்டச் சங்கம் நேர்த்தியாக செய்தது. வெறும் வரவேற்பு, காலை உணவாக மட்டும் அந்த நிகழ்ச்சியை அவர்கள் சுருக்கி விடவில்லை. அழகான கவிதை, பாலின வன்முறைக்கு எதிரான முழக்கங்கள் இடம் பெற்ற அட்டைகள் அங்கு வந்தவர்களை வரவேற்றன. வியக்க வைத்தன.*

*துவக்க நிகழ்ச்சியில் நெய்வேலி, சிதம்பரம், கடலூர், பண்ருட்டி மகளிர் தோழர்கள் பங்கேற்று நடை பயணத்திலும் பல கிலோ மீட்டர்கள் அணி வகுத்தனர்.*

*எல்லா கிளைச் சங்கங்களுமே பயணக் குழுவிற்கு வரவேற்பு, பழங்கள், பிஸ்கட்டுகள், நிதி அளிப்பு என்பதை செய்தும் வருகின்றன. ஏ.ஐ.ஐ.இ.ஏ கொடிகள் பயணக் குழு செல்லும் வழியெல்லாம் அசைகின்ற காட்சிகளை பார்க்கிறோம். இராணிப்பேட்டை, புதுச்சேரி, திண்டிவனம், போளூர் என...*

*மழையால் பயணக் குழுவினர் நனைந்து துணிகள் கூட காயாமல் தோளில் போட்டுக் கொண்டு நடக்கிறார்கள் என்ற செய்தி வந்தவுடன் பலர் தமிழ்நாடு முழுமையும் இருந்து நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று தொடர்பு கொண்டார்கள். வேலூர் கோட்ட சங்க பொதுச் செயலாளர் எஸ்.ராமன் அவர்களை தொடர்பு கொண்டதும் 83 நைட்டிகளுக்கான தொகையை இன்னும் ஒரு மணி நேரத்தில் தந்து விடுகிறோம்; வேலூர் கோட்ட சங்க கணக்கில் தொகைகளை போடச் சொல்லுங்கள் என்று கூறி விட்டு உடனே பயண வழித் தடத்திற்கு முன்னணித் தோழர்களோடு சென்று வழங்கினார். பெண்களுக்கே உரிய பிரத்தியேக பிரச்சினைகளை எதிர்கொள்வதிலும் உடனடி உதவிகளை தோழர் எம்.கிரிஜா ஒருங்கிணைப்பில் பயணக் குழுவில் வரும் நமது தோழர்கள் வாயிலாக செய்துள்ளோம்.*

*தோழர் மணவாளன் அவர்களின் ஒருங்கிணைப்பும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 6 வது நாளாக நடந்து வந்து கொண்டிருக்கும் மதுரை மகளிர் தோழர்களுக்கு அதிகாலையிலும் இரவிலும் பயணம் துவங்குகிற முடிகிற இடங்களில் உரிய உதவிகளை செய்வதிலும், தங்குமிட தேவைகளை நிறைவு செய்வதிலும் அவர் காட்டிய அக்கறை, ஆதரவு ஆகியன வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.*

*இன்று ஒரு குழு வேலூர்க் கோட்ட எல்லையை கடக்கவுள்ளது. இன்னொரு குழுவும் வேலூர் எல்லையை இன்றோ நாளையோ கடக்கலாம். நமது வேலூர் கோட்ட தோழர்களின் பங்களிப்பை மாதர் சங்கத் தலைவர்கள் மனமார பாராட்டுகிறார்கள்.*

*வேலூர் கோட்டத்தின் அற்புதமான பணியை போற்றுவோம்! வாழ்த்துவோம்!*
*************************************

பிகு

மேலே குறிப்பிட்டிருந்த நெய்வேலி கிளையை
அலங்கரித்த கவிதைகள், போஸ்டர்கள் கீழே







1 comment: