Tuesday, January 8, 2019

ஒரு முறையாவது போகனும் . . .

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சி.பத்மநாபன் எழுதி நேற்றைய தீக்கதிர் இதழில் வெளியான கட்டுரை. 

அடுத்த முறை கோவை செல்கையில் இத்தியாகிகளின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வர வேண்டும் என்ற உணர்வை உருவாக்கியது இக்கட்டுரை. அவசியம் படியுங்கள்.73 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஜனவரி 8 ல்சின்னியம்பாளையம் தியாகிகளின் நினைவிடத்திற்கு புகழஞ்சலி செலுத்திட வருடம் தோறும் ஆயிரமாய் திரள்வோரில் 10 சதவிகிதத்தினர் கூட இத்தியாகிகள் மூலதனத்தின் ஆதிக்கத்திற்கெதிராக முஷ்டி உயர்த்திய போது பிறந்திருக்க மாட்டார்கள். மறைந்தவர்கள் உறவுமில்லை, நட்பும் இல்லை. ஆனாலும் நினைவு அஞ்சலி ஆண்டுகளாகத் தொடர்கிறது. 

இம்மாவட்டம் இன்றைய தேதியில் 34லட்சம் மக்கள் தொகையைக் கொண்டது. 1946 க்கு பின்புவாழ்ந்து உயிர் நீத்தவர்கள் பல லட்சம். இவர்களில்அறிவார்ந்தவர்கள், சமூகத்திற்காக தொண்டாற்றியவர்கள், பெரும் பொருள் சேர்ந்தவர்கள் என பட்டியலிட்டால் நீளும். ஆனால் அவர்தம் ரத்த உறவுகள் கூட அவர்களது நினைவு நாட்களை இவ்வளவு காலம் தொடர்வதில்லை. ஆனால் வர்க்கத்தின் நலன்காக்க தூக்குமேடையேறினார்கள் என்கிற உன்னதமான வாழ்முறையே வாழையடி வாழையாக தியாகிகள் நினைவிடத்தை நோக்கி ஆயிரமாயிரமாய் உழைப்பாளிகளை அழைக்கிறது. 

கோவையின் மிதமான தட்பவெப்பச் சூழல் இங்கிலாந்தின் பஞ்சாலைகளின் நகரமாக இருந்த மான்செஸ்டர் போல் இருந்ததால் முதலாளிகள் பஞ்சுஆலைகளை இங்கு தொடங்கினார்கள். லாபம் குவிந்ததால் ஆலைகளின் எண்ணிக்கைகளும் கூடியது. 

பல்லாயிரக்கணக்கான இளம் ஆண், பெண் தொழிலாளர்கள் நவீன ஆலையின் வாயிலுக்கு வாழ்க்கைக்காகச் சென்றார்கள். காலம் காலமாக விவசாயம் - கால்நடைகள் சார்ந்த வேலைகளோடு பழக்கப்பட்ட மனமும், உடலும் நவீனத் தொழிலின் உற்பத்தி உறவுகளுக்கு பழக்கப்பட சிரமப்பட்டது. உற்பத்தியை பெருக்க ஆலை முதலாளிகள் கண்டறிந்தது அடக்குமுறையையே. உழைப்பும் ஊதியமும் அடங்கிப் பெறத்தக்கதல்ல. அது சுயமரியாதையோடு சேர்ந்தது என்கிற உணர்வு உழைப்பாளிகளிடம் மெல்ல மேலோங்கியது. தொடர்ந்து அடிபணிய முடியாது என உழைப்பாளிகள் ஆர்ப்பரித்தார்கள் அடக்குமுறையால் மட்டும் உற்பத்தியை, ஆதிக்கத்தை நிலைநிறுத்த முடியாது என ஆலை முதலாளிகள் கருதினார்கள். 

இரு வேறு வர்க்க நலனின் முரண்பாடுகள் மைய அச்சாக முன்வந்தது. இதன் வெளிப்பாடாக மூலதனத்தைப் பாதுகாக்க 1937ல் தென்னிந்திய மில் முதலாளிகள் சங்கம் உருவாக்கப்படுகிறது. 1939 ல் தொழிலாளர்களைத் திரட்ட கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் உதயமானது. அன்றைய கோவை இன்றைய திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கியது. ஆலை முதலாளிகளின் நலன்காக்க மட்டுமே செயலாற்றும் அரசுத்துறையினுடைய முதலாளிகளுடைய அடக்கு முறைகளுக்கு மத்தியிலேதான் தொழிலாளர் நலன் காக்க சங்கம் செயல்பட வேண்டியிருந்தது. 


