Thursday, December 2, 2021

தியாகிகளை துரத்த முடியாது.

காட்டிக் கொடுத்ததும், காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதுமே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் சங்கிகள் பெற்ற இடம்.

அதனால்தான் அவர்களை உண்மையான தியாகிகளின் பெயர்களை இருட்டடிப்பு செய்ய முயல்கிறார்கள்.

மக்களின் மனங்களீல் ஆழமாக பதிந்துள்ள மாப்ளா தியாகிகளை அவ்வளவு சுலபமாக அவர்களால் வரலாற்றுக்கு வெளியே துரத்த முடியாது.

தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா எழுதிய முக்கியமான கட்டுரை இது. அவசியம் முழுமையாக படிக்கவும்.





 வரலாற்றுக்கு வெளியே விரட்டப்படும் மாப்ளா தியாகிகள்-

                                                                                                     ஆதவன் தீட்சண்யா. 


1921 நவம்பர் 19 மாலை. கோழிக்கோடு ரயில்நிலையம். பயணிகள் வண்டி எண்: 77 சற்றைக்கெல்லாம் கிளம்பப் போகிறது. திடீரென அதன் கடைசிப்பெட்டியுடன் சரக்கு களை ஏற்றிச்செல்லும் 1711 என்கிற  எண்ணுள்ள பெட்டி யொன்று அவசரமாக இணைக்கப்படுகிறது. புதிதாக  அடிக்கப்பட்டு இன்னமும் சரிவர காயாத வர்ணத்தின் நெடியடிக்கும் அந்தப் பெட்டியையும் இழுத்துக் கொண்டு வண்டி திரூர் சேரும்போது மாலை 6.45மணி.

சார்ஜென்ட் ஏ.ஹெச்.ஆண்ட்ரூஸ், தலைமைக் காவலர் ஓ.கோபாலன் நாயர்,  காவலர்கள் பி.நாராயண நாயர், கே.ராமன் நம்பியார், ஐ.ரைரு, என்.டி.குஞ்சம்பு, பி.கொரடுண்ணி நாயர் ஆகியோர் இந்த வண்டிக்கா கத்தான் திரூரில் காத்திருந்தார்கள். மம்பாடு, மலப்புரம், பய்யநாடு, மேல்முரி, போரூர், புன்னப்பளா, குருவம்பலம், நிலம்பூர், செம்மலாசேரி ஆகிய ஊர்க ளின் சுற்றுவட்டாரங்களிலிருந்து பிடித்து நடத்தியே இழுத்துவரப்பட்டிருந்த நூறு கைதிகள் அங்கே அவர்க ளது பொறுப்பிலிருந்தார்கள். ஒவ்வொரு கைதியையும் இன்னொரு கைதியுடன் ஜோடியாகப் பிணைத்து விலங்கிட்டு வைத்திருந்தனர். 18X9X7.5 அடிகள் அளவேயுள்ள அந்தச் சரக்குப்பெட்டிக்குள் அதன் கொள்ளளவினும் பன்மடங்கு மிகுதியாயிருந்த நூறு பேரையும் துப்பாக்கிமுனையால் குத்திக்குத்தி நெருக்கித் திணித்துப் பூட்டிய அவர்கள் அந்தப் பெட்டிக்கு முன்னேயிருந்த பயணிகள் பெட்டிகளில் போய் அமர்ந்துகொண்டார்கள். 

மேற்கூரையிலும் பக்கவாட்டிலும் இருந்த சின்னஞ் சிறு துளைகளும்கூட வர்ணம் பூசியதில் தூர்ந்துபோய் காற்றும் வெளிச்சமுமற்று சூளைபோல கொதித்த அந்தச் சரக்குப்பெட்டிக்குள் அடைக்கப்பட்ட கைதி களின் நிலை? 

