Thursday, December 26, 2019

மறக்க இயலா தலைவர் பற்றி . . .



அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களின் இரண்டாமாண்டு நினைவு தினம் இன்று.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பிதாமகராக திகழ்கிற தோழர் சந்திரசேகர் போஸ், தோழர் என்.எம்.எஸ் அவர்களைப் பற்றி தன்னுடைய நினைவலைகள் நூலில் எழுதிய பகுதியின் தமிழாக்கத்தை ஓய்வு பெற்ற உயரதிகாரி திரு ரமணன் காலையில் வாட்ஸப்பில் அனுப்பியிருந்தார்.

அவருக்கு நன்றி கூறி அதனை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

கீழே உள்ள புகைப்படங்கள், தோழர் என்.எம்.எஸ் அவர்கள் எங்கள் வேலூர் கோட்டத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களை துவக்கி வைத்த நிகழ்வுகள். அவர் வேலூரில் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சியும் கூட இதுதான். 



















தோழர் என்.எம்.சுந்தரம்

( தோழர் சந்திரசேகர் போஸ் அவர்களுடைய ' Talking of Times Past' லிருந்து)

ஏஐஐஇஏ இன்றைக்கு அடைந்துள்ள உச்சத்திற்கும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அது பெற்றிருக்கும் புகழுக்கும் முக்கியமாக நினைக்கப்பட வேண்டிய தலைவர்கள் சரோஜ் சவுத்திரியும் சுனில் மொய்த்ராவும். இதற்கு அடுத்தபடியாக வருவது தோழர் சுந்தரத்தின் பெயர். முதலில் பொதுச் செயலாளர் என்ற முறையிலும் பின் தலைவர் என்ற முறையிலும் அவர்  மிகுந்த திறமையுடன் ஏஐஐஇஏவை முன்னெடுத்து சென்றார். 

அவர் வளர்ச்சி எளிதாக வந்துவிடவில்லை. எல் ஐ சி உருவாக்கப்பட்ட பின் 1957இல்  நியமிக்கப்பட்ட முதல் அணி ஊழியர்களில் ஒருவர். அவருடைய தந்தை திரு நாராயணன் வளர்ச்சி அதிகாரி. அந்த சங்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவராகவும் இருந்தவர். 

தென் மண்டலம் எல்லாவற்றையும் விட பெரிய மண்டலம். சென்னை அதன் தலைமையகம். அந்தக் காலத்தில் அங்கிருந்த சங்கத்தின் தலைமை கட்டுக்கோப்பு இல்லாமலும் உள் பூசல்களும் பிணக்குகளும் அதிகமாகவும் இருந்தன.தென்மண்டலத்தின் தலைவரும் பிரபல கமயூனிஸ்ட் தலைவருமான மோகன் குமாரமங்கலம் அடிக்கடி தலையிடவேண்டியதிருந்தது. ஏராளமான எண்ணிக்கையில் இருந்த புதிய ஊழியர்கள் இந்த மோதல்களை விரும்பவில்லை. சுந்தரம் சென்னையிலுள்ள ஒரு கிளையில் தனது 19வது வயதில் சேர்ந்தார். இதற்கு முன்னால் பூனாவில் தனது உறவினருடன் தங்கி ஆங்கில வழிக் கல்வி கற்று வந்தார். சிறந்த மாணவராகவும் சிறப்பான ஆங்கில சொல்லாற்றலினால் புகழ் பெற்றவராகவும் இருந்தார். தனது ஐஏ(IA) படிப்பை முடித்தபின் எல் ஐ சியில் சேர்ந்தார். பிறகு எல் ஐ சி ஊழியராக இருந்துகொண்டே நேபாள் நாட்டிலுள்ள காத்மாண்டு திருபுவன் பல்கலைக்கழகத்தில் தனித் தேர்வராக பட்டப் படிப்பை முடித்தார். எல் ஐ சியில் சேர்ந்த பிறகு சங்கத்தில் உறுப்பினரானார்.ஊழியர்களிடையே மிகப் பிரபலமானவரானார். இந்தப் பரந்த ஊழியர் ஆதரவினால் குறுகிய காலத்திலயே அவர் மண்டலப் பொதுச் செயலாளரானார்.  ஏஐஐஇஏயின் இயக்கங்களை கோட்ட சங்கங்கள் சிறப்பாக நிகழ்த்துமாறு  ஒருங்கிணைப்பதில் மிகுந்த திறமையை வெளிப்படுத்தினார். மண்டல பொதுச் செயலாளர் என்ற முறையில் அவர் அகில இந்திய சங்கத்தின் இணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எல் ஐ சியுடன் கோரிக்கை சாசனத்தில் பேச்சு வார்த்தை நடத்தும் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் குழுவில் சரோஜ் மற்றும் சுனிலின் முன்னிலையில் எல் ஐ சி உயர் அதிகாரிகளின் வாதங்களை முறியடித்து நமது கோரிக்கைகளை நிலைநாட்டுவதில் அவர் ஈடு இணையற்ற பாத்திரம் வகித்தார்.

