Thursday, April 17, 2025

கூமுட்டையெல்லாம் ஆட்டுத்தாடியானால் ????

 


தமிழ்நாட்டு ஆட்டுத்தாடி அநியாயமாக நிறுத்தி வைத்திருந்த மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் கொடுத்தமைக்கு கேரளாவின் புதிய ஆட்டுத்தாடி பொங்கியுள்ளது.

 


நீதிமன்றம் முடிவெடுத்தால் சட்டமன்றம் எதற்கு, நாடாளுமன்றம் எதற்கு என்று அறிவிலித்தனமாக கேள்வி எழுப்பியுள்ளது.

 சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆட்டுத்தாடிகள் அயோக்கியத்தனமாக, அராஜகமாக இழுத்தடிப்பதற்கு முற்றுப் புள்ளி வைப்பதாகத்தான் தீர்ப்பு அமைந்துள்ளது.

 ஆக உச்ச நீதிமன்றம் சட்டமன்றத்தின் மாண்பைத்தான் காப்பாற்றி உள்ளதே தவிர சட்ட மன்றத்தின் பணியையோ, அதிகாரத்தையோ எடுத்துக் கொள்ளவில்லை.

 இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் நீதிமன்றம் செய்தது ஆட்டுத்தாடிகளின் வேலையைத்தான். அதை சொல்ல இந்த ஆட்டுத்தாடிக்கு தெரியவில்லை.

கூமுட்டைகளையெல்லாம் ஆட்டுத்தாடியாக்கினால் அவை இப்படித்தான் அபத்தமாக உளறும்.

 

நெல்லை - கொடுமை ஏன் தொடருது?

 


கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பாகத்தான் சின்னத்துரை மீது கொலைத் தாக்குதல் சக மாணவர்களால் நிகழ்த்தப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

இந்த மாணவனைப் போல் நன்றாக படியுங்கள் என்று ஆசிரியர் அறிவுரை கூறியதுதான் முதல் தாக்குதலுக்குக் காரணம்.

உயிர் பிழைத்ததும் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றதும் இப்போதைய தாக்குதலுக்குக் காரணமா?

சில நாட்கள் முன்பாகத்தான் நெல்லை மாவட்டத்தில் காதியப் பிரச்சினை இல்லை என்று சபாநாயகர் சொன்னார். ஜாதி வெறி கொடி கட்டிப் பறக்கிறது என்றும் தீண்டாமை வெறி ஊறிப்போயிருக்கிறது என்பதும்தான் இந்த தாக்குதலுக்குக் காரணம்.

நெல்லைக்கு வந்திருப்பது புற்று நோய்.. அறுவை சிகிச்சை, கீமோ தெர்பி, ரேடியோதெரபி என எல்லா சிகிச்சைகளும் தேவை. அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகும். அரசு தவறவிட்டால் ....... நிலைமை சரி செய்ய முடியாத அளவுக்கு மிகவும் கேவலமாகி விடும். 

பிகு : இப்பதிவை முதலில் நேற்று இரவு எழுதினேன். காலையில் பார்த்தால் காவல்துறை தன் வழக்கமான கட்டுக்கதையை பரப்பி பாதிக்கப்பட்டவர் மீது பழி போடும் கீழ்த்தர உத்தியை கையாண்டுள்ளது தெரிகிறது. தீவிர சிகிச்சை தர வேண்டிய பிரச்சினைக்கு பாரசிட்டமால் கொடுத்தால் போதும் என்று அரசு கருதுகிறது. இந்த அறிக்கையெல்லாம் முதல்வருக்கு தெரியுமா?

திரு மு.க.ஸ்டாலின் அவர்களே, 2026 ல் நீங்கள் ஆட்சியை இழந்தால் அதற்குக் காரணம் உங்களால் கட்டுப்படுத்த முடியாத உங்களின் கட்சி பெரும் தலைவர்கள், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளில் இருந்து கான்ஸ்டபிள், கடை நிலை ஊழியர்கள் வரை ஊடுறுவி தங்களின் செயல்திட்டத்தை அமலாக்கிக் கொண்டிருக்கும் காவிகள். விழித்துக் கொண்டால் உங்களுக்கு நலம். 

Wednesday, April 16, 2025

எரிக்கப்பட்ட “ராமையாவின் குடிசை” மீண்டும்.


 



 மதுரையில் நிறைவுற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற அனுபவம் குறித்து     என்ற பதிவில் ஏற்கனவே எழுதியிருந்தேன்.

 அந்த பதிவில் குறிப்பிட்டபடி  ஒரு முக்கியமான அம்சத்தை இப்பதிவில் எழுதுகிறேன்.

 கீழத்தஞ்சை மாவட்டம், வெண்மணியில் முதியவர்களும், பெண்களும் குழந்தைகளுமாக 44 பேர், கோபாலகிருஷ்ண நாயுடு என்ற வெறி பிடித்த மிருகத்தின் தலைமையில் குழுமியிருந்த பண்ணையார்கள் மற்றும் அவர்களின் அடியாட்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ராமையா என்பவரின் குடிசைக்குள் அடைக்கலம் புகுகின்றனர்.

 அந்த கொலைகாரக்கூட்டம் அந்த குடிசையை தீ வைத்து கொளுத்துகிறது. உள்ளே இருந்த அனைவரும் கருகி இறக்கிறார்கள். தன் குழந்தையாவது பிழைக்கட்டும் என்று ஒரு தாய் அக்குழந்தையை வெளியே வீச, அக்குழந்தையை வெட்டி மீண்டும் தீக்குள் போட்டார்கள் தீயவர்கள். குஜராத் கலவரத்தின் போது வயிற்றுக்குள் இருந்த  சிசுவை வெளியே எடுத்து தீயில் போட்ட கொடூரத்திற்கு இவர்கள்தான் முன்னோடிகள்.

