Tuesday, May 3, 2011

ஸ்டேட்டும் சரியில்லை, சென்ட்ரலும் சரியில்லை

இந்த வாரம் மூன்றாவது முறையாக  என் மகனின் கோபத்தை பதிவு 
செய்ய வேண்டியுள்ளது.  அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு 
நேற்று  முன்தினம்  நடைபெற்றது. தமிழகத்தில்  தேர்வு மையங்கள் குறைவு.  எங்களுக்கு   அருகாமை  மையம் சென்னைதான்.  காலை 9 .30  மணிக்கு  தேர்வு  துவங்க வேண்டும்.


பொதுவாகவே சென்னையின்  நெரிசல், நசநசப்பு  எல்லாமே  எரிச்சலூட்டும்  என்பதால்  மிக மிக அத்தியாவசியமான  நேரங்களில்  மட்டுமே சென்னை செல்வேன். இங்க எப்படித்தான் மனுஷங்க இருக்காங்களோ   என்று  பொதுவாக சென்னைவாசிகள்  மீது  அனுதாபத்துடன்  ஒலிக்கும் குரல்களில்  என்னுடையதும்  உண்டு. போன வேலை முடிந்த அடுத்த கணமே சென்ட்ரல்  அல்லது கோயம்பேடு  நோக்கி  விரைபவன் நான்.  

ஆக இந்த  அவஸ்தைக்கு  பயந்து  ஞாயிறு  காலை  ஒரு கார் வைத்துக் 
கொண்டு  சென்னை சென்று  தேர்வு மையத்திற்கு  முன் கூட்டியே 
சென்று விட்டோம்.  ஒன்பதரை மணி தேர்விற்கு  முக்கால் மணி நேரம் 
முன்பாக வர வேண்டும்  என்று  எழுதியிருந்தார்கள்.  எட்டே முக்கால் 
மணிக்கு  பையனை  உள்ளே  அனுப்பி விட்டு  இன்னும் மூன்றரை மணி 
நேரம் எப்படி தள்ளுவது,  எங்காவது போய் விட்டு வரலாமா  என்று 
யோசித்துக் கொண்டிருந்த போது   " போன மச்சான் திரும்பி வந்தான் " 
கதையாக  மாணவர்கள்  வெளியே  வந்து விட்டார்கள். 

தேர்வு  ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக  சொல்லி விட்டார்கள். மீண்டும் 
பதினோரு மணிக்கு வாருங்கள்  என்று  சொல்லி விட்டனர். தேர்வு 
மைய பொறுப்பாளர்கள்  காரணம் சொல்லவும் தயாரில்லை. பெற்றோரோடு  பேசுவதையே  இழிவாகக் கருதினார்கள்.  ஏற்கனவே 
தேர்வு மைய வளாகத்திற்குள்  பெற்றோரை அனுமதிக்காமல்  
பிளாட்பாரத்தில்  அல்லவா நிற்க வைத்திருந்தார்கள்! 


வீட்டில் உள்ளவர்களோடு  தொலை பேசியில் பேசி தொலைக்காட்சி செய்தி  பார்க்கச்சொன்னால்  ஆற்காட்டார் புண்ணியத்தில்  மின்சாரம் 
கிடையாது. பிறகு ஒரு வழியாக  ஒரு தோழர் மூலமாக  தகவல் 
பெற்றால்  கேள்வித்தாள் கசிந்து விட்டதாக சொன்னார்கள். அப்படியென்றால்  பதினோரு மணிக்காவது  தேர்வு நடக்குமா  என்ற 
கேள்வி  எழுந்தது. 


எத்தனை எத்தனை குழப்பங்கள்  ஏற்பட்டது தெரியுமா? 


பனிரெண்டரை மணிக்குதானே  தேர்வு முடியப்போகின்றது  என்பதால் 
பெற்றோர் புறப்பட்டுப் போனதால்  தெருவில் நின்ற மாணவர்கள் 
ஏராளம். செல்போன் உபயோகிக்கக்கூடாது  என்பதால் மாணவர்கள் 
கையில் தொலைபேசியும் கிடையாது.  நான் ஒரு பத்து நிமிடம் வேறு
ஒரு தொலைபேசியில்  பேசிக் கொண்டிராவிட்டால்  என் மகனுக்கும் 
அதே கதிதான் ஏற்பட்டிருக்கும். 


இரண்டரை மணிக்கும் மூன்று மணிக்கும் புறப்படும் ரயில்களில்  
முன்பதிவு  செய்தவர்கள் கதி அதோகதியானது. 


பெட்டி படுக்கையோடு காத்திருந்த பெற்றோரின் பிளாட்பார வாசம் 
அதிகரித்தது. 


மதியம் வேறு தேர்வு  எழுத திட்டமிட்ட மாணவர்கள்  என்ன செய்வது
என்ற பதட்டத்தில்  குழம்பித் தவித்தார்கள். 

எல்லாவற்றையும்  விட மாணவர்களின்  உற்சாகம் வடிந்து போய் 
தேர்வின் மீதான கவனம்  சிதறியது. 


தேர்வு ஏன் ஒத்தி வைக்கப்பட்டது  என்பதற்கான  விளக்கம் சரியாக 
இல்லை. மத்திய தேர்வு ஆணையம்  தொடர்ந்து குளறுபடிகள் 
செய்து வருகின்றது. 


மாநில அரசு தேர்விற்கு பிறகு எரிச்சலை உருவாக்கியது.
மத்திய அரசோ தேர்விற்கு முன்பே   எரிச்சலை உருவாக்கியது.

                                                  மொத்தத்தில் 
 
ஸ்டேட்டும்  சரியில்லை, சென்ட்ரலும்  சரியில்லை




1 comment:

  1. பாவம் உங்க பையனுக்கு தொடர்ந்து
    சோதனைகள்தான். சோதனைகள்தான்
    சாதனைகளை உருவாக்கும்.
    நம்பிக்கை கொடுங்கள்

    ReplyDelete