Wednesday, June 1, 2011

பெருமிதமும் வேதனையும் ஒரே தருணத்தில்




சுடுகாட்டில் குடியேறிய  தலித்துகள்  என்று  ஒரு ஆக்கிரமிப்பு பற்றி  நேற்று  எழுதியிருந்தேன். தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணி அப்பிரச்சினையை  கையில் எடுத்துள்ளது  என்பதையும்  எழுதியிருந்தேன்.  குடியாத்தம்  தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ  தோழர் லதா அவர்களோடு  அந்த கிராமத்திற்கு  சென்றிருந்தோம். அந்த ஊருக்கு செல்வதற்கு  முன்பாக  நடைபெற்ற ஒரு நிகழ்வை  இங்கே பதிவு செய்கிறேன். 



வேலூர் பழைய பேருந்து நிலையத்தில்  காலை  எட்டரை மணிக்கு சந்தித்து   அங்கிருந்து  புறப்படுவதாக  ஏற்பாடு. நான், மாவட்ட அமைப்பாளர்  தோழர்  குபேந்திரன்,  அரசு ஊழியர் சங்க, வாலிபர் சங்கத் 
தோழர்கள் வந்து விட்டோம். தோழர் லதா வந்து கொண்டிருப்பதாக 
சொன்னார். 



அவர் வருவதற்குள்  இரண்டு இட்லி  சாப்பிட்டு விடலாம்  என்று  அங்கே
இருந்த  அலங்கார் ஹோட்டலில்  சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். பக்கத்து மேஜையில்  நான்கு பேர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். திடீரென
அவர்களிடம்  ஒரு பரபரப்பு.  ஹோட்டலுக்கு வெளியே ஜன்னல் வழியாக 
பார்த்து எதோ பேசத் துவங்கினர். 



அந்த பரபரப்பை பார்த்து  அவர்கள்  என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று 
அறியும்  ஆர்வம்  இயல்பாகவே  வந்தது.  நானும் ஜன்னல் வழியே 
பார்த்தேன். தோழர் லதா அவரது கணவரோடு  இரு சக்கர வாகனத்தில் 
வந்திருந்தார். 



இவர்கள்  இவ்வாறு  பேசிக் கொண்டார்கள் 



" இவங்கதான் குடியாத்தம்  எம்.எல்.ஏ  லதா. (தேர்தல் முடிந்து வேறு  ஒருவர்  வந்த பின்பும்  அப்படித்தான்  சொன்னார்கள்). தொகுதிக்கு 
எவ்வளவோ  நல்லது  செய்தார்கள்.  எம்.எல்.ஏ னா   இப்படித்தான்   
இருக்கணும்.  அவங்க கட்சி என்னமோ  இந்த  முறை  அங்க நிக்கலை. 
நின்னுருந்தா  நிச்சயமா  ஜெயிச்சிருப்பாங்க! இன்னும் நல்லது செஞ்சிருப்பாங்க. பாரு எவ்வளவு  சாதரணமா டூ வீலருல  வராங்க" 



இவர் மீண்டும் போட்டியிடவில்லையே  என்று  மக்கள் வருத்தப்பட்டால் 
அதுதான்  ஒருவருக்கு மக்கள்  அளிக்கும்  அங்கீகாரம்.  மிகச்சரியான 
ஒருவரைத்தான்  மார்க்சிஸ்ட் கட்சி  கடந்த முறை நிறுத்தியுள்ளது, 
அந்த நம்பிக்கையை  காப்பாற்றும் வண்ணம் தோழர் லதாவும் பணி
செய்துள்ளார் , அதன் மூலம் அவரது  இயக்கத்திற்கும்  பெருமை 
சேர்த்துத் தந்துள்ளார்  என்பதை  நினைக்கையில்  உண்மையிலேயே  மிகவும்  பெருமிதமாக  இருந்தது. 


இந்த உழைப்பின் பலன்  அனைத்தையும்  கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக  மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து   நீக்கப்பட்ட   லிங்கமுத்து  என்ற ஒரு நபர்  தற்போது  அனுபவிக்கின்றாரே   என்கிற போது  வேதனையாகவும்  இருந்தது. 


எனது  உணர்வுகள்  நியாயம்தானே!
 

2 comments:

  1. நல்ல பதிவு.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. குடியாத்தம் தொகுதியில் இம்முறை உங்கள் கட்சி ஏன் போட்டியிடவில்லை? நீங்கள் பெருமிதப்படும் லதா போட்டியிடுவதை உங்கள் கட்சி தலைமை
    ஏன் விரும்பவில்லை? இதற்கு பதில் சொல்ல முடியுமா?

    ReplyDelete