இந்தப் பயணத்தில் வேலையிழந்தவர்கள், வாழ்விழந்தவர்கள், வழக்குகளுக்கும் தண்டனைக்கும் ஆளானவர்கள் என்பதற்கானவரலாறே தனி. ஏஐடியுசி அமைப்பின் கீழ் நாளும் திரண்டுவரும் உழைக்கும் வர்க்கத்தின் அணிவகுப்பை எதிர் கொண்டு முறியடிக்க ஆலை முதலாளிகள் அனைத்து வகையான யுக்திகளையும் கையாண்டார்கள்.


அந்தக் களத்தின் ஒரு பகுதியாகத்தான் கோவை அவினாசி சாலையில் கங்கா நாயுடுவிற்குச் சொந்தமான ஸ்ரீரங்கவிலாஸ் ஸ்பின்னிங் -வீவிங் ஆலையில் ஒரே சங்கமாக இருந்த தொழிலாளர்களைப் பிரித்திட, சங்கச் செயல்பாடுகளை முடமாக்கிட ஆலை நிர்வாகம் பொன்னான் என்கிற சமூக விரோதியை தீனி போட்டு வளர்த்தது. வேலை செய்ய வேண்டியதில்லை. அவனுக்கு எந்நேரமும் தொழிற்சங்கத்தை சிதைக்கும் வம்புப் பேச்சும் வன்முறையின் மூலம் தொழிலாளியை அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் செயலுமே வாடிக்கையானது. பொறுத்துக் கொண்டார்கள். 

சங்க உணர்வு மிகுதியால் மேலாடையின் கைப்பகுதியில் (ஜாக்கெட்டில்) அரிவாள் சுத்தியல் போட்டு வேலைக்கு வந்த பெண்களிடம் பொன்னான் ஏகடியம் பேசினான். வார்த்தைகளால் சிறுமைப்படுத்தியதோடு பொதுவுடமைக்கு விளக்கமும் கேட்டான். நாகரீக சமூகம்சொந்த மனைவி, மகள், தாய் ,சகோதரியை களங்கப்படுத்த முயற்சிப்பவர்களை தடுத்து நிறுத்திட வெகுண்டெழும். சங்க பெண் தோழர்களை தங்களின் ரத்த உறவுகள் போல் பழகியதால், பொன்னானின் அக்கிரமத்தை தட்டிக்கேட்டார்கள். முடிவில் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. 

நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டது. அமர்வு நீதிமன்றம் தூக்கிலிட உத்தரவிட்டது. அதையே சென்னை உயர் நீதிமன்றமும், லண்டன் ப்ரிவ்யூ கவுன்சிலும் உறுதி செய்தது. நால்வரில் ஒருவர் மட்டும் திருமணமாகாதவர். நீதிமன்றமும் அரசும் நால்வரில் ஒருவர் குற்றத்தை ஏற்றுக் கொண்டால் மற்ற மூவரையும் விடுவிக்க யோசனை சொன்னது. வரலாற்றின் ஆச்சர்யமாக நால்வருமே நான் ஏற்றுக் கொள்கிறேன்; மற்றவர்கள் விடுதலையாகட்டும் என்று சொன்னார்கள். நான் விடுதலையாகிறேன் என்று ஒருவரும் முன்வரவில்லை. அறம் திகைத்தது. வழக்கின்போதே கட்டுண்ட ஒற்றுமையை கடைசி வரை காப்பாற்றினார்கள்.

வழக்கின் எண், சாட்சிகள், வழக்கறிஞர் யார், விசாரணை விபரங்கள், என்ன? மாமணிகள் நால்வரின்தாய் தந்தையர், உடன்பிறந்தோர், மூவரின் உயிரணைய மனைவிமார்கள் என்ன சொன்னார்கள், எத்திக்கு சென்று எப்படி வாழ்ந்தார்கள் என எதையும் நம் வர்க்கத்தால் அறிந்துகொள்ளவோ ஆவணப்படுத்தவோ முடியவில்லை. தினந்தந்தி பத்திரிகை நால்வர் தூக்கிலிடப்பட்டதை மட்டும் சிறிதாக அச்சிட்டது. கோவை உழைப்பாளி வர்க்கம் செவிவழிச் செய்தியாக கேட்டது கீழே உள்ளவற்றைத்தான்.