 எரிக்கப்பட்ட ராமையாவின் குடிசையை மதுரை மாநாட்டு கண்காட்சியில் வடிவமைத்து நம் உள்ளத்தை பதற வைத்திருந்தார்கள். எரிந்து போன குடிசை, கருகிக் கிடக்கும் உடல்கள், அடங்காத புகை என்று அன்றைய துயரத்தை  உணரக்கூடிய விதத்தில் அமைத்திருந்தார்கள்.



 அந்த தியாகிகளின் நினைவைப் போற்றுகிற வகையில்தான் தியாகிகள் ஸ்தூபியும் அமைந்திருந்தது.



 இந்த இரண்டு கலைப்படைப்புக்களை மட்டுமல்ல

 பிரதிநிதிகள் மாநாட்டு மேடையில் கம்பீரமாக இருந்த காரல் மார்க்ஸையும் உருவாக்கிய படைப்பாளி சிற்பி தோழர் கா.பிரபாகரன்.





 தோழருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மேலும் மேலும் பல சிறந்த படைப்புக்களை அவர் உருவாக்குவார்.

 2022 ல் நாங்கள் வேலூரில் தென் மண்டல மாநாடு நடத்திய போது தியாகிகள் சின்னத்தை வடிவமைத்துக் கொடுத்தவர் அவர்தான். இப்போது அந்த தியாகிகள் சின்னம் வெண்மணி புதிய நினைவகத்தில் கம்பீரமாக உள்ளது. (முதலில் உள்ள புகைப்படத்தில் அச்சின்னத்தோடு இந்த ஆண்டு வெண்மணிக்கு சென்ற வேலூர் கோட்டத் தோழர்கள் உள்ளோம்)

 நமக்கு பழக்கமானவர் செய்த படைப்பு என்று வருகிற போது மனதுக்குள் அது ஒரு தனி மகிழ்ச்சிதான்.

40 - கணக்கில் வராததையும் கணக்கில் கொண்டு . . .

 


இன்று எல்.ஐ.சி பணியில் நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளேன்.

16.04.1986 அன்று சென்னை உனைட்டெட் இந்தியா கட்டிடத்தில் எங்களுக்கான 15 நாட்கள் பயிற்சி வகுப்பில் இணைந்தேன். அப்போதெல்லாம் மூன்று மாதம் பயிற்சிக் காலம், மூன்று மாதம் தகுதி காண் பருவம். பயிற்சிக் காலம் பணிக்காலமாக கணக்கில் எடுக்கப் படாது. 1990 க்குப் பிறகு பயிற்சிக்காலம் என்று தனியாக கிடையாது. தகுதி காண் பருவம் ஆறு மாதங்களாகி விட்டது. 

எல்.ஐ.சி கணக்கில் சேர்க்காவிட்டாலும் நான் இணைந்தது இந்த நாள்தானே! அதனால் அதனை கணக்கில் கொண்டால் இந்த நாளில் நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். நாற்பதாவது ஆண்டை நிறைவு செய்ய முடியாது. ஏனென்றால் 3107.2025 அன்று பணி நிறைவு.

இந்த நாற்பது ஆண்டு கால அனுபவங்களை நினைத்துப் பார்த்து நல்ல, சவாலான அனுபவங்களை பின்னர் பகிர்ந்து கொள்வேன்.

சமூகத்தில் ஒரு மதிப்பும் பொருளாதார தன்னிறைவும் எல்.ஐ.சி யால்தான் கிடைத்தது என்பதை பதிவு செய்கிறேன். அதன் பின்புலமாக இருந்தது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்தான் என்பதை இன்னும் அழுத்தமாக பதிவு செய்கிறேன்.

முதல் நாள் மனதில் இன்றும் நிலைத்திருக்கிறது.

அலுவலக பயிற்சி வகுப்பு சுய அறிமுகம், அதிகாரிகளின் வாழ்த்துரை (முதுநிலை கோட்ட மேலாளருக்கு அன்றுதான் பதவி உயர்வு ஆணை வந்திருந்ததால் அவருக்கான வாழ்த்துரை), எல்.ஐ.சி பற்றிய அறிமுகம் என்று கழிந்தது.

மாலையில்தான் முக்கியமான சம்பவம்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அறிமுகக் கூட்டம். மகத்தான் தலைவரும் அன்றைய தென் மண்டல இணைச்செயலாளர் தோழர் எஸ்.ராஜப்பா அவர்களின் கம்பீரமான உரை சங்கத்தை நோக்கி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான துவக்கப்புள்ளி. 




எப்படி மறக்க இயலும் இந்நாளை !!!

Tuesday, April 15, 2025

எம்.எஸ் மீதான பாசமல்ல,கிருஷ்ணா மீதான வன்மமே

 



 

                                          

நூல் அறிமுகம்

 

நூல்                                                    : எம்.எஸ். காற்றினிலே கரைந்த துயர்

ஆசிரியர்                                         : டி.எம்.கிருஷ்ணா

தமிழில்                                             : அரவிந்தன்

வெளியீடு                                        : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்,

                                                               நாகர்கோயில்

விலை                                                 ரூபாய் 50.00

 

மியூசிக் அகாடமி கடந்த ஆண்டு சங்கீத கலாநிதி விருதை இசைக் கலைஞர் திரு டி.எம்.கிருஷ்ணாவிற்கு அறிவித்த போது அதற்கு எதிராக சிலர் அறிக்கைகள் வெளியிட்டனர்,  நீதிமன்றத்துக்குக் கூட ஒருவர் சென்றார். கர்னாடக இசை மேதை திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியை ஒரு கட்டுரையில் இழிவு படுத்தி விட்டார் என்பது எதிர்ப்புக்கான காரணங்களில் ஒன்றாக சொல்லப்பட்டது.

