கர்னாடக சங்கீத அளவில் ஒரு குட்டிக்கலகம் நடந்து கொண்டிருக்கிறது. STORM IN A CUP என்று ஆங்கிலத்தில் சொல்வது போல ஒரு கோப்பைக்குள் வீசும் சூறாவளி என்று கூட சொல்ல முடியாத அளவிற்கு ஒரு குட்டிக் கலகம்.
சங்கீத வித்வத் சபை என்று அழைக்கப்படுகிற மியூசிக் அகாடமி இந்த ஆண்டு அதன் சங்கீத கலாநிதி விருதை இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவிற்கு அறிவித்திருப்பதற்கு ஒரு கோஷ்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் தாங்கள் மியூசிக் அகாடமியில் பாட மாட்டோம் என்று அறிவித்துள்ளார்கள். முகநூலிலும் பதிவிட்டுள்ளனர்.
ME TOO புகாருக்கு உள்ளானதால் கச்சேரி நிகழ்த்த அனுமதி மறுக்கப்பட்ட ரவிகிரண் அவருக்கு அளிக்கப்பட்ட சங்கீத கலாநிதி விருதை திரும்பக் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
பிற்போக்குச் சிந்தனைகளை கதாகாலட்சேபம் வழியாக விதைக்கும் விசாகா ஹரி, துஷ்யந்த் ஸ்ரீதர் போன்றோரும் எதிர்த்துள்ளனர். அபஸ்வரம் ராம்ஜி நக்கலடித்து ஸ்லோ பாய்சன் கொடுக்கிறார்.
இத்தனை பேரும் எதிர்க்கும் அளவிற்கு டி.எம்.கிருஷ்ணா விருதுக்கு தகுதியற்ற மொக்கைப் பாடகரா? இசைத்திறன் கொஞ்சமும் இல்லாமல் ரெகமெண்டேஷனில் விருது பெறுகிறாரா?
இல்லை.
நிச்சயமாக இல்லை.
இவர்களின் எதிர்ப்பெல்லாம் இசையால் அல்ல, அதையும் தாண்டியது.
கர்னாடக சங்கீதத்தின் புனிதத்தை சிறுமைப்படுத்தியவராம்.
அதென்ன சிறுமைப்படுத்துதல்?
சபா மேடைகளைத் தாண்டி மீனவக் குப்பங்களில் இசை நிகழ்ச்சி நடத்தியது, மற்ற மதக் கடவுள்களைப் பற்றி பாடியது.
ஐயப்பனைப் பற்றி கே.ஜே.யேசுதாஸ் பாடலாம், காசி விஸ்வநாதர் கோயிலில் பிஸ்மில்லாகான் ஷெனாய் வாசிக்கலாம். ஆனால் டி.எம்.கிருஷ்ணா வேற்று மதக் கடவுளை பாடினால் தவறாம்.
கர்னாடக சங்கீதம் புனிதமானதா என்ற கேள்விக்கு கே.பாலச்சந்தர், அப்படி ஒரு புடலங்காயும் கிடையாது என்று முப்பத்தி ஐந்து வருடம் முன்பே உன்னால் முடியும் தம்பி படத்தில் சொல்லி விட்டார்.
"என்னமோ ராகம், என்னென்னமோ தாளம், தலையை ஆட்டும் புரியாத கூட்டம்"
என்ற வரியை நிலைக்க வைக்கும் முயல்பவர்கள் இவர்கள்.
"கவலை ஏதுமில்லை, ரசிக்கும் மேட்டுக்குடி, சேரிக்கும் சேர வேண்டும், அதுக்கும் பாட்டு படி"
என்பதற்கு பதற்றமாகி விடுகிறார்கள்.
புனிதத்தை சிறுமைப்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டின் பின்னணி இதுதான்.
தியாகராஜரை விமர்சித்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமியை விமர்சித்தார் என்பது அடுத்த குற்றச்சாட்டு.
