Wednesday, May 4, 2011

தேர்தல் ஆணையம் பரிசீலிக்குமா?

தபால் வோட்டு  என்றால்  என்ன என்று  இதுவரை  அவ்வளவு 
முழுமையாக  அனுபவம்  கிடையாது.  இந்த முறைதான்  தபால் 
ஒட்டு போட்டேன்.  சொல்லப்போனால்  கையில் உள்ள கவரை 
இன்னும் பெட்டியில் போட நேரம் கிடைக்கவில்லை. பனிரெண்டாம் 
தேதி வரை அவகாசம்  உள்ளது  என்ற சோம்பேறித்தனமும் காரணம். 

முந்தைய வாக்குச்சீட்டுப் பதிவின் போதும் சரி, தற்போதைய 
இயந்திர பதிவிலும் சரி, வாக்காளர் பெயர், கட்சி இவற்றோடு சின்னமும்
இடம் பெறுகின்றது. ஆனால்  தபால் ஓட்டில் சின்னம் கிடையாது. 
படித்தவர்கள்தானே  வாக்களிக்கப்போகின்றனர், சின்னம் எதற்கு 
என்ற சிந்தனை சரியானதுதான். 

ஆனால் நம் கட்சிகள் செய்யும்  தடாலடி வேலைகள் பற்றியெல்லாம் 
தேர்தல் ஆணையத்தால்  அவ்வளவு  சுலபமாக  கணிக்க முடியாதே. 
எதிர்க்கட்சி வேட்பாளர் பெயரிலேயே  சுயேட்சை வேட்பாளர்களை 
நிறுத்துவது  என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. 

உதாரணத்திற்கு வேலூர் தொகுதி  காங்கிரஸ் வேட்பாளர் ஞானசேகரன். 
அதே பெயரில்  இரண்டு வேட்பாளர்கள். கே.வி.குப்பம்  அதிமுக கூட்டணி 
வேட்பாளர்  தமிழரசன். அங்கே இன்னும் ஒரு தமிழரசன். காட்பாடி 
அதிமுக வேட்பாளர் அப்பு. மேலும் மூன்று அப்புகள்  அங்கே நின்றார்கள். 
அணைக்கட்டு தேமுதிக  வேட்பாளர்  வேலு. வேலு என்று மூன்று 
சுயேட்சைகள்.  நான் பணியாற்றிய வாக்குச்சாவடியில்  வேலு  என்ற 
சுயேட்சை  வேட்பாளருக்காக பாமக கரை வேட்டியோடு  ஒரு முகவர்
இருந்தது  ஒரு காமெடி( அவர் பணி  செய்தது என்னவோ  பாமக கட்சிக்காகத்தான், ஆனால் சட்டப்படி  அவர் சுயேட்சை வேட்பாளரின் முகவர்).    

ஒரே பெயரில் பல வேட்பாளர்கள்  உள்ள நிலையில்  மாறி வாக்களிக்க
வாய்ப்பு உள்ளது. வேட்பாளரின் பெயரை நினைவு கொள்ளலாம், அவர் 
அப்பா பெயரைக் கூடவா நினைவு வைத்துக் கொள்ள முடியும். நாம் 
வாக்களிக்க நினைக்கும் சுயேட்சை வேட்பாளரின் பெயரிலேயே, அதே இனிஷியலிலேயே  இருவர் இருந்தால்  குழப்பம் அல்லவா? 

இதைத் தவிர்க்க  எதிர்காலத்தில்  தபால் வோட்டுக்களிலும்  சின்னத்தை
அச்சிடுவது நல்லது. 

இந்த ஆலோசனையை    தேர்தல்  ஆணையம் பரிசீலிக்குமா?

1 comment:

  1. முதல்ல மறக்காம ஓட்ட போடுங்க

    ReplyDelete