 

அந்த கட்டுரையின் தமிழாக்கம்தான் இந்த நூல். அந்த நூலை முழுமையாக படிக்கும் போதுதான் எப்படிப்பட்டதொரு பொய்ப் பிரச்சாரம் நடந்துள்ளது என்பதை உணர முடியும்.

 

இந்த நூலின் தொடக்கமே டி.எம்.கிருஷ்ணா, தன் குருவான செம்மங்குடி சீனிவாச அய்யரோடு ஒரு தியாகராஜர் கீர்த்தனையை கற்றுக் கொள்கையில் அங்கே வருகிற எம்.எஸ்.சுப்புலட்சுமியும் அவர்களோடு இணைந்து பாடிய நெகிழ்ச்சியான அனுபவத்துடனேதான் அமைந்துள்ளது. “நாட்டின் மகத்தான இரு இசைக் கலைஞர்களோடு இணைந்து நான் பாடிக் கொண்டிருந்த அந்த மதியப் பொழுதை எந்நாளும் என்னால் மறக்க இயலாது. இது தூய்மையான, உண்மையான உயிர்த்துடிப்பு கொண்ட உத்வேகமூட்டும் நினைவு” என்று விவரிக்கிறார் அவர்.

 

பொலிவியாவில் மலையேற்றத்துக்கு சென்ற போது 16,000 அடி உயரத்தில் கூடாரத்தில் நீண்ட இரவுகளில் துணையாய் இருந்ததும் எம்.எஸ் ஸின் பாடல்களே என்று கூறும் டி.எம்.கிருஷ்ணாவா அவரை இழிவு படுத்தினார்? அப்படி என்ன நூலில் எழுதப்பட்டுள்ளது?

 

திருமதி எம்.எஸ் அவர்களின் துவக்க கால வாழ்க்கையைப் பற்றியும் அப்போதே அவர் இசையில் உச்சத்தை தொடுவார் என்பதற்கான அடையாளம் இருந்ததாக விவரிக்கிற அவர், பின்பு தன் அன்னையோடு முரண்பட்டு ஆனந்த விகடன் பிரிவு மேலாளர் திரு சதாசிவம் வீட்டில் தஞ்சமடைந்ததையும் சதாசிவம் எம்.எஸ் ஸை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதையும் எழுதுகிறார்.

 

அதன் பின்பு எம்.எஸ் அவர்களின் இசை வாழ்வு உட்பட ஒட்டு மொத்த வாழ்க்கையும் சதாசிவம் அவர்களால் கட்டமைக்கப்பட்டது என்பதை நூல் விவரிக்கிறது. எந்த கச்சேரியில் எந்த பாடலை எத்தனை நேரம் பாட வேண்டும், எந்த புடவை அணிய வேண்டும் உட்பட எல்லாவற்றையும் சதாசிவமே முடிவு செய்வார் என்பதையும் சில சமயங்களில் கச்சேரியில் பாடிக் கொண்டிருக்கையில் கூட அந்த கீர்த்தனையை நிறுத்தி விட்டு, அவசரமாக புறப்படப்போகும் வி.ஐ.பி பார்வையாளருக்காக பஜன் பாடலை பாட வைப்பார் என்பதையும் நூலில் பதிவு செய்துள்ளார்.  அதே போல அதிகமான கை தட்டல்கள் கிடைக்கும் என்பதற்காக ஒவ்வொரு கச்சேரியிலும் சங்கராபரணம் ராகத்தையே பிரதான பாடலாக பாட வைப்பார் என்பதையும் மற்ற பல ராகங்களையும் அவர் மிகச்சிறப்பாக பாடுவார் என்றாலும் அதற்கான வாய்ப்பு அவருக்கும் ரசிகர்களுக்கும் மறுக்கப்பட்டது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இது புதிதான செய்தி அல்ல, கர்னாடக இசை ரசிகர்கள் அறிந்ததுதான்.

 

துளசிதாசர், கபீர், குருநானக் ஆகியோரின் பாடல்கள், ரபீந்திர சங்கீத், மீரா பஜன் என பலவகை இசைகளை தீவிரமாக கற்றுக் கொண்டதன் விளைவாக பாடலை இயற்றியவர், அதன் தன்மை, நோக்கம் ஆகியவற்றுக்காக தன்னுடைய ஆளுமையின் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது என்று குறிப்பிடும் ஆசிரியர் பல வகை இசைகளை அவர் பாடினாலும் ஒரு வகை இசையின் சாயல் இன்னொரு சாயலில் கொஞ்சமும் இருக்காது என்று சொல்லி இது கண்டுகொள்ளப்படாத அபார சாதனை என்றும் பாராட்டுகிறார்.

 

அதே போல  கச்சேரிகளில்  துக்கடா என்றழைக்கப்படும் பாடல்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க எம்.எஸ் தான் காரணம் என்று சொல்கிற கிருஷ்ணாஅவர் அழகாக பாடும் துக்கடாக்களின் சமய ரீதியிலான அம்சத்தில் கவனம் செலுத்தும் ரசிகர்கள் எம்.எஸ் அவர்களின் இசை ஞானத்தை பொருட்படுத்தவில்லை என்று குறிப்பிடுகிறார். இன்றளவும் மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படும் “வெங்கடேச சுப்ரபாதம்” பாடியது அவர் இசை வாழ்வில் பெரிய வீழ்ச்சியை அளித்தது என்றும் அவரது இசையை ரசிகர் தெய்வீக இசை என்ற வட்டத்துக்குள் அடைக்கப்பட்டு விட்டார் என்றும் குறிப்பிடுகிறார்.

