Sunday, December 8, 2024

ஜேஜே படக்காமெடி போல நிஜத்திலும்

 


மாதவன் நடித்த ஜேஜே படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் கலாபவன் பணி ஒரு பொருளை சுட்டுக் கொண்டு செல்வார். கடை வாசலில் அலாரம் அடித்து மாட்டிக் கொள்வார். எப்படி கண்டுபிடிச்சீங்க என்று வாட்ச்மேனைக் கேட்க பார்கோடைக் காண்பித்து இதுதான் காந்த கோடு, பில் போடலைன்னா இது காட்டிக் கொடுத்துடும் என்பார்.

மாதவனும் அந்த கடைக்கு சுடத்தான் வந்திருப்பார், சுடவும் சுட்டிருப்பார். அவர் அங்கே இருந்த பல வாடிக்கையாளர்களின் பைகளில் அவர்கள் அறியாமல் ஒவ்வொரு சின்ன பொருளை ஒளித்து வைக்க, அலாரம் அடித்துக் கொண்டே இருக்கும். மிஷின் ரிப்பேர் என்று சொல்லி கடைக்காரர்கள் அனைவரையும் அனுப்பி விடுவார்கள். அலார ஓசைக்கு இடையே சுட்ட பொருட்களோடு மாதவனும் வெளியே வந்து விடுவார்.

இப்போதெல்லாம் சென்னை சில்க்ஸ், ஆர்,எம்.கே.வி, ஜெயச்சந்திரன், பச்சையப்பாஸ் போன்ற பெரிய கடைகளில் நாம் வாங்கும் பொருளோடு ஒரு சின்ன ப்ளாஸ்டிக் அட்டை இருக்கும். பில் போடும் இடத்தில் குமிழுடன் கூடிய எவர்சில்வர் கிண்ணத்தில் அதை நீக்குவார்கள். எதற்காக அது என்று எனக்கு தெரியாது. தெரிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை.

கடந்த மாதம் சென்னை சென்றிருந்த போது அங்கே பள்ளிக்கரணையில் உள்ள ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸில் மூன்று பேண்ட் பிட்டும் ஒரு ஹெல்மெட்டும் வாங்கினேன். பில் போடும் இடத்தில் வழக்கம் போல பேண்ட் பிட்டுக்களில் உள்ள ப்ளாஸ்டிக் அட்டையை நீக்கி விட்டார்கள். ஹெல்மெட்டை மட்டும் திருப்பி திருப்பி பார்த்து விட்டு பில் கொடுத்தார்கள். பணத்தை கட்டிவிட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வரும் போது வாசலில் அலாரம் அடித்து விட்டது.

செக்யூரிட்டி உள்ளே போகச் சொன்னார். அங்கிருந்த ஊழியர் பொருட்களை பார்க்கையில் ஹெல்மெட்டில் இருந்த ப்ளாஸ்டிக் அட்டை அகற்றப்படவில்லை என்று தெரிந்தது. பில்லை பார்த்ததும் “SORRY FOR THE INCONVENIENCE SIR என்று வருத்தம் தெரிவித்து விட்டு புறப்படச் சொன்னார்கள். அப்போதே அந்த செக்யூரிட்டி இரண்டாம் மாடி சூப்பர்வைசரை போனில் கூப்பிட்டு “ஹெல்மெட்டுக்கு பில் போட்டது யாருன்னு பாருங்க! சென்ஸாரை எடுக்காம விட்டுட்டாங்க, கஸ்டமருக்கு கஷ்டமாயிடுச்சு” என்று சொன்னார்.  பில் போட்ட அந்த ஊழியர் என்ன திட்டு வாங்கினாரோ?

பில் போடும் நேரத்தில் போன் பார்க்காமல் சென்ஸார் அட்டையை அகற்றுகின்றனரா என்பதில் கவனம் செலுத்த வேண்டும் போல . . .

No comments:

Post a Comment