வண்டியோட்டத்தின் தள்ளாட்டத்தில் அவர்கள் ஒருவரோடொருவர் மோதிச் சரிந்தனர். ஒருவரையொரு வர் பிடித்துக்கொள்ள முயன்றதில் கைவிலங்கு பட்டும் நகம் கீறியும் பலரது உடலிலும் காயமேற்பட்டு ரத்தம் வழிந்தது. இப்படியாவது தாகம் தணியாதா என்கிற பரிதவிப்பில் பிறரது உடலில் வழியும் ரத்தத்தையும் வியர்வையையும் அவர்கள் நக்கியிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் உடம்பில் எஞ்சியிருந்த தண்ணீர் சிறுநீராய் சொட்டியபோது தாகத்தில் அதையே குடித்தி ருக்கிறார்கள். மூச்சுத்திணறலில் வாயைத் திறந்து காற்றுக்கு அலைந்து மயங்கி விழுந்திருக்கிறார்கள். உயிரழியும் வாதையின் கூப்பாடு ரயிலோட்டத்தின் இரைச்சலையும் தாண்டி அடுத்த பெட்டிகளின்  பயணி களையும் உலுக்குகிறது. ஆனாலும் காவற்படையினர் பெட்டியைத் திறக்கவேயில்லை. இத்தனைக்கும் ஷொரனூரில் 30 நிமிடங்களும், ஒலவக்கோட்டில் 15நிமி டங்களும் வண்டி நின்று கிடந்துதான் கிளம்பியது. 

திரூரில் கிளம்பிய வண்டி 111 மைல் ஓடிக்கடந்து நள்ளிரவு 12.30 மணிக்கு போத்தனூரில் நின்றபோது பயணிகளில் சிலர், தாளமுடியாத ஓலமும் வாடை யும் வெளியாகும் அந்தப் பெட்டியைத் திறந்தே யாக வேண்டுமென்று காவற்படையினரை நெருக்கி யுள்ளனர். வேறுவழியின்றி காவலர்கள் பெட்டியைத் திறந்ததும் 56 பிணங்கள் வெளியே விழுந்திருக்கின்றன. போர்க்களத்தில் சிதைக்கப்பட்டவை போன்றிருந்த அந்தப் பிணங்கள் திரூக்கே திருப்பி அனுப்பப்பட்டன. குற்றுயிருராக எஞ்சியிருந்த 44பேர் கோவை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களிலும் 14பேர் அடுத்தடுத்த நாட்களில் மாண்டு போயினர். 

“மாதக்கணக்காக இம்மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் சித்ரவதைகளை ஒப்பிடும்போது இந்த ரயில் வேகன் படுகொலை அற்பமானது” என்று  வரலாற்றாளர் எம்.கங்காதரன் வெளிப்படுத்திய வேதனை கொடூ ரத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது. தென்னிந்தியா வின் ஜாலியன் வாலாபாக் எனப்படுமளவுக்கான கொடு மைகளுக்காளாகிய அந்த மக்களும் கைதிகளும் யார்? 

மலபாரின் கடற்கரை நகரங்களில் வாழ்ந்து செழித்த வணிகச்சமூகம் மாப்ளா முஸ்லிம்கள். போர்த்துக்கீசியர் முதலான ஐரோப்பியர்களின் அடுத்த டுத்த வருகையினால் அங்கே வணிகப்போட்டியும் அமைதியின்மையும் ஏற்பட்டதால் மாப்ளாக்களில் ஒரு பகுதியினர் மலபாரின் உட்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். செருமான், புலையன், குரும்பன், குறிச்சியன், பன்னியன், திய்யர் உள்ளிட்ட ஆதிக்குடிக ளுடனான கலப்பு தன்னியல்பாகி, ஆதிக்குடிகளில் பலரும் இஸ்லாத்தைத் தழுவும் நிலை உருவாகியது. ஆதிக்குடிகளைப் போலவே மாப்ளாக்களும் அங்கு நிலவுடமையாளர்களாகிய நம்பூதிரிகளிடமும் (ஜென்மி கள்) நாயர்களிடமும் (கனம்தார்) வெறும் பட்டதார் எனப்படும் குத்தகைதாரர்களாகியுள்ளனர். 

நிலவுடமையாளர்களின் சுரண்டலையும் அதை நிலைநிறுத்துவதற்கான ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து குத்தகைதாரர்கள் போராட வேண்டியி ருந்தது. திப்புசுல்தான் ஆட்சிக்காலத்தில் நிலவுடமை மற்றும் வரிவிதிப்பில் ஏற்பட்ட மாற்றங்களால் சற்றே நிலைமை தணிந்திருந்தது. ஆனால் மராத்தியர், ஹைத ராபாத் நிஜாம், திருவிதாங்கூர் மகாராஜா ஆகியோரது உதவியுடன் மூன்றாம் மைசூர் போரில் (1792-93) கார்ன்வாலிஸ் தலைமையிலான கிழக்கிந்தியக் கம்பெனி திப்பு சுல் தானை வீழ்த்திய பின் நிலைமை வெகுவாகச் சீர்கெட்டது. நம்பூதிரிகளும் நாயர்களும் மீண்டும் தறி கெட்டு ஆடினர்.