 

இந்த நூலில் அவர் வைக்கிற விமர்சனம் என்பது பக்க வாத்தியங்களுடன் செய்கிற பயிற்சி என்பது பிழையற்ற கச்சேரி என்ற வடிவத்தை கொடுத்தாலும் படைப்பூக்கம் குறைந்து போய் விடுகிறது என்பதுதான். அது அவர் இசைத்திறனை சிறுமைப் படுத்துகிறது இதனைக்கூட  இசைக்கலைஞர் அல்லாத ஒருவர், அவர் கணவராக இருந்தாலும் கட்டுப்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று ஆதங்கத்தைத்தான் வெளிப்படுத்துகிறார்.

 

எம்.எஸ் ஸிற்குள் ஒரு சோகம் குடி கொண்டிருந்தது என்றும் அவர் இசை வாழ்வின் மீது செலுத்தப்பட்ட கட்டுப்பாடுகளால் அந்த சோகம் உருவாகியிருக்கலாம் என்று கணிக்கிற கிருஷ்ணா கர்னாடக இசை உலகில் தனக்கான அங்கீகாரம் அவரது ப்ஜனைகள், துக்கடாக்கள் ஆகியவற்றுக்காக கிடைத்தது போல கர்னாடக இசை வடிவங்களான கீர்த்தனை, வர்ணம், தில்லானா போன்றவைக்காக கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் எப்போதுமே அவருக்கு இருந்தது என்பதையும் பதிவு செய்கிறார்.

 

நூலின் இறுதிப் பத்தியில் கிருஷ்ணா நிறைவாக சொல்வது மிக முக்ககியம்.

 

“எம்.எஸ் மன உறுதி மிக்கவர், வலிமையானவர், கவனக்குவிப்பும் அர்ப்பணிப்பும், துணிச்சலும் கொண்டவர்,  உள் முகமானவர், வெள்ளை உள்ளம் கொண்டவர்,  மென்மையானவர், கர்னாடக இசை உலகம் அவர் இசையை   எளிமைப்படுத்தி தெய்வீக இசை, சாதாரண இசை என்னும் இரண்டு வகைமைக்குள் அடக்கி விட்டது. அவரது இசை இந்த இரண்டு அம்சங்களையும் கொண்டிருந்ததுடன் இவை இரண்டுக்கும் இடையிலும் இருந்தது. அவரும் அவரின் இசையும் நம்மை எப்போதும் வசீகரிக்க தவறுவதில்லை. உண்மையான எம்.எஸ் எங்கே இருக்கிறார் என்னும் பதிலளிக்கப்படாத கேள்வியை அவரும் அவர் இசையும் என்றுமே எழுப்பிக் கொண்டுதான் இருப்பார்கள்”

 

மறைந்த இசை மேதை பற்றி தற்கால இசை மேதை தன் மனதில் உள்ளவற்றை வெளிப்படையாக எழுதியுள்ளார். அதனை முழுமையாக படிக்காதவர்கள் மட்டுமே டி.எம்.கிருஷ்ணா, திருமதி எம்.எஸ்.சுப்புலட்சியை இழிவு படுத்தி விட்டார் என்று கூக்குரல் எழுப்புவார்கள். படித்தும் சிலர் சர்ச்சையில் ஈடுபட்டால் அவர்கள் மனதில் கிருஷ்ணா மீது வன்மம் நிரம்பியிருக்கிறது என்றுதான் அர்த்தம்.

 

(எங்கள் கோட்ட இதழ் சங்கச்சுடருக்காக எழுதியது)

 

 

Monday, April 14, 2025

இனி காமெடிகளுக்கு பஞ்சமில்லை

 


நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவு கீழே உள்ளது. அப்போது போல இப்போது மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி உருவாகியுள்ளதால் சங்கி மூடர்களின் சகவாசத்தால் அதிமுகவினரும் நமக்கு மீண்டும் ஏராளமான நகைச்சுவைக் காட்சிகளை அள்ளி வழங்குவார்கள் என்று நம்புகிறேன். ஆட்டுக்காரன் இல்லாத குறையை அதிமுகதான் போக்க வேண்டும். 

ஜெய்சங்கர் – விஜயகாந்த் பட்டங்கள் மாறுது.

 


இனி ஜெய்சங்கர் மக்கள் கருணாநிதி என்றும்

விஜயகாந்த் புரட்சிக்  கருணாநிதி என்றும்
 
அன்போடு அழைக்கப்படுவார்கள்.
 
ஆமாம். அதிமுகவின் பொன் விழா ஆண்டு மலரில்
எம்.ஜி.ஆர் ஒரு தேர்ந்த புகைப்படக் கருணாநிதி

 
ன்று சொல்லப்பட்டத்தை விரிவு படுத்தினால் இது சரிதானே!
 
இன்னும் எத்தனை இருக்கிறது!
 
ஓவியக் கருணாநிதி
இசைக் கருணாநிதி
சிற்பக் கருணாநிதி
  
 கலைஞர் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் வெறுமனே கருணாநிதி என்று மட்டும் விளித்து அவரை அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைத்த அதிமுக அசிங்கப்பட்டிருக்கிறது.

 எல்லாம் சகவாச தோஷம்!

 பாஜகவுடனான கூட்டணி என்பதால் அவர்களைப் போலவே இவர்களுக்கும் மூளை வேலை செய்வதில்லை

அண்ணல் அம்பேத்கரும் அடுத்த தேர்தலும்

 


இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மக்கான் முனையில் இருந்த சிலைக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாலை அணிவிக்க சென்ற போது பார்த்த காட்சிகள் சுவாரஸ்யமானது.

