Tuesday, December 10, 2019

8, ஜனவரி, 2020



*ஜனவரி 8, 2020*
*ஏன் தேசம் தழுவிய வேலை நிறுத்தம்?*
**********************************

*உங்களோடு ஒரு நிமிட உரையாடல்* - *(1)*

வேலை நிறுத்தங்களால் உற்பத்தி பாதிக்கப்படும், வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற பிரச்சாரத்தை ஆட்சியாளர்களும், அவர்களின் ஊது குழல்களும் இன்னும் சில நாட்களில் ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் உண்மை என்ன?

இன்றைய "இந்து பிசினஸ் லைன்" (10.12.2019) இதழின் முதல் பக்க செய்தியை பாருங்கள்!

இந்திய தவறிய கடன் பற்றிய அறிக்கை 2019 (India Delinquency Report) பற்றிய தகவல் அது. மே- நவம்பர், 2020 காலத்தில் கடன் தவணை (EMI) கட்டத் தவறிய இரண்டு லட்சம் பேர் பற்றிய ஆய்வினை, இந்திய மின்னணு கடன் வசூல் மேடைகளில் ஒன்றான " "கிரெடிட் மேட்" (CreditMate) செய்துள்ளது. ஏன் கடன் கட்டத் தவறினார்கள்? என்ற காரணங்களை அது பட்டியல் போட்டுள்ளது. 

வீடு கட்ட, வீட்டிற்கு பர்னிச்சர் வாஷிங் மெஷின், கம்ப்யூட்டர்... இப்படி பொருட்களை வாங்க தவணை கடன் பெற்றவர்கள் மாத தவணையை கட்ட இயலாமல் தவறுவது பற்றிய ஆய்வு அது. இதோ பாருங்கள்.

*36 % பேருக்கு சம்பளம் தாமதமானதால்...*

*29 % பேருக்கு வணிக பாதிப்பினால்... (Business Downturn)*

*12 % பேருக்கு வேலையே போய் விட்டதால்...*

*13 % பேருக்கு மருத்துவ செலவினத்தை தாங்க முடியாததால்...*

*கடன் தவணை தவறியவர்களில் 54 % பேர் தாமதமாக கட்டியுள்ளார்கள். 46 % பேர் கடன் "செயல்படா சொத்தாக" மாறி விட்டது. வராக்கடனின் இளம் பருவம் அது.*

கடன் கட்டத் தவறிய மோசமான மாநிலம்/யூனியன் பிரதேசங்களில் தேசத் தலைநகர் டெல்லி முன் வரிசையில் உள்ளது. அரியானா, அருணாச்சல பிரதேசமும் கவலைக் கிடமான பட்டியலில்...

மோசமான நகரங்களில் நம் மாநிலத் தலைநகர் சென்னை முன் வரிசையில் உள்ளது. லூதியானா, போபால் நகரங்களும் மோச நகரங்களில் அடங்கும். 

உற்பத்தியை நிறுத்த நடைபெறுகிற வேலை நிறுத்தம் அல்ல இது. செய்த உற்பத்திக்கு சம்பளத்தை ஒழுங்காக கொடு என்று கேட்டு... வேலை பறிப்பிற்கு எதிராக பாதுகாப்பை கேட்டு... வணிக பாதிப்பை தடுத்து நிறுத்த... நடத்தப்படுகிற வேலை நிறுத்தம் இது. 

இதனால் பாதிக்கப்பட்டிருக்கிற லட்சோப லட்சம் உழைப்பாளிகளின், அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வுரிமைக்காக நடைபெறுகிற வேலை நிறுத்தம். 

மக்கள் சம்பளமின்றி திணறும் போது, வேலை இழக்கும் போது எந்தத் தொழில் தழைக்கும்? வங்கி கடன் எப்படி திரும்பி வரும்? இன்சூரன்ஸ் வணிகம் எப்படி வளரும்? பாலிசிகள் காலாவதி ஆகாமல் எப்படி இருக்கும்? 

உழைப்பாளி மக்களின் வாழ்வும் வளமும் எல்லோரின் வாழ் நிலையோடு பின்னிப் பிணைந்தது. இதற்கான வேலை நிறுத்தம் மக்களுக்கான இயக்கம்தானே!

*நாங்களும் மக்களும் வேறல்ல... மக்களும் நாங்களும் வேறல்ல*

தோழர் கே.சுவாமிநாதன்,
துணைத்தலைவர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு

No comments:

Post a Comment