Saturday, January 12, 2019

மான் முட்டி மரணித்த மணலூர் மணியம்மையார்




எங்களின் தஞ்சைக் கோட்டத்தின் மாத இதழான “சங்கக்குரல்” இதழில் இக்கட்டுரையைப் படித்ததும் இதனை எழுதிய தஞ்சைக் கோட்டத் தோழரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளருமான தோழர் களப்பிரன் அவர்களை உடனே தொலைபேசியில் அழைத்து பாராட்டி, அக்கட்டுரையின் SOFT COPY யினை  அனுப்பச் சொன்னேன். அவரும் உடனே அனுப்பி வைத்தார். அதனை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

கீழத்தஞ்சை விவசாயத் தொழிலாளர்களின் முக்கியத் தலைவரான தோழர் மணலூர் மணியம்மை குறித்த முக்கியமான கட்டுரை இது. அவசியம் முழுமையாக படியுங்கள்.

வாழ்த்துக்கள் தோழர் களப்பிரன்.

( தோழர் மணலூர் மணியம்மை அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் போராட்டங்களைப் பற்றியும் முன்னரே படித்திருந்தாலும் அவரது மரணம் குறித்து இப்போதுதான் அறிந்து கொண்டேன். அதனால்தான் அந்த தலைப்பு)


மணலூர் மணியம்மா எனும் அறியப்படாத தோழர்
-களப்பிரன்
 Kalapiran Kalam's Profile Photo, Image may contain: 1 person, outdoor
பெண்கள் இயற்கையாகவே ஆளுமை படைத்தவர்கள் தான். மனித இனம் தோன்றிய காலத்திலேயும், அதற்கு முற்பட்ட விலங்காக திரிந்த காலத்திலேயும் பெண்கள் தான் அந்தக்குழுக்களின் தலைவர்களாக இருந்து வழிநடத்தியிருக்கிறார்கள். அப்படி இருக்க, இவ்வளவு நவீனம் வளர்ந்து, எல்லாவற்றிலும் பெண்கள் சரிநிகராக நடத்தப்பட வேண்டும், எல்லா வேலைகளிலும் பெண்களை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்கிற எண்ணங்கள் மேலோங்கியுள்ள இந்தக்காலத்திலும், அவர்களை தலைமைக்கு கொண்டுவருவதில் இன்னும் ஒருவித தயக்கம் எல்லா மட்டத்திலும் இருக்கவே செய்கிறது. அப்படி தலைமை பொருப்பில் அதிகாரம் இருக்கும் பதவிகளில் இருப்பவர்களும் ஒப்பீட்டளவில் சொற்ப நபர்களாகவே இருக்கிறார்கள். அந்த சொற்ப நபர்களை நாம் விதிவிலக்காகவே பார்க்கமுடிகிறது.

ஏன் பெண்கள் தலைமை பொருப்பிற்கு அதிகம் தேர்வு செய்யப்படுவதில்லை என்பதற்கான ஒரே காரணம், இந்தச்சமூகம் கற்பிதங்களால் உருவாக்கியுள்ள பொதுப்புத்தி எனும் மாயை தான். சராசரியாக வாழ்ந்த பெண்களில் சிலர், அப்படியான கற்பிதங்களை உடைத்து, தங்களின் சுய ஆளுமையோடு சமூகத்தில் போராடி வெற்றி கண்டது ,நிகழ்வுகள் குறித்தே இந்தப்பக்கத்தில் எழுதவுள்ளோம்.

தந்தை பெரியார் அவர்கள் சோவியத் சென்று வந்த பிறகு பெண்களை கிராப் வெட்டிக்கொள்ளச்சொன்னார், ஆண்கள் போடும் உடைகளை அணியச்சொன்னார், ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகள் இருக்கக்கூடாது என்று சொன்னார். 1934ல் அவர் சொன்னபோது, சுயமரியாதை இயக்கத்தை சேர்ந்த தோழர்களில் எவ்வளவு பேர் அப்படி இருந்தார்கள் என்பது  நமக்குத் தெரியாது. ஆனால் விவசாயத்தொழிலாளர் சங்கத்தை நாகைப்பகுதியில் முதன் முதலில் உருவாக்கிய தோழர் மணலூர் மணியம்மா அவர்கள் அப்படித்தான் இருந்தார்.

