Friday, May 6, 2011

இறந்தவர்கள் உடல்களை மறைப்பது அச்சத்தின் வெளிப்பாடு
ஒசாமா பின் லேடனின்  உடலை  அமெரிக்கா  கடலில் தூக்கி எறிந்ததாக
சொல்லுவது  இன்று  சர்ச்சையாக  மாறிக்கொண்டுள்ளது. இஸ்லாமிய 
முறைப்படி  புதைக்காமல்  கடலில் போட்டது சரியல்ல  என்று  பலரும்
அமெரிக்காவை  சாடிக்கொண்டிருக்கிரார்கள்.  ஒசாமா பின் லேடனின் 
உடலைப் புதைத்தால்  அங்கே  நினைவுச்சின்னம்  எழுப்பி  விடுவார்கள் 
என்பது  அமெரிக்காவின்  அச்சம்.  அது பின் லேடனின் வரலாற்றை
மட்டுமா  நினைவு படுத்தும்?  அவனை உருவாக்கிய அமெரிக்காவே 
அழிக்கவும்  செய்தது  என்பதையுமல்லவா  நினைவு படுத்தும்!   
தங்களுக்கு  தர்ம சங்கடமான  எந்த நினைவும் யாருக்கும்  இருக்கக் கூடாது  என்பதுதான்  எப்போதுமே  ஆக்கிரமிப்பாளர்களின்  சிந்தனை.


அமெரிக்கா  இப்படி  செய்வது ஒன்றும்  புதிதல்ல.  
பொலிவியாவில்  கொல்லப்பட்ட  உண்மையான புரட்சி வீரன் சேவின் 
உடலை  ரகசியமாக  புதைத்தது.  சில ஆண்டுகளுக்கு முன்புதான்
சேகுவாரா புதைக்கப்பட்ட  இடத்தைக் கண்டு பிடித்து  அவரது 
சடலத்தின்  எஞ்சிய  பகுதிகளை கியூபா  கொண்டு வந்து முறையான
மரியாதைகளோடு  அடக்கம் செய்தார்கள். 
செகுவாராவிற்கு  கிடைத்த வாய்ப்பு கூட பின் லேடனுக்கு கிடைக்கக்
கூடாது  என்பதில்  அமெரிக்கா  கவனமாக  இருந்தது. 


விடுதலைப்புலிகள்  அமைத்த  பல்வேறு நினைவுச்சின்னங்களை இன்று 
சிங்கள அரசு  உடைத்தெறிவது கூட  அச்சத்தின் வெளிப்பாடுதான். 


சில சமயம் உடல்களையே மறைத்து விடுவது  என்ற அளவிற்கு செல்வது
என்பது கூட நடைபெறுகின்றது.  அதனை  அரசே  செய்யும்  என்பதை 
கேரளாவில் பார்த்துள்ளோம். 

அவசர நிலைக் காலத்தில் முதலமைச்சராக  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அச்சுத மேனனும்  உள்துறை அமைச்சராக கருணாகரனும் 
இருந்த போது  காவல்துறையின்  மிருக வெறியில் கொல்லப்பட்ட 
பொறியியல் கல்லூரி மாணவன் ராஜனின்  உடல் கடைசி வரை 
கிடைக்கவேயில்லையே! 


மறைந்த தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன்  தமிழில் மொழியாக்கம் 
செய்த பிணந்தின்னிகள்  புத்தகம் படியுங்கள்.  மகனை இழந்த
தந்தை வாரியாரின் வேதனையைசசொல்லும்  அந்த புத்தகம்
படித்து  உங்கள் ரத்தம் கொதித்தால்  மட்டுமே நீங்கள் மனிதன்!


தமிழகத்திலும்  இது போன்ற சம்பவம் உண்டு. 


தஞ்சை  மாவட்டம் பூதலூர் வட்டம்  ராயமுண்டான்பட்டி  
மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர்   தோழர் வெங்கடாசலம்  நிலப்பிரபு
ஒருவனால் கொல்லப்பட்டார். இறுதிவரை  அவரது  உடல் கிடைக்கவேயில்லை.    


ஆனால்  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  கொல்லப்பட்ட மாணவன்  உதயகுமாரை  தங்கள்  மகனே  கிடையாது  என்று பெற்றோரையே  சொல்ல வைத்த  கலைஞர் கருணாநிதியின் சாமர்த்தியம்  அமெரிக்காவிற்குக் கூட கிடையாது.

1 comment:

  1. Why you have not written about the three girls burnt alive by admk hooligans?

    ReplyDelete