Thursday, May 5, 2011

இவனன்றி வேறு யார் அவதார புருஷன்?




இன்று  அவன் பிறந்த நாள்.
கொண்டாட்டங்கள்  இல்லை,
கோயில்களில்  அபிஷேகங்கள்  இல்லை,
கடவுளாய் தன்னை சொன்னவனும்  இல்லை,
மனிதனாய்  வாழ வழி காட்டியவன்  அவன்.

எல்லாம் அவன்  செயல்   என்று 
விதி மீது பழி போட்டு 
உபதேசங்களை  வாரி வாரி 
அள்ளி இறைத்த  தத்துவ 
வள்ளல்கள்  மத்தியில் 
ஏன், எதற்கு, எப்படி  என
தத்துவ ஆராய்ச்சி செய்தவன். 
எல்லோரும்  எல்லாமும் பெற வேண்டும்,
சாதரணமாய் சொல்லி விடவில்லை. 
முதலாளித்துவ வெறியின் 
கோர முகத்தை  வெளிச்சத்தில்
விலக்கிக்  காட்டியவன்,
ரத்தம் ஒழுகும் வாயோடு
மூலதனம்  சுற்றி வரும் 
பேயென்று  உரைத்தான்.

இனி இவன் படிக்க 
புத்தகங்கள்  இல்லை என்று 
வெட்கப்பட்டது லண்டன்  நூலகம்.

எதிரியின்  கருவிதான். 
வேறு வழியின்றி 
சொன்னது 
ஆயிரம்  ஆண்டுகளின் 
அற்புத மனிதன் 
இவன்தான்  என்று.

நிதி மூலதனம் பேராசைப்பட 
உலகப் பொருளாதாரம் 
சூறாவளியில், சுழலில், 
சிக்கித் தவிக்க 
வேக, வேகமாய் 
புரட்டியது  இவனது 
புத்தகத்தைத்தான். 
பைபிளை ஓதும் 
போப்பாண்டவர் கூட 
உபதேசித்தார், 
இவனின் மூலதனத்தை  
படிக்கச்சொல்லி. 

அறிவும், உழைப்பும், 
அடித்தட்டு மக்களை 
உய்த்திட கொண்ட 
வேட்கையும்தானே
மூலதனத்தின் 
மூலதனம்

உலகத் தொழிலாளரே, 
ஒன்று படுங்கள், 
அடிமை விலங்கை உடைத்தால்
பொன்னுலகம்  உங்கள் கைகளில்
என்று  பொதுவுடமைத் 
தத்துவம் தந்து 
சிந்தனைகளை  சிவப்பாக்கிய 
மார்க்ஸ் அன்றி 
வேறு யார் இங்கே 
அவதார புருஷன்?

   

1 comment:

  1. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete