Tuesday, May 31, 2011

சுடுகாட்டில் குடியேறிய தலித் மக்கள்

வேலூர் வட்டத்தில்  வேலூரிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இலவம்பாடி புளிமேடு காலனி.  அங்கே  உள்ள மக்களுக்கு 
சொந்தமானது  மாரியம்மன் கோயில். மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமாக நான்கரை சென்ட் நிலம். அந்த நிலத்தை கோயிலுக்கு 
அருகாமையில்  உள்ள ஒரு குடும்பம் ஆக்கிரமிப்பு  செய்து விட்டது. 


கோயிலுக்கு பின் உள்ள இடத்தையோ,  பக்கத்தில்  உள்ள இடத்தையோ
ஊர் மக்கள் பயன்படுத்த அக்குடும்பம் அனுமதிக்கவில்லை. பொங்கல் வைக்க அல்ல, கற்பூரம் கொளுத்தக் கூட அனுமதி கிடைக்காது. மீறி
பொங்கல் வைத்த போது  பானைகளை உடைத்து தாக்கி விட்டார்கள். 

 முப்பது ஆண்டுகளாக இக்கொடுமை தொடர்கிறதாம். காவல்துறையும்,
அரசு நிர்வாகமும் அக்குடும்பத்திற்கு  ஆதரவாக இருப்பதால் வெறுத்துப் 
போய் இந்த ஊரே இனி தேவையில்லை என்று சுடுகாட்டில் போய் 
குடியேறி விட்டார்கள். 

செய்தியறிந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 
அக்கிராமம் சென்று  அம்மக்களை  சந்தித்தோம்.  மாநில துணைத்தலைவர் முன்னாள் குடியாத்தம் எம்.எல்.ஏ  தோழர் ஜி.லதா
அவர்கள் தலைமையில் சென்றோம். 

தாசில்தார்  முதல் நாள் வந்து பேசி விட்டுப் போன பின்னணியில் 
அவர்கள் வீடுகளுக்கு திரும்பியிருந்தனர்.  அவர்களின் கோரிக்கை மிகவும்  எளிமையானது. கோயில் ஊருக்கு சொந்தம். நிலம் கோயிலுக்கு
சொந்தம். அதை ஒருவர் அபகரிப்பது  நியாயமா? 




இதிலே கொடுமையானது  என்னவென்றால் தாக்கப்பட்ட மக்களும் சரி,
தாக்கும்  குடும்பமும் சரி, எல்லோருமே தலித் மக்கள்தான். பணமும்
அரசியல் பின்புலமும்  கிடைத்தால்  ஆதிக்க வெறியும் தானாகவே 
வரும் போல. கோயிலுக்கு பின் உள்ள இடம் சாணிக்கிடங்காக 
மாற்றப்பட்டுள்ளது.  இதுதான் கடவுளுக்கு மரியாதை போல.


மாவட்ட ஆட்சியர்  பொறுப்பில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலரிடம்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் இப்பிரச்சினை  எடுத்துச்செல்லப் 
பட்டுள்ளது. நிலத்தை அளந்து மீட்டுத் தருவதாக அவரும் உறுதியளித்துள்ளார்.  


ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதிகாரிகளின் அணுகுமுறையில்  
மாற்றம் ஏற்பட்டுள்ளதா  என்று பொறுத்திருந்து பார்ப்போம்.  


 








No comments:

Post a Comment