அங்கே சென்ற போது ஒரே காவிமயம். முதல் முறையாக பாஜக  ஆட்கள் அங்கே  கூடியிருந்தார்கள். கொடிகள் மட்டும் இருந்தால் அவர்கள் யார் என்று தெரியாது என்ற நினைப்போ என்னமோ, பிஜேபி என்று அச்சிடப் பட்ட துண்டுகளை அணிந்திருந்தார்கள். காத்திருந்தார்கள், காத்திருந்தார்கள், காத்துக் கொண்டே இருந்தார்கள்.

அதிமுகவின் சார்பில் வேலூர் மேயராக இருந்து, எங்கள் சங்க மாநாட்டிற்கு மொட்டைக்கடிதத்திற்கு பயந்து டிமிக்கி கொடுத்து, 2024 ல் சிதம்பரம் மக்களவைத் தேர்தலில் தோற்றுப் போன கார்த்தியாயணி அம்மையாருக்காக அவர்கள் காத்திருந்தார்கள்.  அந்த அம்மையார் வந்து மாலை அணிவித்த பின்பு போட்டோ ஷூட் நடத்தி விட்டு ஒரு வீர உரை வேறு ஆற்றினார்.

மோடியின் கட்சியல்லவா! மோடியைப் போலவே பொய்யாகவே அள்ளி விட்டார். அண்ணல் அம்பேத்கருக்கு மோடிதான் நாடாளுமன்றத்தில் சிலை வைத்தார் என்று சொன்னாரே ஒரு கதை, அப்படியே ஆடிப் போய் விட்டேன். நாடாளுமன்றத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கர் சிலையை பின் பக்கத்தில் மாற்றி வைத்து சிறுமை செய்து விட்டு என்ன பேச்சு இது!

அடுத்த போட்டோ ஷூட் த.வெ,க தம்பிகளுடையதுதான். அவர்கள் வாயிலிருந்து ஒரு முழக்கம் கூட வரவில்லை. பெரும்பாலும் சின்ன வயது பையன்கள், பெண்கள்.  ட்ரோன் வைத்தெல்லாம் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்களில் ஒரு மூத்த பையன் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை போட்டதும் ஒரே விசில் சத்தம். திரையில் விஜய் தோன்றியதும் அடிக்கும் விசிலை இங்கேயும் அடித்து விட்டார்கள். நல்ல வேளை பேப்பரெல்லாம் கிழித்துப் போடவில்லை.

டி.டி.வி தினகரன் கோஷ்டியிலிருந்து கூட ஆறேழு பேர் வந்து மாலை போட்டு விட்டு சென்றார்கள்.

அதிமுகவிலிருந்து கூட சிலர் வந்திருந்தார்கள். இவர்கள் இன்று மாலை போட்ட  அதிமுகவின் மூன்றாவது கோஷ்டி என்று மூத்த தோழர் ஸ்ரீதர் சொன்னார்.

தேமுதிக, மக்கள் நீதி மய்யம் கட்சியெல்லாம் வேறு வந்திருந்தார்கள்.

திமுகவில் இந்த வருடம் அமைச்சர் துரை முருகன், எம்.பி கதிர் ஆனந்த், மற்றும் லோக்கல் தலைவர்கள் வந்திருந்தார்கள். போன சட்டசபை தேர்தலுக்கு முன்பாக துரை முருகன் வந்திருந்தார். அப்போது அவர் காரிலேயே அமர்ந்து மாலையை தொட்டுக் கொடுத்தார். இந்த வருடம் சிலை வரைக்கும் நடந்து வந்தார். அவரை அப்படியே தூக்கிக் கொண்டு போவார்களோ என்று பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளை அப்படியெல்லாம் அவரை படுத்தவில்லை.

அதென்ன இந்த வருடம் அண்ணல் அம்பேத்கர் மீது அப்படியென்ன இத்தனை கட்சிகளுக்கு திடீர் பாசம்?

எல்லாம் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் வருவதுதான் . . .

அடுத்த வருடம் வாக்குப்பதிவு முடியவில்லையென்றால் வருவார்கள். இல்லையென்றால் . . .

பிகு : மேலே உள்ள அண்ணல் அம்பேத்கரின் ஓவியத்தை வரைந்தது தோழர் ரவி பாலேட். 

Sunday, April 13, 2025

அடிச்சு துரத்தலைன்னா ஆட்டுத்தாடி???

 


உனக்கொன்றும் வானளாவிய அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதி மன்றம் சவுக்கடி தீர்ப்பு கொடுத்து விட்டது.

வெட்கம், மான,. ரோஷம், சூடு, சொரணை உள்ள ஆளாக இருந்திருந்தால் ஆரெஸெஸ்.ரெவி எனும் அந்த அற்ப ஜந்து, இந்நேரம் ராஜ் பவனை காலி செய்து விட்டு பீகாருக்கு ஓடி, பால்ய விவாகம் செய்த மனைவியோடு குடித்தனம் செய்து கொண்டிருக்கும்.

ஆனால் இதுதான் அப்படிப்பட்ட விழுமியங்கள் எதுவும் இல்லாத ஜந்து அல்லவா!

அதனால்தான் நரபலி கேட்கும் காபாலிகர்களின் புதிய முழக்கமான "ஜெய்ஸ்ரீராம்" முழக்கத்தை கல்லூரி விழாவில் எழுப்பியுள்ளது. இன்னும் சில நச்சுக்கருத்துக்களை வேறு கக்கியுள்ளது.

அடித்து துரத்தும் நிலைக்கு அது தள்ளிக் கொண்டிருக்கிறது. அது வரை இன்னும் அதிகமான விஷத்தனங்களைக் கூட செய்யும்.

அதற்காக நாம் பொறுமை இழக்கக் கூடாது. 

ஆட்டுக்காரன் இல்லாத குறையை ஆட்டுத்தாடி ரெவியால் மட்டும்தான் போக்க முடியும். அது கக்கும் விஷமெல்லாம் விழிப்புணர்வை தூண்டும் அமிர்தம்.