தியாகராஜரைப் பற்றி என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது. ஆனால் தியாகராஜரைப் போல அன்றாட உணவுக்கு வீடு வீடாக உஞ்சவிருத்தி சென்று வசூலிக்கும் நிலையில் எந்த இசைக்கலைஞரும் இல்லை. "நிதி சால சுகமா?" என்ற பாடலை பாட கூசுபவர்கள்தான் இன்றைய வித்வான் சிரோண்மணிகள்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி அதிகமாக மார்க்கெட்டிங் உத்திகளால் முன்னிறுத்தப்பட்டவர் என்பதில் உண்மையில்லாமல் இல்லை. அதை அவர் செய்யவில்லை. செய்தவர் அவரது தந்திரக்கார கணவரான சதாசிவம். எங்கள் தோழர் ச.சுப்பாராவ் தமிழாக்கம் செய்த நூலை படியுங்கள் புரியும்.
ர,கா சகோதரிகளின் முகநூல் பதிவு அவர்களின் உண்மையான எரிச்சலை அம்பலப்படுத்தி விட்டது.
ஒரு சமுதாயத்தை அழித்தொழிப்பேன் என்று சொன்ன, அந்த சமுதாயப் பெண்களை இழிவு படுத்திய பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வெ.ரா வை இவர் பாராட்டுகிறார்.
பெரியார் மீது சொல்லப்பட்ட குறிப்பிட்ட இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களும் அபாண்டமானவை. அனந்தகிருஷ்ண்ன் பட்சிராஜன் என்ற நாஜிப் பெரியவர் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் அவதூறு இது.
மீ டூ சமயத்தில் பட்ட அசிங்கத்திற்கு இப்போது எதிர்வினையாற்றுகிறார் சபலப் பேர்வழி ரவி கிரண்.
டி.எம்.கிருஷ்ணா மீது இவர்களுக்கெல்லாம் வேறென்ன பிரச்சினை?
கலை, கலைக்கு என்ற நிலைக்கு பதிலாக கலை யாவும் மக்களுக்கே என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்.
கர்னாடக இசை உலகில் நிலவிய பேதங்களை தன் நூல்கள் வாயிலாக அம்பலப்படுத்தியுள்ளார். அதிலே செபாஸ்டியனும் சகோதரர்களும் என்ற நூல் மிருதங்கம் உருவாக்கும் கலைஞர்களைப் பற்றியது. அது பல உண்மைகளை சொன்னது.
மத நல்லிணக்கம், மதச் சார்பின்மை ஆகியவற்றை தொடர்ந்து வலியுறுத்துபவர்.
மிக முக்கியமாக
குடியுரைமைச் சட்டத்திற்கு எதிரான டெல்லி ஷாகின்பாத் போராட்டத்தில் கலந்து கொண்டவர். போராட்ட கீதம் என்றழைக்கப்பட்ட "ஹம் தேகேங்கே (நாம் காண்போமே" பாடலை பல மொழிகளில் பாடியவர்,
இது ஒன்று போதாதா?
ரஞ்சனி காயத்ரி சகோதரிகளுக்கு மியுசிக் அகாடமி தலைவர் என்,முரளி கொடுத்த பதில் "உங்களுக்கு உள் நோக்கம் உள்ளது" என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆதிக்க சக்திகளின் குரல் இச்சகோதரிகள் வாயிலாக வெளிப்பட்டுள்ளது. அவர்களைப் பாராட்டுபவர்கள் எல்லோரும் அதே சிந்தனை கொண்டவர்கள்தான்.
இப்போது டி.எம்.கிருஷ்ணாவிற்கு எதிராக பொங்குகின்ற கர்னாடக இசை வித்வான் சிரோண்மணிகள் யாராவது மகள் ஆப்பிரிக்கரை திருமணம் செய்து கொண்டதற்காக சுதா ரகுநாதன் ஆபாசமாக வசை பாடப்பட்ட போது, அவருக்கு மேடைகள் மறுக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் அளிக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக வாய் திறந்தார்களா?
மேட்டிமைச் சிந்தனைக்கு புனிதப் போர்வை போர்த்தும் போலிகள்தான் இவர்கள்.. . .
No comments:
Post a Comment