கிழக்கிந்தியக் கம்பனியினர், மலபார் நிலவுட மையாளர்களுடன் சமரசம் செய்துகொண்டு அவர்க ளது நலனுக்கேற்ப இயற்றிய நிலம்சார் சட்டங்கள் குத்தகைதாரர்களுக்கு எதிரானவையாக இருந்தன. எனவே குத்தகைதாரர்கள் இக்கட்டத்தில் நிலவுட மைத்துவத்தையும் காலனியாட்சியையும் எதிர்த்துப் போராடும்படியானது. அடுத்துவந்த நூறாண்டுகளிலும் உக்கிரமாய் தொடர்ந்த இப்போராட்டத்தை, கிலாபத் இயக்கத்திலும் ஒத்துழையாமை இயக்கத்திலும் இணைத்ததன் மூலம் மாப்ளாக்கள் நாட்டின் விடு தலைப் போராட்டத்திற்கு வலுசேர்த்தனர். விவாகரத்து செய்துவிட்டு போராட்டத்தில் பங்கெடுக்க ஆண்கள் சென்றார்களென்றால் பெண்களோ ஆங்கிலேயப் படையினரை விரட்ட கொதிக்கும் எண்ணெய்யுடன் கதவோரம் காத்திருந்தார்கள். மலபாரின் ஒவ்வொரு அங்குலத்திலும் தம்மை எதிர்த்துப் போராடியவர்களை நரவேட்டையாடியது காலனியாட்சி. இதற்கெனவே அப்பகுதியில் ராணுவச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 

மாப்ளாக்களின் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோது  அங்கு ‘2339பேர் கொல்லப்பட்டிருந்தார்கள்; 1652பேர் கடுமையாக காயமுற்றிருந்தனர்; 39348பேர் சரணடைந்தனர்; 7900 பேர் அந்தமானுக்கு கடத்தப்பட்டனர்’ என்று பன்மடங்கு குறைத்து கணக்குக் காட்டப்பட்டது. இவர்களினூடாக பிடிக்கப்பட்ட நூறுபேரை 1921 நவம்பர் 19 அன்று திரூரிலிருந்து பெல்லாரி சிறைக்கு சரக்குப்பெட்டிக்குள் அடைத்து அனுப்பும்போதுதான் அவர்களில் 70பேர் இறந்துபோனார்கள். இவர்களில் 67பேர் மாப்ளா முஸ்லிம்கள், மூவர் இந்துக்கள்.  

 “ட்ரெய்ன் வேகன் டிராஜிடி” என்று பிரிட்டிஷ் ஆவ ணங்களால் மழுப்பப்படும் இப்படுகொலை சென்னை மாகாண சட்டப்பேரவையிலும் விமர்சனத்தைக் கிளப்பி யது. நாப் (A.K.Knapp) தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டாலும், அது காலனியாட்சியாளர்களின் கொடூர மனதை படம் பிடித்துக் காட்டியது. அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஹெச்.ஹிட்காக், “சரக்குப் பெட்டியில் கைதிகளை அழைத்துச்செல்வது புதி தல்ல. ஏற்கனவே 37முறை அழைத்துப் போயிருக்கி றோம். இந்தமுறை கொஞ்சம் பிசகிவிட்டதால் வெளியே தெரிந்துவிட்டது” என்கிற ரீதியில் ஆண வமாய்த் தெரிவித்ததுடன் இதற்காக யார்மீதும் நட வடிக்கை எடுக்கத் தேவையில்லை என்றும் வாதிட்டா ராம். சென்னை சிஐடி பிரிவு துணை கண்காணிப்பா ளர் “கைதிகளுக்குத் தண்ணீர் தரவேண்டும் எனச் சட்டம் சொல்லவேயில்லை. அது தனிப்பட்ட கருணை தொடர்பானது” என்று நியாயப்படுத்தினார். சார் ஜெண்ட்டின் கவனக்குறைவை கண்துடைப்பாக  சாடிய அரசு, கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.300/ நிவாரணம் வழங்கிவிட்டு தப்பித்தோடியது.

