Thursday, December 5, 2024

கோவாவில் உடைக்கப்பட்ட மாண்டோவி பாலம்

 



 செங்கத்தில் இடிந்து போன தென் பெண்ணை பாலத்தை பார்க்கும் போது கோவாவில் இடிக்கப்பட்ட பாலம் ஒன்று நினைவுக்கு வந்தது.

 1988 ல் நெய்வேலியில் பணியாற்றிய போது பத்து தோழர்கள் விடுமுறை பயணச்சலுகையில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் பேக்கேஜ் டூரில் பேருந்தில்   கோவா சென்றோம்.

 கோவாவில் தெற்கு கோவாவிற்கும் வடக்கு கோவாவிற்கும் இடையில் மாண்டோவி நதி ஓடுகிறது.

 நாங்கள் தெற்கு கோவாவிலிருந்து  வடக்கு கோவாவிற்கு எப்படி சென்றோம் தெரியுமா?

 என்னய்யா கேள்வி இது!

 பேருந்தில் டூர் போனீர்கள் என்றால்வடக்கு கோவாவிற்கும் பேருந்தில்தான் போயிருப்பீர்கள்.

 இல்லை. பேருந்தில் செல்லவில்லை. வேனில் சென்றிருந்தோம். சரியாக சொல்ல வேண்டுமென்றால் வேனில் அமர்ந்திருந்தோம். ஆனால் அந்த வேனை சுமந்திருந்த படகுதான் நதியை கடந்தது. படகில் பேருந்து செல்ல TTDC விதிகள் அனுமதிக்காத்தால் எங்கள் GUIDE எங்களுக்காக ஒரு வேனை ஏற்பாடு செய்திருந்தார்.

 அது ஒரு அரிய காட்சி.  பெரிய தளம் அமைக்கப்பட்டிருந்த படகுகள், கார்கள், பஸ்கள், வேன்கள், இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு ஆற்றைக் கடந்தன. ஒவ்வொரு படகிலும் குறைந்த பட்சம் ஒரு பஸ், நான்கு கார், இருபது இரு சக்கர வாகனங்களை ஏற்றினர்.

 எங்கள் பேருந்தின் வழிகாட்டி (GUIDE) யிடம் ஏன் இந்த ஆற்றைக் கடக்க பாலம் இல்லையா என்று கேட்ட போது, வேனிலிருந்து இறங்கி வந்து வெளியே பார்க்கச் சொன்னார். நதியின் நடுவே ஒரு பாலம் இருந்தது. கேக்கை கத்தியால் வெட்டியது போல இரண்டு தூண்களுக்கு நடுவே பாலம் துண்டிக்கப் பட்டிருந்தது.

 புதிதாக ஒரு பாலம் கட்டி திறப்பு விழாவிற்கும் நாள் குறித்து விட்டார்கள். திறப்பு விழாவிற்கு முதல் நாள் இரவு வெடிகுண்டு மூலமாக பாலத்தை உடைத்து விட்டார்கள் படகு உரிமையாளர்கள் என்றும் அவர் சொன்னார். ஒரு பகுதி மட்டும் வெட்டப்பட்டிருந்தது அவர் சொன்னது உண்மைதான் என்பது போல இருந்தது.

 பிறகு 2009 ம் ஆண்டில் மனைவி, மகனோடு கோவா சென்றிருந்த போது வேறு ஒரு புதிய பாலம் கட்டப்பட்டிருந்தது. வாகனங்களை சுமந்து செல்லும் படகுகள் காணாமல் போயிருந்தது.

 எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர் தோழர் அமானுல்லாகான் ஒரு மாநாட்டில் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. “பெட்டிகளின் கீழே பொறுத்தப்பட்ட இரு சக்கரங்கள் பல்லாயிரக் கணக்கான போர்ட்டர்களின் வாழ்வாதாரத்தை பறித்து விட்டது.”

 பாலத்தின் மூலம் படகுகளின்  காலம் முடிந்து விட்டது.

 பிகு 1: இந்த பதிவை பகிர்ந்து கொள்ளும் முன் கைட் சொன்னதை உறுதி செய்து கொள்ள கூகிளின் துணையை நாடினேன். ஏற்கனவே ஒரு பழைய பாலம் செயல்பாட்டில் இருந்ததாகவும்  அது 1986 ல் இடிந்து போனதாக மட்டும் தகவல்கள் இருந்தது. புதிய பாலம் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு முந்தைய நாள் இடிந்து போனதாக எந்த தகவலும் இல்லை.  பாலம் பற்றிய சில கட்டுரைகளை திறக்க முடியவில்லை. நாங்கள் பார்த்த உடைந்த பாலம் புதிதாக கட்டப்பட்டதாகத்தான் தெரிந்தது. உண்மைகளை இணையத்தில் முடக்கி விட்டார்களா என்று தெரியவில்லை.

 

பிகு 2 : மேலே படத்தில் இருப்பது மாண்டோவி நதி. 2009 ல் நாங்கள் கோவா சென்ற போது எடுத்தது.

No comments:

Post a Comment