மேல்பாக்கெட் வைத்த ஜிப்பாவை போன்ற தானே வடிவமைத்த ஒரு உடை, அதன் தோள் மீது துண்டு, கதர் வேட்டி, ஆண்களை போல் கிராம் வெட்டிய தலை, தோளில் ஒரு பை, காலில் செருப்பு, கையில் ஒரு குடை, குடைக்குள் மறைத்துவைக்கப்பட்ட ஒரு குறுவாள், ஒற்றைக் காளை மாடு பூட்டப்பட்ட வண்டி என்று கீழத்தஞ்சை முழுவதும் ஒரு பெண் நிலவுடைமையாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், ஒடுக்கப்பட்ட விவசாயத்தொழிலாளர்களுக்கு தோழமையின் அடையாளமாகவும் இருந்தார் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.

மணலூர் மணியம்மா சனாதானமான பிராமணக் குடும்பத்தில் மூன்றாம் தாரத்தின் பிள்ளைகளில் ஒருவராகத்தான் பிறந்தார். இவரது இயற்பெயர் வாலாம்பாள். மணி என்பது இவரின் செல்லப்பெயர். பின்னாளில் அதுவே இவரின் பெயராகிப்போனது. நாகையை சேர்ந்த வழக்கறிஞரும், செல்வந்தருமான குஞ்சிதபாதம் என்பவருக்கு தனது பத்து வயதில் இரண்டாம் தாரமாக பாலிய விவாகம் செய்துவைக்கப்பட்டவர் தான் மணியம்மை.

தன்னுடைய 27ஆவது வயதில் தன் கணவரை இழந்த மணியம்மா, அதற்குப்பிறகு தனது தாய்வீடு இருந்த மணலூரில் வந்து தங்கினார். தனது 17 ஆண்டுகால திருமணவாழ்வில் அவருக்குக் கிடைத்தது தான் ஆங்கிலக்கல்வி. கிருஸ்தவ திருச்சபையை சேர்ந்த வெள்ளைக்காரப் பெண்மணி அவருக்கு ஆசிரியராக இருந்தார். அவர் மூலம் ஆங்கிலத்தோடு அவருக்கும் சில முற்போக்கான கருத்துக்களும் சேர்ந்த அறிமுகமாயின.

தனது கணவர் இறந்த பிறகு ஒரு சராசரி பிராமண விதவைப்பெண்ணாக மொட்டை அடித்து, எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி இருந்தார். ஆனால் அவர் படித்த ஆங்கிலமும், சீர்திருத்த கருத்துக்களும் அவரை சும்மா இருக்க விடவில்லை. எல்லாவற்றிலும் கேள்வி கேட்கத்தொடங்கினார். அப்போது காந்தியடிகள் தஞ்சைக்கு வந்திருந்தார். அவர் உறவினரின் மூலம் காந்தியை காணச்சென்றார். காந்தியடியடிகளுடனான உரையாடல் அவரை முழுநேர அரசியல் பணிக்கு ஈர்த்தது. அதோடு தனது மொட்டைத்தலையை கிராப் தலையாக மாற்றினார், புடவையை வேட்டி சட்டையாக்கிய அவரின் புதிய உருவத்துடன் இறக்கும் வரையில் ஒரு தலைவராகவே வாழ்ந்து மறைந்த ஆளுமை தான் மணலூர் மணியம்மா.

தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றினார். காங்கிரஸின் இருபெரும் கொள்கைகளான மதுவிலக்கு, அரிஜன சேவா என்கிற இரண்டையும் காங்கிரசில் உள்ளவர்களே கடைபிடிக்காத போது, அதை தீவிரமாக செயல்படுத்தி சேரிப்பகுதி மக்களுடன் கலந்து அவர்களின் கூலிப்பிரச்சனை உள்ளிட்டவற்றில் தீர்த்து வைக்க உழைத்த மணியம்மாவை காங்கிரசில் இருந்த பெரும் நிலக்கிழார்கள் எதிர்க்கத்தொடங்கினர். முதலில் தனது சொந்த நிலத்தில் பணியாற்றும் ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு முறையான கூலியை வழங்கத்தொடங்கி, அவர்களை பாதுகாத்தார். இது மற்ற நிலக்கிழார்களுக்கு பெரும் இடஞ்சலாக இருக்கவே அவருக்கு தொடர்ச்சியாக இடையூறுகளை கொடுக்க ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் தன் நிலங்களை இழந்த சூழலில் சிறு வீடு எடுத்து தங்கலானார்.

காங்கிரஸில் ஒரு கட்டத்தில் இருக்கமுடியாது என்கிற போது, அவரை ஈர்த்தது பொதுவுடைமை இயக்கம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கீழத்தஞ்சை விவசாயத் தொழிலாளர்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தீவிரமாக பணியாற்றினார். இவர் பணியின் தீவிரம் காரணமாகவே 40களின் இறுதியிலும், 50களின் தொடக்கம் வரையிலும் கீழத்தஞ்சையில் கம்யூனிஸ்ட் கட்சி மணியம்மா கட்சி, அல்லது மணியம்மா செங்கொடி கட்சி என்று அழைக்கப்பட்டது.

