Saturday, April 30, 2011

ஐயா தங்கம் தென்னரசு, உங்க போட்டிக்கு நாங்கதான் மாட்டினோமா?

மாண்புமிகு  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஐயா 
அவர்களுக்கு,  உங்களின்  இன்றைய  பெருமித அறிவிப்பினால் பாதிக்கப்
பட்டுள்ள  பனிரெண்டாம் வகுப்பு மாணவனின்  வருத்தமும் வேதனையுமான கடிதம் இது.  மே மாதம் பதினான்காம் தேதி  எங்கள் 
தேர்வு  முடிவுகள் வரும் என்ற அறிவிப்பை  இது நாள் வரை உங்களுக்கு 
கட்டுப்பட்டு நடந்த  அதிகாரி  அறிவித்த போது  மகிழ்ச்சியடைந்தோம். 
அமைச்சரைக் கலக்காமல் அதிகாரிகள்  தன்னிச்சையாக  தேர்வு முடிவுகள் வரும்  தேதியை  அறிவித்து விட்டார்கள்  என்று நீங்கள் அறிக்கை விட்ட போதே  ஏதோ  வில்லங்கம்  வரப்போகிறது  என்று 
நினைத்தேன்.  அதன்படியே   எதிர்பார்த்த    வில்லங்கம்  வந்தே விட்டது. 

நீங்கள்  பதட்டமாக  இருக்க வேண்டிய நாட்கள் குறைந்துதானே போயுள்ளது.  முன்பு சொன்ன நாளை விட முன்பாகவே  வரப்போகிறதே, 
இதிலே  உங்களுக்கு என்ன பிரச்சினை என கேட்கலாம்.  என்ன பிரச்சினை
என்பதை பிறகு  சொல்கிறேன். 

நாங்கள்  எங்கள் முடிவுகளை  முன்கூட்டியே  அறிந்து கொள்வதற்காகவா 
நீங்கள் ஒன்பதாம் தேதி  முடிவுகளை  அறிவிக்கப்போகின்றீர்கள்? அதிகாரிகளுக்கும்  உங்களுக்குமான  மோதலில்  நீங்கள்தான் மேல்  
என்பதை  நிருபிக்கத்தானே  அதிகாரி சொன்ன தேதிக்கு முந்தைய 
தேதியை  அறிவித்துள்ளீர்கள். வேறு  என்ன நோக்கம் இருக்கிறது? 
சொல்லுங்களேன் பார்ப்போம்.  

தேர்வு முடிவு அறிவிப்பதில்  உங்கள்  அதிகாரத்தை  நிலை நாட்டி விட்டீர்கள்.  வாழ்த்துக்கள். ஆனால்  நீங்கள்தானே  எங்களது கட்டணத்தை
முறைப்படுத்துவதற்காக கோவிந்தராஜன்  கமிட்டியை அமைத்தீர்கள். அந்த  கமிட்டி  நிர்ணயித்த  கட்டணத்தைப் போல  மூன்று, நான்கு மடங்கு 
கட்டணத்தை எங்கள் பள்ளிகள் வசூலித்தார்கள்.  நாங்களும் வேறு 
வழியின்றி  கட்டினோம். அப்போது  எங்கே போனது  உங்கள் அதிகாரம்? 

இப்போது உங்கள் அதிகாரத்தைக் காண்பிக்க ஐந்து நாட்கள் முன்பாக 
முடிவுகள்  வரப்போகின்றது. ஆனால்  அதற்கான பணிகள் முடிந்து 
விட்டதா?  உங்கள் அவசரத்தில்  எங்கள் மதிப்பெண் பட்டியலை தயார் 
செய்வதில்  குளறுபடிகள் நடந்தால்  யார் பொறுப்பு?  பாதிப்பு எங்களுக்குத்தானே!  
இப்போது  உங்கள் அதிகாரம் நிலை நாட்டப்பட்டுள்ளதால் கடுப்பாகியுள்ள   அதிகாரிகள் உள்குத்து  எதுவும்  செய்து  அவர்களின் 
சக்தியை காண்பிக்க மாட்டார்களா? 

ஒரு தேதியை முடிவு செய்வதிலேயே  இத்தனை குழப்பம்  என்றால் 
உங்கள்  ஆட்சியின்  லட்சணம்  இதுதானா?  

தேர்தல் முடிந்த பிறகு  இந்த குழப்பம். இதை முன்னமே செய்திருந்தால் 
நாங்கள் மாணவர்களே  உங்களுக்கு  எதிராக களத்திற்கு  வந்து 
உங்களை  தோல்வி அடைய வைத்திருப்போம்.  

பதினான்காம் தேதிதான்  முடிவு வரப்போகின்றது  என்று சொல்லி, 
அதற்கு முன்பாக  எங்காவது போய்விட்டு வரலாம்  என்று 
கெஞ்சிக் கூத்தாடி  கூர்க்  சுற்றுலா செல்ல என் பெற்றோரை  ஏற்பாடு 
செய்ய வைத்திருந்தேன்.  ஒன்பதாம் தேதி முடிவு வருவதால்  எல்லா 
திட்டமும்  இப்போது பணால்.  என் சாபம் உங்களை சும்மாவே விடாது. 

உங்கள் அவசரத்தால்  என்ன குளறுபடி வரப்போகின்றதோ  என்று 
அஞ்சிக் கொண்டே  இருக்கும்

பனிரெண்டாம்  வகுப்பு மாணவன். 
பின்குறிப்பு : என் மகனின் கோபத்தையும் எரிச்சலையும் கடிதமாக்கியுள்ளேன்.  உடன்பிறப்புக்கள்  யாராவது படித்தால் 
உங்கள் மாண்புமிகுவிடம்  சொல்லுங்களேன் . 


 


  

2 comments:

  1. நல்ல பதிவு.
    இவர்களது அதிகாரத்தை காட்டுகிறார்கள்.
    நன்றி.

    ReplyDelete
  2. தேர்வு முடிவை முன் கூட்டியே அறிவிப்பதும்,
    மெட்ரிக் பள்ளிகளை முறைத்துக் கொள்வதும்
    ஒன்றா? என்ன சார் விஷயம் தெரியாதவரா
    இருக்கீங்க?

    ReplyDelete