Tuesday, December 10, 2019

அதுக்கு அதிகாரமில்லை அமித்து . . .


குடியுரிமை மசோதா குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள் பேசிய உரையின் காணொளி வடிவம் மற்றும் உரை வடிவம் இரண்டையும் கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

"உங்களுக்கு ஆளும் அதிகாரம் இருக்கிறதே தவிர நாட்டை பிளக்கும் அதிகாரம் கிடையாது"

என்று பொட்டில் அடித்தது போல அற்புதமாக முடித்துள்ளார். 

வெறி பிடித்த முரட்டுக் கும்பலுக்கு அதெல்லாம் புரியுமா என்றுதான் தெரியவில்லை.

உரையை காணுங்கள், படியுங்கள்



*இந்திய வரலாற்றில் மிகக்கொடிய நாள் -சு.வெங்கடேசன்MP* 

 *நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்த கண்டன உரை* 
----------------------------------------
 *இந்த சட்ட திருத்தத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம்*

இந்தியாவை அடுத்த பல ஆண்டுகள் அலைக்கழிக்கப்போகிற மிக கொடிய ஒரு சட்டம் இது. ஒரு மதச்சார்பற்ற நாடு மத அடிப்படையில் குடியுரிமை வழங்கிட முடியாது. அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒரு சட்டத்திருத்தம் இது. இந்தியா இதுவரை கடைபிடித்து வந்த மரபுகளுக்கு எதிரானது. இந்திய அரசியல் முகப்புரையில் வழிபாட்டை வைத்து மக்களை வேறுபடுத்தவில்லை. ஆனால் இன்றைக்கு இந்தச் சட்டம் நிறைவேறினால் இந்தியா தனது மனிதாபிமானம்மிக்க கோட்பாட்டினை அதிகாரப்பூர்வ்மாக கைவிடுகிற ஒரு கொடிய நாளாக இருக்கும் என்று நான் இங்கு குறிப்பிடுகிறேன். 

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் முஸ்லிம் அல்லாத மக்கள் மத ரீதியாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. ஆனால் அது மட்டும் தானா ஒடுக்கப்படுவதற்கான கருவி என்பதை இங்கே நான் நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன். அஹம்தியாஸ் உள்ளிட்ட பல குழுக்கள் அங்கே ஒடுக்கப்படுகிறார்கள், மலாலா ஏன் துரத்தப்பட்டார் என்பது உலகம் அறியும் . வன்முறைக்கு மதம் மட்டுமே அளவுகோல் இல்லை. மதத்தின் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்க இயலாது. எந்த மதத்தையும் பின்பற்றாத கடவுள் நம்பிக்கை அல்லாத நாத்திகர்களைப்பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை நான் கேட்க விரும்புகிறேன். மியான்மரைப்பற்றி இலங்கையைப் பற்றி நீங்கள் ஏன் பேச மறுக்கிறீர்கள்?

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கான அடிப்படை ”சிங்கள பௌத்த பேரினவாதம்” என்பதையும் நாம் அறிவோம் எனவே இன்றைக்கு தமிழ்நாட்டில் 24 மாவட்டத்தில் 107 முகாமில் 59716 பேர் இருக்கிறார்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறார்கள், இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் இருக்கிறார்கள் அவர்களைப்பற்றியெல்லாம் நீங்கள் ஏன் மெளனம் சாதிக்கிறீர்கள். 

இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது, தமிழர்களுக்கு எதிரானது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறோம். இந்த சட்டத்திருத்தம் அண்டை நாடுகளில் உள்ள அனைத்து  இந்துக்களுக்கும் வெளிப்படையாக அழைப்பு கொடுக்கிறது, அதே நேரம் உள்நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு நேரடியான அச்சுறுத்தலையும் அவமானத்தையும் கொடுக்கிறது என்பதை நாங்கள் இந்த அவையில் பதிவு செய்கிறோம்.  நாட்டில் எழும் எத்தனையோ பிரச்சினைகளை தீர்வு காண்பதற்கு பதிலாக எண்ணற்ற புதிய பிரச்சினைகளை உருவாக்குகிற் சட்டமாக இந்த சட்டம் இருக்கிறது.

இந்த நாடாளுமன்றத்தின் முகப்பில் சமஸ்கிருதத்தில் ஒரு வாக்கியம் எழுதப்பட்டிருக்கிறது.  நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்துனைபேரும்  தினசரி அந்த வாக்கியத்தை கடந்துதான் நாம் உள்ளே நுழைகிறோம்.  அந்த வாக்கியத்தின் அர்த்தம் என்ன தெரியுமா?

இந்தியா என்பது மத ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகியிருக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் யூதர்களாக இருந்தாலும், ஏமனைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பார்சிகளாக இருந்தாலும், ஆப்கானிஸ்தானத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், திபெத்தியர்களாக இருந்தாலும், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் இதனை தங்கள் இல்லமாக கருதலாம் என்று அந்த வாக்கியம் சொல்லுகிறது. இந்த சட்டத்திருத்தம் நிறைவேறினால் அவர்கள் இந்தியாவை இல்லமாக ஒருபோதும் கருதமாட்டார்கள். 

இங்கே உள்துறை அமைச்சர் சொன்னார் அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு ஆளுகிற அதிகாரத்தை மக்கள் எங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் என்று சொன்னார்.

உண்மை *ஆளுகிற அதிகாரத்தை தான் மக்கள் உங்களுக்கு வழங்கியிருக்கிறார்களே தவிர இந்தியாவை பிளக்கிற அதிகாரத்தை, வெறுப்பின்பால் இந்தியாவை மோசமான  நிலைக்கு செலுத்துகிற  அதிகாரத்தை உமக்கு வழங்கவில்லை என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்*


2 comments:

  1. அருமையான உரை. இலக்கியமும் அரசியலும் சங்கமிக்கிறது

    ReplyDelete
  2. Semma... Semma. very proud to be a Tamilan.

    ReplyDelete