 ஜெய்ப்பூர் மாநாட்டில் அவர் சரோஜின் இடத்தில் பொதுச் செயலாளரானார். ஏஐஐஇஏ தலைமையகம் சென்னைக்கு மாற்றப்பட்டபோது தன்னை சுற்றி மிகத் திறமையானவர்களைக் கொண்ட அணியை உருவாக்கினார். பிறகு இன்சூரன்ஸ் ஒர்க்கர் அலுவலகமும் சென்னைக்கு மாற்றப்பட்டது. அதன் ஆசிரியர் என்ற முறையில் அவரது பங்களிப்பு என்றும் நினைவில் நிற்கக்கூடியது. இன்சூரன்ஸ் ஒர்க்கரில் ‘நாம் அரசியல் பேசுவோம்’(Let Us Play Politics) என்ற தொடரை எழுதத் தொடங்கினார். இந்த தொடரில் தேசிய மற்றும் சர்வ தேசிய அரசியல் பொருளாதாரம்  குறித்து விளக்கினார். உழைக்கும் வர்க்கம் என்ற முறையில் தங்களது கடமைகள் குறித்த சிந்தனையை செழுமைப்படுத்த வாசகர்களுக்கு  அவை உதவின. பிப்ரவரி 2003இல் நடந்த ராய்ப்பூர் மாநாட்டில் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் காலத்தில் அவர் உலகின் பல பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு  தொழிலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு இந்திய தொழிற் சங்க நிலைமைகள் குறித்து  தனது சீரிய கருத்துக்களை சிறப்பான முறையில் முன்வைத்தார். 

சில காலத்திற்குப் பிறகு அவருடைய உடல்நலம் காரணமாக அவரது பணிகளின் வேகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டியதிருந்தது. ஆனால் எல் ஐ சி ஊழியர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்த அவரது ஆலோசனைகள் ஏஐஐஇஏ முன்னேறி செல்ல எப்போதுமே உதவின.

            பல்வேறு கோட்டங்களில் உருவாக்கப்பட்ட சங்க ஊழியர் அணிகள் அவரது  தலைமைப் பண்பிற்கு சான்றுகளாக உள்ளன. பெங்களூரு கோட்டத்திலிருந்து தோழர் அமானுல்லாகான் ஏஐஐஇஏ தலைவராக உள்ளார். ஹைதராபாத் கோட்டத்திலிருந்து தோழர் வேணுகோபால் பொதுச் செயலாளரானார். இன்றும் ஏஐஐஇஏயின் தலைமையகம் ஹைதராபாத்தில் இயங்குகிறது. தோழர் ரமேஷ் பொதுச் செயலாளராக உள்ளார். தோழர் அமானுல்லாகானை ஆசிரியராகக் கொண்டு இன்சூரன்ஸ் ஒர்க்கர் பெங்களூரிலிருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

 2017ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி சுந்தரம் நம்மை விட்டு பிரிந்தார் என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.தோழர்கள் சரோஜ்,சுனில்,சுந்தரம் ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்றாலும் அவர்கள் காட்டிய பாதையில் ஏஐஐஇஏ முன்னே சென்று கொண்டு இருக்கிறது.

No comments:

Post a Comment