பிகு" கல்கி அவர்களின் பார்த்திபன் கனவு நாவலில் நரபலி கொடுக்கும் காபாலிகர்கள் "ஓம் காளி, ஜெய் காளி" என்றுதான் முழக்கமிடுவதாக எழுதியிருப்பார்கள். சில ஆண்டுகள் வரை நவீன காபாலிகர்களான சங்கிகளும் "ஓம் காளி, ஜெய் காளி" என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போதுதான் "ஜெய்ஸ்ரீராம்" என்று மாற்றியுள்ளார்கள். 

Saturday, April 12, 2025

மதுரைச் செங்கடலின் சிறு துளியாய் . . .

 


மதுரையில் சிவப்பாய், பிரம்மாண்டமாய்

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு மதுரையில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.

 மாநாட்டின் நிறைவு நாளான 06.04.2025 ஞாயிறன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்க மதுரை சென்றிருந்தோம்.

 காலையில் 7 மணிக்கு வேலூரில் புறப்பட்ட நாங்கள் மதியம் 2.30 மணிக்கெல்லாம்  மதுரை சென்று விட்டோம். பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்ற தமுக்கம் மைதானத்திற்குத்தான் முதலில் சென்றோம்.

 நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருந்த காரல் மார்க்ஸிற்கு பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதும் ஒரு நோக்கம். கிட்டத்தட்ட ஐநூறு தோழர்களுக்கு மேல் வரிசையில் காத்திருந்த காரணத்தால் அது இயலவில்லை. 



கலை நிகழ்ச்சிகளுக்கான மேடையில் அமைக்கப்பட்டிருந்த மார்க்ஸுடனும் வள்ளுவரோடும் புகைப்படம் எடுத்துக் கொண்டு ஆறுதல் அடைந்தோம்.




 மிகவும் சிறப்பான தகவல்களோடு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்த்தது தமுக்கம் சென்றதை நிறைவாக்கியது. தியாகிகள் ஸ்தூபி மற்றும் ராமையாவின் குடிசை பற்றி தனியாக எழுத வேண்டும்.

 அங்கிருந்து பொதுக்கூட்ட மைதானம் வந்தடைந்தோம்.  மதுரை முழுதும் செங்கொடிகளால், செந்தோரணங்களால் சிவந்து போயிருந்தது.

 இதற்கு முன்பாக கோவையில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டு பொதுக்கூட்டம், கோவை, சென்னை, நாகை ஆகிய இடங்களில் நடைபெற்ற மாநில மாநாட்டு பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கிறேன். இந்த முறை மதுரையில் திரண்ட தோழர்கள் அளவிற்கு இதற்கு முன் எந்த இடத்திலும் நான் பார்க்கவில்லை.  தோழர்களின் மானுட சமுத்திரமாகவே பொதுக்கூட்ட மைதானம் நிரம்பி  வழிந்தது.










 நாங்கள் சென்ற நேரம் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தது. குமரி முரசு கலைக்குழுவின் ஆட்டக்கலைகள் அதிரடியாய் அமைந்திருந்தது. காம்ரேட் கேங்க்ஸ்டா குழுவின் ரேப் நடனம் ஏனோ என்னை கவரவில்லை (வயதானதன் அறிகுறியோ?) புதுகை பூபாளம் எப்போதும் போல கலக்கினார்கள்.

 மாநிலச்செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களின் தலைமையுரை, மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் வரவேற்புரை, சிறிது நேரமானாலும் எழுச்சியுடன் பேசிய மூத்த தலைவர் தோழர் பிருந்தா காரத்,  கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயனின் ஆழமான உரை  வரை அரங்கில் இருந்தோம்.  தோழர் பினராயி ஆங்கிலத்தை விட மலையாளத்தில் பேசியிருந்தால் இன்னும் கெத்தாகவும் கம்பீரமாகவும் இருந்திருக்கும் என்று எங்களுக்கு முன் வரிசையில் இருந்த கேரளத் தோழர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழாக்கத்தில் கூட சில சொதப்பல்கள் இருந்தது.

 எட்டு மணிக்கு புறப்படுவது என்பதுதான் திட்டம். மிகப் பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இரண்டு பாதைக:ள் அடைக்கப் பட்டுள்ளதால் பொதுக்கூட்ட மைதானத்திற்கு வர இயலாமல் பல வாகனங்கள் தவிப்பதால் அவர்கள் வர காவல் துறை ஒத்துழைக்க வேண்டும் என்று தோழர் சு.வெங்கடேசன் வேண்டுகோள் விடுக்க எங்களுக்கு கொஞ்சம் அச்சம் வந்தது. புதிதாக அரசியல் தலைமைக்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே புறப்பட்டு விட்டோம்.

 மிகப் பெரிய சவாலான காலகட்டத்தில் பொதுச்செயலாளர் பொறுப்பேற்றுள்ள தோழர் எம்.ஏ.பேபி அவர்களுக்கும் அரசியல் தலைமைக்குழுவிற்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்வாகியுள்ள தோழர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் தோழர் உ.வாசுகி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். எங்கள் சங்கத்தின் மேற்கு மண்டல பொதுச்செயலாளரான குஜராத்தைச் சேர்ந்த தோழர் ஹெச்.ஐ.பட் மத்தியக்குழு உறுப்பினராக தேர்ந்த்டுக்கப்பட்டுள்ளார்.  அவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.




