Saturday, December 28, 2024

ஜெயமோகன் சிஷ்யன் கேரளா போனால்????

 ஜெயமோகனுக்கு முன்னாள் தான் இறந்து போகக்கூடாது என்பதுதான் தமிழ் இலக்கியவாதிகளின் முக்கியமான பிரார்த்தனையாக இருக்கும். இறந்த பின்பு அவர்களை சிறுமைப்படுத்துவது என்பது புளிச்ச மாவு ஆஜானுக்கு அல்வா சாப்பிடுவது போல.

ஜெயமோகனுடனான சகவாசம் இன்னொரு எழுத்தாளரையும் அதே பாணியில் மறைந்த மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரையும் சிறுமைப்படுத்த வைத்துள்ளது. 

ஒட்டு மொத்தமாக எம்.டி.வாசுதேவன் நாயரை சராசரி என்றால் சிக்கலாகும் என்ற அச்சத்தில் இலக்கியத்தில் சராசரி, திரைக்கதையில் உச்சம் என்று சமாளிக்கப்பார்க்கிறார்.

யார் எந்த ஜெமோ சிஷ்யன்?

நவீன கதை சொல்லி என்று அழைக்கப்படுகிறவர் அவர். 

பதிவை படித்தால் உங்களுக்கே புரியும்.

இல்லையென்றாலும் கடைசியில் சொல்கிறேன்.

தன் புத்தகத்தின் தமிழ் மொழி, மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழாவிற்காகத் திருவண்ணாமலைக்கு வந்திருந்த மனோஜ் குருர் (நிலம் பூத்து மலர்ந்த நாள்), சந்தோஷ் எச்சிகானும், நா. முருகேச பாண்டியன் ஆகியோரோடு ஒரு பின்னிரவில் பத்தாயத்துக் களத்து மேட்டில் கொஞ்சம் கலங்கிய நிலையில் உட்கார்ந்து இருந்தபோது, நான் தான் அந்த காட்டமான உரையாடலை ஆரம்பித்தேன். “உண்மையிலேயே எம். டி. வாசுதேவ நாயர் மலையாளத்தில் ஒரு காத்தரமான புனை எழுத்துக்காரர் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா?” மூவருமே மௌனம் காத்தார்கள். கொஞ்ச நேரத்தில் நானே அந்த மௌனத்தைக் கலைத்தேன் .“இரண்டாம் இடத்திற்குப் பின் இப்பொழுது இறுதி யாத்திரை (விலாபயத்ரா) வாசித்தேன். இரண்டுமே என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. என் குறைந்தபட்ச வாசிப்பில் அவரை விட 10க்கும் மேற்பட்ட மிகச் சிறந்த புனைவு எழுத்துக்காரர்கள் தமிழில் உண்டு,” என்றேன்.

மனோஜ் குருர், சந்தோஷ் எச்சிகானும் என்னை எழ வைத்து கட்டிப்பிடித்துக்கொண்டார்கள். அந்த நெருக்கத்திற்கு அனுமதிக்காமல், “ஆனால் அவர் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர் இல்லையா?” எனக் கேட்டேன். மூன்று பேருமே அதை 100% ஒத்துக்கொண்டார்கள்.


ஏழெட்டு வருடங்களுக்கு முன் என் மலையாள மொழிபெயர்ப்பாளர் கே. எஸ். வெங்கடாசலம் அவர்களின் கோரிக்கையை ஏற்று, நான் சைலஜா நஜீப் ஆகியோர் இரவு 8 மணி அளவில் கோழிக்கோட்டில் உள்ள எம். டி. வீட்டில் அவரை சந்திக்க அனுமதி கேட்டபோது, உடனடியாக அந்த அனுமதி மறுக்கப்பட்டது. அப்போதுதான் கண் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தார். ஆனால் ஏதோ ஒரு புள்ளியில், நாங்கள் நான்கு பேரும் அவர் முன் அடுத்த சில நொடிகளில் அமர வைக்கப்பட்டிருந்தோம். ஒரு மணி நேரம் நீடித்த உரையாடல் எவ்வகையிலும் சுவாரஸ்யமானது அல்ல; கேரள பஞ்சாயத்துக்குக் கட்டுப்பட்டதாக இருந்தது.

கண் அறுவை சிகிச்சை அவருக்கு வலியையும் சலிப்பையும் தந்திருந்தது. நாம் போன நேரம் அப்படிப்பட்டது. பின் ஒரு சுவாரசியமான சந்திப்பில் எம். டி. உடனான சந்திப்பை என் நண்பர் மம்முட்டி இடம் சொன்னபோது, “கிழவன் என்ன சொன்னார் பவா?” என மிகச் செல்லமாக ஆர்வப்பட்டார். அது அவர்களுக்குள்ளே இருந்த நட்பைப் பிரதிபலிப்பதாயிருந்தது. மலையாள இலக்கியத்தில் சராசரியாகவும் திரைக்கதையில் உச்சமாகவும் சாதித்த ஒரு நல்ல கலைஞனை, ஒரு நல்ல கலைஞனின் விலாபயத்ரா இன்று தொடங்குகிறது. என் ஆழ்ந்த அஞ்சலிகள்.

இந்த பதிவை எழுதிய ஜெயமோகன் சிஷ்யன் பவா.செல்லத்துரை. தன் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்திட்ட த.மு.எ.க.ச வை தன்னை முன் வைத்து ஜெயமோகன் சிறுமைப்படுத்திய போதே கள்ள மவுனம் சாதித்து வேடிக்கை பார்த்த மனிதனுக்கு எம்.டி.வாசுதேவன் நாயரெல்லாம் எம்மாத்திரம்! என்ன இவர் எழுதியது கேரளாக்காரர்களுக்கு தெரிந்தால் இவர் கேரளாவிற்குள் நுழைவதுதான் சிரமம். 

பிகு: அதென்ன கலங்கிய நிலை? சரக்கடிப்பதை எழுத்தாளர்கள் இப்படி ரொமாண்டிஸைஸ் செய்தால் டாஸ்மாக் விற்பனை அதிகமாகாதா? குற்றங்கள்தான் பெருகாதா?

No comments:

Post a Comment