மாப்ளா முஸ்லிம்களால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தை நிலவுடமையாளர்களாகிய நம்பூதி ரிகளும் நாயர்களும் இந்துக்களுக்கு எதிரான வன்முறை என்று மதச்சாயம் பூசினர். இதற்காக அவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமான தனிப்பட்ட மோதல்களை மிகைப்படுத்திக் காட்டினர். இச்சாதி களைச் சேர்ந்தவர்களும் ஆங்கிலேயர்களும் எழுதிய சில நூல்களிலும்கூட இந்தத் திரித்தலுக்கு கூடுதல் அழுத்தம் தரப்பட்டிருந்தது. 

இந்நிலையில், “ஜென்மிகள் மற்றும் காலனியாட்சி யாளர்களின் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான குத்தகைதாரர்களின் அப்போராட்டம் விடு தலைப் போராட்டத்தின் ஒருபகுதியே” என்று தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் மாப்ளா எழுச்சியின்மீது சரியான ஒளியைப் பாய்ச்சினார். அவரது கருத்தினை கே.என்.பணிக்கர், செளமியேந்திர தாகூர், ஆர்.எல்.ஹார்ட்கிரேவ், கெய்ல் மினாட், நய்ம் குரேஷி, கான்ட்ராட் உட் போன்றோரது எழுத்துக்கள் வலுப் படுத்துகின்றன. இதன் தொடர்ச்சியில் மாப்ளா கிளர்ச்சி யாளர்கள் விடுதலைப்போராட்டத் தியாகிகளாக அங்கீகரிக்கப்பட்டனர். ரயில் வேகன் படுகொலை யின் வரலாற்றை நினைவூட்டும் நினைவுச்சின்னங்க ளும் கட்டிடங்களும் திரூரில் எழும்பின. அங்குள்ள ரயில் நிலையத்தின் சுவர்களில் இப்படுகொலையின் வர லாற்றைச் சித்தரிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டன. 1921 என்றொரு திரைப்படமும் வெளியானது.  ரயில் வேகன் படுகொலையின் நூறாண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது. 

சுதந்திரப்போராட்டத்திற்காக சுண்டுவிரலைக்கூட அசைக்காமல், பல துரோகங்களையும் சீர்குலைவு களையும் செய்துவந்த சங் பரிவாரங்கள் ஒன்றிய அரசை கைப்பற்றிவிட்ட இக்கொடுங்காலம் அதற்கேயுரிய தீங்குகளையும் கொண்டு வந்து சேர்த்தபடியே தானி ருக்கிறது. இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கேற்ப வரலாற்றைத் திரிப்பதிலும் கட்டுக்கதைகளை வரலா றெனத் திணிப்பதிலும் கைதேர்ந்த ஒன்றிய அரசு, மாப்ளா எழுச்சியையும் ரயில் வேகன் படுகொலை யின் நூற்றாண்டையும் இஸ்லாமிய வெறுப்பிலி ருந்து சிறுமைப்படுத்துகிறது. அன்றைய. நிலவுடமை யாளர்களாகிய நம்பூதிரிகளும் நாயர்களும் இட்டுக் கட்டிய பொய்களைத் தூக்கிப்பிடிக்கிறது. திரூர் ரயில் நிலையத்தின் சுவர்களில் வரையப்பட்டிருந்த ரயில் வேகன் படுகொலை ஓவியங்களை அழிக்கச் செய்து விட்டது. விடுதலைப்போராட்ட வீரர்களின் அகராதியில் இடம்பெற்றிருந்த மாப்ளா கிளர்ச்சியாளர்கள் 387 பேரின் பெயர்களை நீக்கச்செய்துள்ளது. 

அதிகாரப்பிறழ்வால் வரலாற்றுக்கு வெளியே விரட்டப்படும் மாப்ளா தியாகிகளை நாம் மனங்களில் ஏந்திக்கொள்வதை யார் தடுக்கமுடியும்? 

கட்டுரையாளர்: 
தமுஎகச மாநில பொதுச் செயலாளர்
Aadhavan Dheetchanya


No comments:

Post a Comment