நால்வருக்கும் தூக்குதண்டனை உறுதியான பின்பு சிறைத்துறை அவர்களது கடைசி ஆசை என்ன என்றுகேட்டது. தூக்குமேடைத் தியாகிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்கள் பி.ராமமூர்த்தி, கே.ரமணியைப் பார்க்க வேண்டும். சிறை உடைகளோடு செவ்வணக்கம் செலுத்தும் போட்டோ எடுக்க வேண்டும். எங்கள் நால்வரையும் தொழிலாளிகளின் ஒற்றுமைக்கு அடையாளமாக ஒரே குழியில் புதைக்க வேண்டும் என்று சொன்னார்கள். தலைவர்கள் கண்டார்கள்; கலங்கினார்கள். தியாகிகளே சிரித்த முகத்தோடு உழைக்கும் வர்க்கத்தை அணி திரட்டுங்கள். சுரண்டல் சமூகத்திற்கு முடிவு கட்டுங்கள் என்று சொல்லி இறுதி வார்த்தைகளை உதிர்த்தனர்.

உலகின் அதிசயமாக சிறையுடையில் சிறைக் கூடத்தில் செவ்வணக்கத்துடன்(லால்சலாம்) புகைப்படம் எடுக்கப்பட்டது. மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டது. பல்லாயிரவர் பங்கேற்க இறுதி நிகழ்ச்சிகளும் நடத்தி முடிக்கப்பட்டது. தோழர் ரமணி தனது அடர்த்தியான அனுபவச் செறிவோடு இதைச் சொல்லிக் கேளாதோர் குறைவு. சின்னையன், ரங்கசாமி, ராமையன், வெங்கடாசலம் ஆகியோர் நால்வர் உழைக்கும் வர்க்கத்திற்காக செய்த அளப்பரிய பங்களிப்பு அந்த மண்ணையே தியாக பூமியாகிவிட்டது. மூலதனமும் அது உருவாக்கிய அதிகார வர்க்கத்தையும் எதிர்த்து ஒருவார்த்தை உரையாடத் துணிவதே எவ்வளவு சவாலானது என்பதை நவீன தொழிலாளிவர்க்கம் மிக நன்றாக உணர்ந்துள்ளது. 

அந்த அடக்குமுறைக்கு அஞ்சியே நான்கு லட்சம் உழைப்பாளிகளைக் கொண்ட இம்மாவட்டத்தில் பெரும் பகுதியானவர்கள் தொழிற்சங்கத்தில் இல்லை. உழைப்புச் சுரண்டலும், உரிமை மறுப்பும் பல ஆலைகளில் தடையின்றி நடக்கிறது. நதி நீர் காப்பாளர்கள் நடத்தும் நிறுவனத்தில் பகுதி கதவடைப்பு என்பதன் பெயரால் 144 பேர் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார்கள். 302 பேர் ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். வர்க்கத்தை திரட்டுவோரை இபிகோ 144, 302 என நிர்வாகம் அடையாளப்படுத்துகிறது. 

மூலதனத்தின் வன்மம் எவ்வளவு கொடூரமானது என்பதற்கு இது சிறு உதாரணமே. சின்னியம்பாளையம் தியாகிகள் தூக்கு மேடையேறியது, நாம் அஞ்சலி செலுத்துவது என்பதெல்லாம் அவர்களை நினைவு கூர்வதற்கு மட்டுமல்ல. சுரண்டலற்ற சமூகத்திற்கான பாதை அமைத்திடவே என்பதை உணர்ந்திட ஜனவரி 8 ல் குடும்பத்தோடு உங்கள் பாதங்கள் அந்த மண்ணில் நடைபோட்டு பாடம் பெற வர வேண்டுகிறோம்.

நன்றி - தீக்கதிர் 08.01.2019

1 comment:

  1. இப்படியெல்லாம் மனிதர்கள் இருந்தார்களா என்று அதிசயமாக உள்ளது

    ReplyDelete