 பொதுக்கூட்டம் முடியும் வரையில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று வருத்தம் உண்டு. நாங்கள் செல்ல வேண்டிய மேலூர் சாலை அடைக்கப் பட்டிருந்தது. ஒரு மகளிர் போக்குவரத்து துணை ஆய்வாளர், வேறு ஒரு வழியை மிகவும் நிதானமாக,  ஒரு குழந்தைக்கு சொல்வது போல அவ்வளவு தெளிவாக சொன்னார். அந்த பாதையில் போக்குவரத்து நெரிசல் அல்ல, போக்குவரத்தே இல்லை. இருந்தும் வீடு வந்து சேர்ந்த போது காலை 3.45 மணி. வழக்கமாக அந்நேரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் மேனகா காந்தியின் நண்பர்கள் அன்று என்னமோ வெறியோடு துரத்தினார்கள், ஜனநாயகத்தை அழிக்க முயலும் மோடி அரசின் வேகத்தோடு . . .

 மதுரையில் சங்கமித்த மாபெரும் செங்கடலின் சிறு துளியாக நாமும் இருந்தோம் என்ற மன நிறைவுடன் வீட்டிற்குள்ளே நுழைந்தேன், பாதுகாப்பாக. . .செங்கொடியின் கீழ் இந்திய ஜனநாயகமும் பாதுகாப்பாக இருக்கும் என்று மதுரை செங்கடல் தந்த நம்பிக்கையோடு . . .

 

நேற்று அத்வானி, இன்று மோடி

 


அன்று கை கூப்பி வணங்கிய அத்வானியை அலட்சியம் செய்த மோடி


இன்று கை கூப்பி வணங்கும் போது அவரை அலட்சியம் செய்வது பாஜகவின் குரு பீடம் ஆர்,எஸ்.எஸ் அமைப்பின் சர்சங்சாலக் மோகன் பகவத்


இதைத்தான் அன்றே வள்ளுவர் சொன்னார்

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் - தமக்கின்னா 
பிற்பகல் தாமே வரும்

என்று . . .



Friday, April 11, 2025

ஆட்டுக்காரனுக்கு பாத்து ஏதாவது செய்யுங்கய்யா

 


பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப் பட்டு விட்டார். ஆட்டுக்காரன் இல்லாதது உண்மையிலேயே வருத்தம்தான்.  அவருக்கு புடிக்காத அதிமுகவோட கூட்டணி வேற. 




புள்ள மூஞ்சியை பாருங்க! எப்படி சோகத்துல இடிஞ்சு போயிருக்கு பாருங்க! பதிவுகள் எழுத, மீம்கள் உருவாக்க தொடர்ந்து கண்டெண்ட் கொடுத்துக் கொண்டிருந்த  ஒரு ஆள் இனி இல்லை என்றால் வருத்தம் இருக்காதா என்ன?

 ஏதாவது செய்யுங்கய்யா!

 எல்.முருகனுக்கு கொடுத்த மாதிரி, ஆட்டுக்காரனுக்கும் ஏதாவது மந்திரி பதவி கொடுத்து அதில் அவரது குணாம்சத்தின் படி சொதப்பி முட்டாள்தனத்தை வெளிப்படுத்தி வழக்கம் போல் கண்டெண்ட் கொடுக்க வழி செய்யுங்கய்யா.

 ஏதாவது பாத்து போட்டு கொடுங்க . . .

Thursday, April 10, 2025

அந்த அரசியல்வாதியும் இசை ஞானமும்

 


சங்கீத கலாநிதி டி.எம்.கிருஷ்ணாவின் முகநூல் பதிவொன்று மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததால் அதனை தமிழாக்கம் செய்து பகிர்ந்து கொள்கிறேன்.

"திரு ஆர்.எம்.வீரப்பன் அவர்களைப் பற்றிய ஒரு ஆவணப்படம் இன்று வெளியாகியுள்ளது. அவரைப்பற்றிச் சொல்ல என்னிடம் ஒரு கர்னாடகக் கதை ஒன்று உள்ளது.

திரு ஆர்.எம்.வீரப்பன் பல கர்னாடக இசைக் கச்சேரிகளுக்கு தொடர்ச்சியாக வருபவர்.

நான் புதுமுகமாக இருந்த காலத்தில் என்னுடைய கச்சேரி ஒன்றுக்கு வந்திருந்தார். அந்த கச்சேரியில் நீலகண்ட சிவன் முகாரி ராகத்தில் உருவாக்கிய "இன்றைக்கு சிவ கிருபை வருமோ?" என்ற கீர்த்தனையை பாடினேன். 

கச்சேரி முடிந்ததும் மேடைக்கு வந்து என்னை பாராட்டிய அவர் "சிவ கிருபை வருமோ" கீர்த்தனையின் அனு பல்லவி வரிகளை சொல்லச் சொன்னார். பாதியில் நிறுத்திய அவர், நான் எங்கே தவறு செய்தேன் என்று சுட்டிக் காட்டி "இந்த கீர்த்தனையை முசிறி பாடி கேட்டுள்ளீர்களா?' என்றும் கேட்டார். அதனை நான் கேட்க வேண்டியது அவசியம் என்பதை அவர் நாசூக்காக சொன்னார்.

கர்னாடக இசைக் கலைஞர்களான எங்களுக்கு அரசியல்வாதிகளுக்கு இசை பற்றி எதுவும் தெரியாது என்றொரு கருத்து உண்டு. அது எவ்வளவு தவறான கருத்து என்பதை இச்சம்பவம் உணர்த்தியது." 

இந்த சம்பவத்தை எழுதிக் கொண்டிருக்கும் போதே இசை ஞானம் கொண்ட இன்னொரு அரசியல் வாதி நினைவுக்கு வந்தார். மிருதங்க மேதை உமையாள்புரம் சிவராமன் பற்றி அவர் எழுதிய கட்டுரையைக் கூட இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

அந்த அரசியல்வாதி யார்?

அவர்

தோழர் எம்.ஏ.பேபி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளர்.

