Sunday, December 1, 2019

நடைப் பயணம் – மனக்குறை நீங்கியது




“வன்முறையற்ற தமிழகம், போதையற்ற தமிழகம்” என்ற முழக்கத்தோடு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் 25.11.2019 அன்று வடலூரில் இருந்தும் திருவண்ணாமலையிலிருந்தும் இரண்டு குழுக்களாக சென்னை நோக்கி நடைப்பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மிக முக்கியமான இந்த இயக்கத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தோழர்களும் பங்கேற்க வேண்டுமென்று எங்கள் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு அறைகூவல் அளித்தது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோட்டங்களிலிருந்தும் மகளிர் தோழர்கள் பயணம் தொடங்குகிற முதல் நாள் அன்று வடலூரில் பங்கேற்பது என்று திட்டமிடப்பட்டது. வடலூர் எங்கள் வேலூர் கோட்ட எல்லைக்குள் இருப்பதால் மற்ற கோட்டங்களிலிருந்து வருகிற தோழர்களுக்கான தங்கும் வசதிகளை ஏற்பாடு செய்வது, எங்கள் கோட்ட மகளிர் தோழர்களை பங்கேற்க  வைப்பது என்று இரண்டு பொறுப்புக்கள் இருந்தது.

தங்கும் வசதி மற்றும் இதர ஏற்பாடுகளை நெய்வேலி கிளைச்சங்கத் தோழர்கள் அற்புதமாக செய்திருந்தார்கள். வேலூரிலிருந்து சில மகளிர் தோழர்களோடு 25.11.2019 அதிகாலை புறப்பட்டு வடலூர் செல்வது என்று திட்டமிட்டிருந்தோம்.

ஆனால் எதிர்பாராத பேரிழப்பாக 24.11.2019 ஞாயிறு மதியம் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் என் மாமனார் காலமாகி விட்டார். அதனால் வடலூர் செல்ல இயலவில்லை. கடலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டச்சங்கப்ப் பொறுப்பாளர்கள் தோழர் டி.மணவாளன் மற்றும் தோழர் ஜி.வைத்தியலிங்கம் ஆகியோர் பணிகளை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

மறு நாள் தகனம் முடிந்து மயானத்திலிருந்து வீட்டிற்கு வந்து அலைபேசியை உயிர்ப்பித்தால் வந்து விழுந்த செய்திகள் நடைப்பயணத்தின் சிறப்பான துவக்கத்தை சொன்னது. நெய்வேலி கிளைச்சங்கத் தோழர்களுக்கு மற்ற கோட்டத்து தோழர்களின் பாராட்டுக்களை எடுத்துரைத்தது. பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம் மற்றும் கடலூர் கிளைகளிலிருந்து 28 தோழர்கள் கலந்து கொண்டார்கள் என்று பெருமிதம் கொள்ள வைத்தது.

வேலூர் கோட்டத்திற்கு அளிக்கப்பட்ட பொறுப்பை சரியாக நிறைவேற்றினோம் என்ற நிறைவு இருந்தாலும் நம்மால் நேரடியாக பங்கேற்க இயலவில்லையே என்ற குறை மனதில் இருந்து கொண்டே இருந்தது.

வேலூர் கோட்டத் தோழர்களின் பணி துவக்க நாளோடு நின்றுவிடவில்லை. வடலூரிலிருந்து புறப்பட்ட பயணக்குழுவிற்கு எங்கள் தோழர்கள் புதுச்சேரியிலும் திண்டிவனத்திலும் வரவேற்பு அளித்தனர். திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்ட பயணக்குழுவிற்கு போளூரிலும் ராணிப்பேட்டையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராணிப்பேட்டையில் பயணக்குழுவிற்கு வரவேற்பு அளிக்க ராணிப்பேட்டை கிளையின் எட்டு பெண் தோழர்கள், ஆறு ஆண் தோழர்கள் மட்டுமல்லாமல் வேலூரிலிருந்தும் ஏழு மகளிர் தோழர்களும் பத்து ஆண் தோழர்களும்   ராணிப்பேட்டை சென்றிருந்தோம். 

பயணக் குழுவிற்கு வரவேற்பு அளித்த பின்புதான் வடலூர் செல்ல முடியாத மனக்குறை நீங்கியது.

“வன்முறையற்ற தமிழகம், போதையற்ற தமிழகம்” என்பது இன்றைய சமூக சூழலில் மிக முக்கியமானது. அரசு செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெறுகிற இந்த இயக்கத்திற்கு தமிழக ஊடகங்கள் உரிய கவனம் அளிக்கவில்லை.

நல்ல விஷயங்களை நம் முதலாளித்துவ ஊடகங்கள் என்றைக்கு ஆதரித்துள்ளன?

பிகு 1 : இந்த நடைப்பயணம் குறித்து இன்னொரு முக்கியமான செய்தியை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அது நாளை . . .

பிகு 2 :  நடைப்பயணத்தில் எல்.ஐ.சி ஊழியர்கள் பங்கேற்பு தொடர்பான புகைப்படங்கள் கீழே











பிகு 3 :

நடைப்பயணக்குழுத் தோழர்களிடம் ஒரு தொகையை உடனடியாக சேர்க்க வேண்டுமென்று 28.11.2019 அன்று எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் சொல்ல, புதுவையில் ஒரு முன்னணித் தோழரின் பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு செல்லும் வழியில் தாமரைப்பாக்கம் என்ற ஊரில் இருந்த தோழர்களை சந்தித்து தொகையை அளித்து விட்டு திரும்புகையில் நிதி அளிப்பதை ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர்  வாலண்டினா கூற அப்போது எடுத்துக் கொண்ட படம் கீழே.



2 comments: