Monday, December 9, 2019

விகடனுக்கு ஏன் இந்த அல்பத்தனம்?



கீழே நீல நிறத்தில் உள்ளது  விகடன் தன் இணையப் பக்கத்தில் வெளியிட்ட ஒரு செய்தி. 


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்வளர்ச்சிக்கான சிறப்பு மாநில மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயிலில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் அ.சௌந்தரராசன், ``உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ நாடுகளில் 8 சதவிகிதம் பேர் வேலையில்லாமல் இருக்க வேண்டும் என்பது அவர்களின் கொள்கை

அப்படி வேலையில்லாதவர்கள் இருந்தால்தான் குறைந்த ஊதியத்தில் வேலைக்கு ஆள்கிடைப்பார்கள். இந்த 8 விழுக்காடு எண்ணிக்கை அதிகரிக்கும்போது பணியில் இருப்பவர்களின் ஊதியத்துக்கும் வேலைக்கும் ஆபத்து வரப் போகிறது என்று அர்த்தம். வேலையின்மையை எதிர்த்துப் பணியில் இருப்பவர்களும் போராட வேண்டும். ஆலை முதலாளிகள் வெளியில் வேலை இல்லாமல், ஊதியம் இல்லாமல் பல பேர் உள்ள நிலையில் பணியில் இருக்கும் நீங்கள் ஏன் போராடுகிறீர்கள் என்ற எண்ணத்தை பொதுவான கருத்தாக உருவாக்குகிறார்கள். இந்தியாவில் 35 வயதுக்கு கீழே 65 விழுக்காட்டினர் உள்ளனர். இதில் பெரும்பான்மை இளைஞர்களுக்கு வேலை இல்லை. சிலர் 8 ஆயிரம், 10 ஆயிரம் என்ற குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் நிலைமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

கார்ப்ரேட் நிறுவனங்களோடு சிறு தொழில் செய்வோர் போட்டிபோட வேண்டிய நிலையை ஆட்சியாளர்கள் உருவாக்கி விட்டார்கள். இந்தியாவில் வாகன பழுது பார்ப்போர் மட்டும் 7 கோடி பேர் உள்ளனர். ஆனால் இனிமேல் வாகனம் உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் மட்டும்தான் பழுதுபார்க்க வேண்டும் எனக் கூறுகிறது. இதுதான் மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. ஏராளமான சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டதும், பல நிறுவனங்கள் பணி இல்லாமல் வேலை நாட்களை குறைத்ததும்தான் மின் நுகர்வு குறைந்ததற்கான காரணம். மக்களின் வாங்கும் சக்தி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தினால்தான் தொழில் வளர்ச்சி ஏற்படும்.

மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கினால்தான் தொழில் வளர்ச்சி பெரும். தொழில் வளர்ச்சி பெற்றால்தான் வேலைவாய்ப்பு பெருகும். மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை மக்களிடத்திலே அம்பலப்படுத்த வேண்டும். வேலைமையின்மைக்கு அரசின் தவறான கொள்கைகள்தான் காரணம் என்பதை இளைஞர்களிடம் எடுத்துக் கூறி அவர்களை அணிதிரட்டி போராட வேண்டும். போராட்டம் வலுவடைந்தால் வெற்றி நிச்சயம்" என்றார்.

மாநிலப் பொருளாளா் தீபா, மத்தியக்குழு உறுப்பினர்கள் சி.பாலசந்திரபோஸ், செ.மணிகண்டன், மாநிலத் துணைத் தலைவர் கே.எஸ்.கார்த்தீஷ்குமார் ஆகியோர் மாநாட்டு தீர்மானங்களை விளக்கிப் பேசினர்.

இவ்வளவு முக்கியமான செய்திக்கு அது கொடுத்துள்ள தலைப்பு என்ன தெரியுமா?


`பிரியாணிக்கு வெங்காயப் பச்சடி கொடுக்கிறாங்க!' -செங்கல்பட்டை மிரளவைத்த சி.ஐ.டி.யு மாநாடு




சாதாரண குஸ்கா பிரியாணி,  அதற்கு ஒரு வெங்காயப் பச்சடி, அதுவும் பாக்கு மட்டையில் வைத்து கொடுக்கப்பட்டது. சீன அதிபருக்கு மோடி கொடுத்த விருந்தைப் போல என்னமோ கோடிக்கணக்கில் செலவு செய்யப் பட்டது போல எழுதியிருப்பதும் நிகழ்ச்சி பற்றி ஒரு புகைப்படம் போட்டு இந்த உணவுக்கு மூன்று புகைப்படம் போட்டுள்ளதெல்லாம் அபத்தம், அல்பத்தனம் மட்டுமல்ல, வன்மம், வக்கிரம்.

செய்தியை எழுதிய நிருபர் பா.ஜெயவேல் நிர்மலா அம்மையார் போல வெங்காயம் சாப்பிடாத குடும்பத்தைச் சேர்ந்தவர் போல. அவ்வளவு எரிச்சல் அந்த எழுத்தில். ஒருவேளை மாட்டுக்கறி போட்டிருந்தால் மண்டபத்தையே கொளுத்தியிருப்பார் போல!

இந்த செலவுக்கே தோழர்கள் என்னவெல்லாம் சிரமப்பட்டார்களோ!

நித்தி சூசூசூனியர் விகடன் என்று நக்கலடித்ததைப் பார்க்கும் போது எரிச்சலாகத்தான் இருந்தது. இதைப் படித்த பின்பு இவர்களுக்கு இது தேவைதான் என்று தோன்றியது. 

No comments:

Post a Comment