பிகு :  அவருக்கு வாழ்த்து தெரிவித்தோ, மதுரை போய் விட்டு வந்தது பற்றி கூட இன்னும் எழுதவில்லை என்பதும் இப்போது நினைவுக்கு வந்தது. எழுதுவேன்.  

சங்கிகள் மட்டுமல்ல அதிமுகவினரும் கூட . . .

 


சங்கிகள் மூடர்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். அதிமுக உறுப்பினர்கள் கூட அப்படித்தான் இருந்திருக்கின்றனர் என்பதை பழைய பதிவு ஒன்று சொன்னது.

ஒரு தகவலை சரி பார்க்க பழைய பதிவுகளை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது கண்ணில் பட்ட பழைய பதிவு கீழே உள்ளது.

பதிவுக்கு செல்வதற்கு முன்பாக ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.

காங்கிரஸ் ஆட்சியில் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்தார்கள். அவருக்கு அந்த விருது அவசியமில்லை என்று ஒரு நீண்ட, நெடிய பதிவு ஒன்றை எழுதினேன். அதிகமான பின்னூட்டங்கள், ஆனால் அனைத்தும் நாகரீகமாக வந்த பதிவு அது.

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா அவசியமில்லை - சுட்டெரிக்கும் உண்மைகள்  என்ற அந்த பதிவை இணைப்பின் மூலம் அதனை படித்து விடுங்கள்.

 அந்த பதிவை குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் மூன்று பக்கத்திற்கு வெளியிட்டார்கள். அதற்கு வந்த வாசகர் கடிதம்தான் அதிமுகவினர் பற்றிய மதிப்பீட்டிற்குக் காரணம்.

 

Friday, November 29, 2013

எம்.ஜி.ஆர் "பாரத ரத்னா" வை திருப்பி அனுப்பினாரா? சொர்க்கத்திலிருந்தா? 

 

சச்சினுக்கு பாரத ரத்னா அவசியமில்லை என்று நான் எழுதியிருந்தது     கடந்த வெள்ளியன்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டர் இதழில்
பிரசுரமாகி இருந்தது. அக்கட்டுரைக்கான வாசகர் கடிதங்கள் இன்று
வெளியான குமுதம் ரிப்போர்ட்டர்  இதழில் பிரசுரமாகியுள்ளது.

மொத்தம் ஏழு கடிதங்கள். அதிலே நான்கு கடிதங்கள் எனது கருத்திற்கு
ஆதரவாகவும் மூன்று கடிதங்கள் மாற்றுக் கருத்துக்களோடும் 
வெளியாகியுள்ளது. 

பொது வெளியில் எழுதும் போது விமர்சனங்கள் கண்டிப்பாக வரும்  என்ற புரிதலோடுதான் எழுதுகிறோம். அது வாசகர்களுக்கான  கருத்துச் சுதந்திரம். இது வலைப்பக்கத்திற்கும் பொருந்தும். என்ன வரும் பின்னூட்டங்கள் கொஞ்சம் வன்மத்தோடோ, வக்கிரத்தோடோ இல்லை அபத்தமாகவோ, இல்லை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இடப்பட்டால் கொஞ்சம் கடுமையாக எதிர் வினை ஆற்ற வேண்டியுள்ளது.

சரி இப்போது விஷயத்திற்கு வருகிறேன்.மாற்றுக் கருத்தோடு வந்த மூன்று கடிதங்களும் எம்.ஜி.ஆர் பற்றி   நான் எழுதியிருந்ததை சரியாக புரிந்து கொள்ளாமல் எழுதப்  பட்டவை. அதற்கும் விளக்கமளிக்க முடியும். ஆனாலும் நான்  எழுதப் போவதில்லை. மிகவும் போரடித்து விட்டது.

ஆனாலும் கூட

சிவகாசியைச் சேர்ந்த  ரெய்கி செ.வேதமூர்த்தி அவர்கள் எழுதிய
கடிதத்தை படித்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.

இதோ அந்த கடிதம்.

"பாரத ரத்னா விருது குறித்து எஸ்.ராமன் அநாவசியமாக     எம்.ஜி.ஆரையும்  அவரது  தொண்டர்களையும் வம்புக்கு இழுக்கிறார். இதை அப்போதே கருணாநிதி செய்து எம்.ஜி.ஆர் திருப்பி அனுப்ப,  ' இல்லை. உங்களுக்கு தகுதியின் அடிப்படையில்தான்   தரப்பட்டதாக மத்திய அரசும் விளக்கமும் தந்தது""

நான் எனது கட்டுரையில் எம்.ஜி.ஆருக்கு அவர் இறந்ததற்குப்   பின்பே பாரத ரத்னா அளிக்கப்பட்டது என்பதை மிகவும் தெளிவாக  எழுதியிருந்தேன். மரணத்திற்குப் பிறகு அளிக்கப்பட்ட    பாரத ரத்னா விருதை திருமதி ஜானகி ராமச்சந்திரன் பெற்றுக்  கொள்ள, அதை எம்.ஜி.ஆர் எப்படி திருப்பி அனுப்பினார்? 


மத்திய அரசு எம்.ஜி.ஆருக்கு எப்படி விளக்கம் அளித்தது?   யார் எங்கே சென்று விளக்கம் அளித்தார்கள்? யார் எம்.ஜி.ஆருக்கு   விளக்கம் அளிக்க சொர்க்கம்/நரகம் சென்றார்கள்? 

இதற்குத்தான் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசியில்  வடிவேலு மிகவும் தெளிவாக, ஆணித்தரமாக சொன்னார்.

" வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே"

 

 

Wednesday, April 9, 2025

செம காமெடி சீமான் . . .

 


முகநூலில் நான் பார்த்து ரசித்த, வாய் விட்டு சிரித்த ஒரு சீமான் காமெடி, கீழே, நீங்களும் சிரிக்க . . .