தானே சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொண்ட்டார், தற்காப்பிற்காக சிலம்பம் சுற்றக் கற்றுக்கொண்டார். திருவாரூரில் அவர் தங்கியிருந்த அறையே கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமாக இருந்தது. இவரின் தீவிர செயல்பாடுகள் இருந்த காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அப்போது பல முன்னணித் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அப்போது மணியம்மாவும் கைதுசெய்யப்பட்டு கடலூர் வேலூர் சிறைகளில் பல்வேறு கொடுமைகளை சந்தித்தார்.

இறுதியாக 1953 ல் பூந்தாழங்குடி என்னும் கிராமத்தில் ஒரு நிலக்கிழாரோடு விவசாயத் தொழிலாளர்களுக்காக பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திருவாரூர் செல்ல பேருந்திற்காக காத்து நிற்கையில் மான் முட்டி இறந்தார் என்று அரசு ஆவணங்கள் சொல்கிறது.

ஆனால் அன்று நடந்தது குறித்து எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன் அவர்கள் 1980 களில் அவர் எழுதியபாதையில் பதிந்த அடிகள்என்னும் நாவல் பணிக்காக செய்த கள ஆய்வில் கிடைத்த தகவல் தான் உண்மைக்கு நெருக்கமாக உள்ளது. பிணவாசலை சேர்ந்த நாகப்பன் எனும் விவசாயி மூலம் கிடைத்த தகவல் தான் அது.

 பண்ணையார் ஒரு கலைமான் வளர்த்துக்கிட்டிருந்தார். அது அங்கே திரிந்து கொண்டிருக்கும். அதை ஒரு பையன் பாராமரித்தான். அவன் அந்த மானின் மூக்கில் ஒரு குச்சியை நுழைத்து, அதுக்கு வெறி ஏத்தி அம்மா நடந்து வந்த பக்கமா ஏவிவிட்டதை நான் கண்ணால பார்த்தேன். அம்மா வெள்லைத்துணி தான் எப்பவும் போட்டிருப்பாங்க. வெள்ளையைக் கண்டா மானுக்கு ஆவாது. அது கொம்பால முட்டி குடலை உருவிடுச்சுஎன்று சொல்லியுள்ளார்.

இன்று வரை அந்தப்படுகொலையை யாரும் உறுதிசெய்யவில்லை. கீழத்தஞ்சையின் போராட்ட வரலாற்றை தொடர்ச்சியை உற்று நோக்குபவர்களுக்கு அது படுகொலை தான் என்பது சொல்லாமலே புரியும். மணியம்மா மறைந்திருக்கலாம், ஆனால் இன்றைக்கும் அவர் விவசாயத்தொழிலாளர்களில் வாழ்க்கையிலும், அவர்கள் பாடும் பாடல்களிலும் மறையாமல் வாழ்ந்துகொண்டே தான் இருக்கிறார்.

 ஒரு சனாதான குடும்பத்தில் பிறந்து, பத்து வயதில் திருமணமாகி, 27 வயதில் கைமைக்கோலம் பூண்டிருந்த ஒருவர், 35 வயதுக்கு மேலாக ஒரு வீரமங்கையாக உருவாக முடியும் என்றால், அதுவும் எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்ட அந்தக்காலத்திலேயே உருவாக முடியும் என்றால், நம் வீட்டில் இருக்கும் பெண்களும், நம் அலுவலகத்தில் இருக்கும் சக தோழர்களும் இப்போதும் கூட பொரும் போராளிகளாக வீரமங்கைகளாக பரினமிக்க முடியும்.

அவர்களுக்குள் இருக்கும் போராளி வெளியே வரும் போது ஆண்கள் செய்ய வேண்டியது ஒன்று தான், அது குறுக்கே நிற்காமல் இருப்பது.

3 comments:

  1. தலைவரே

    இன்னும் அந்த 10% ஒதுக்கீடு தொடர்பான பதிவு வரல

    காத்துகிட்டு இருக்கோம்

    அன்சாரி முகம்மது

    ReplyDelete
    Replies
    1. எழுதி இரண்டு நாள் ஆச்சு. அதுல பின்னூட்டம் போட்டது உங்களோட Admin ஆ?

      Delete
  2. Red salute to those who have all made the way to walk-in smoothly.also to remember that bramins have also contributed for the liberation of the downtrodden then and now also.caste n community is not the matter.it is the ideaology and concern that matters.

    ReplyDelete