Monday, May 2, 2011

ஒசாமா பின் லேடனின் முப்பெரும் தெய்வங்கள்

ஒசாமா பின் லேடனின்  மரணத்தை  அமெரிக்கர்கள்  கொண்டாடிக் கொண்டுள்ளார்கள். ஒரு மரண வியாபாரியான  பின் லேடனின் 
இறப்பிற்காக  வருந்த வேண்டிய தேவை  நிச்சயமில்லை. பாரதீய ஜனதா
கட்சி முதல்  அனைவரும்  பின் லேடன் கொல்லப்பட்டதை மகிழ்ச்சியோடு  வரவேற்றுள்ளனர். 

அமெரிக்கர்களின்  கொண்டாட்டத்திற்கான காரணம்  என்ன?  பியர்ல் ஹார்பர்  தாக்குதலுக்குப் பிறகு  அழிவு  என்பதையே  காணாத  மண்
அமெரிக்க மண். வியட்நாம், ஜப்பான், இராக், நிகரகுவா, கியூபா, பனாமா,
ஆப்கான், என்று  அமெரிக்கர்கள்  பேரழிவை  உருவாக்கியுள்ளார்கள் . 

இன்னொரு நாச சக்தியான  இஸ்ரேலுக்கு   உறுதுணையாக இன்று வரை 
உள்ளார்கள். ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட, அவனுக்கு அடைக்கலம்  அளித்த  பாகிஸ்தானுடைய ராணுவ பலத்திற்கு 
அடிப்படையே  அமெரிக்காதான்.  

ஒசாமா பின் லேடன்தான்  அமெரிக்காவிற்கு தீவிரவாதியே தவிர 
நிச்சயம்  தாவூத் இப்ராஹிம் அல்ல.  

அமெரிக்க மண்ணில்  எந்த போரும் நடந்தது கிடையாது. இரண்டாவது 
உலகப்போரில் கூட சோவியத் செஞ்சேனை வீரர்கள் லட்சக்கணக்கில் 
மடிந்தார்களே  தவிர அமெரிக்காவிற்கு  பெரிய இழப்பில்லை.  அப்படி 
அழிவின் வலியும் துயரமும்  உணராத அமெரிக்க மக்களால்  ட்வின் டவர்
தகர்ப்பை  இன்னமும்   ஜீரணிக்க இயலவில்லை  என்பதையே  இன்று
நாம் காணும் கொண்டாட்டங்கள்  சொல்லும் செய்தி.    

ஒசாமா பின் லேடன்  மரணத்தால்  மகிழ்ச்சியுள்ள அமெரிக்க மக்கள் 
உணர வேண்டிய  பல முக்கிய உண்மைகள்  உண்டு. 

அவனை  உருவாக்கியது  யார்? 

ஆப்கானிலே  ஒரு கம்யூனிச  அரசு  உருவாகிறது. அதை வீழ்த்த அமெரிக்கா  ஆசைப்படுகின்றது.  கம்யூனிச அரசை பாதுக்காக்க என்று 
சோவியத் யூனியன் படைகள்  ஆப்கான் உள்ளே போகின்றது. சோவியத் 
யூனியன் படைகளுக்கு  எதிரான  குழுக்களை  உருவாக்கி போரிட 
வைக்கிறது  அமெரிக்கா. 

அப்படி  அமெரிக்காவால்  சோவியத் யூனியனுக்கு  எதிராக  உருவாக்கப் 
பட்ட தீவிரவாதி  பின் லேடன். அமெரிக்காவின் ஜனாதிபதிகள் ஜனநாயகக்  கட்சியின் ஜிம்மி கார்ட்டர், குடியரசுக் கட்சியின் ரொனால்ட் 
ரீகன்  ஆகிய இருவராலும் பாலூட்டி  சீராட்டி வளர்க்கப்பட்டான். 
மிகச்சிறந்த மாவீரன்  என்று  இரு கட்சி ஜனாதிபதிகளாலும்  
பாராட்டப்பட்டு   ஆயுதப்புதையல்  அளிக்கபபட்டவன். 

ட்வின் டவர் தாக்குதலுக்குப் பிறகு ஜார்ஜ் புஷ்ஷால் குறிவைக்கப்பட்டு 
பாரக் ஒபாமா காலத்தில்  கொல்லப்பட்டு  இறந்து போய்விட்டான். 
அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதி  ஒசாமா பின் லேடனை கொன்று 
விட்டது என்பதற்காக பெருமைப்படும்  அமெரிக்க மக்கள் பின் லேடனையும்  அவனைப் போன்ற  பயங்கரவாதிகளையும்  தங்கள் 
நாடுதான்  உருவாக்குகின்றது  என்பதையும்  உணர வேண்டும். 

ட்வின் டவர் தகர்ப்பை விட மிக மோசமான பேரழிவுகளை அமெரிக்காதான்  நிகழ்த்தியுள்ளது  என்பதையும்  அவர்கள்  உணர வேண்டும்.  

ஒசாமா பின் லேடனை பிடிப்பதற்காக  என்று  துவக்கப்பட்ட ஆப்கான் 
ஆக்கிரமிப்பை  தங்கள் அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும்  வலியுறுத்த வேண்டும். சதாம் உசேன் இறந்து பல ஆண்டுகள் 
ஆன பின்பும்  ஏன்  இன்னும் இராக்கை விட்டு வெளியேறவில்லை என்று 
கேட்க வேண்டும். 

அமெரிக்காவால் ஊக்குவிக்கப்படுபவர்களுக்கு  பின் லேடனின் மரணம் 
ஒரு எச்சரிக்கை மணி. உங்களையும் ஒரு நாள் அமெரிக்கா கொல்லும். 
பாகிஸ்தான் மீது பாயும் பாஜக அந்நாட்டிற்கு  எல்லாமுமாய்  இருக்கிற 
அமெரிக்கா மீது ஏன் பாய்ந்ததில்லை.  மாவீரன் அத்வானி அமெரிக்கா 
சென்ற போது  இவர்  கைகளைக் கட்டி பவ்யமாய்  இருந்தததும்  ஜார்ஜ் 
புஷ் அலட்சியமாய் மேஜை மீது கால்களை போட்டிருந்த புகைப்படம்  நினைவிற்கு வருகிறதா? 

இந்து புராணத்தின் படி பிரம்மா படைக்கும் கடவுள் , விஷ்ணு காக்கும் 
கடவுள், சிவன் அழிக்கும் கடவுள். 

ஒசாமா பின் லேடனுக்கு மூன்றுமாய்  அமெரிக்கா அமைந்து விட்டது, 
ஜர்னய்ல் சிங் பிந்தரன்வாலேவிற்கு  அம்மையார் இந்திரா காந்தி 
அமைந்தது போல. 


 

  

1 comment:

  1. நல்ல பதிவு.
    வளர்த்து விட்டவர்களே இவர்கள் தானே.

    ReplyDelete