Sunday, January 13, 2019

பெரும்பாலும் கணவரின் வரலாறு இது . . .

இன்று சென்னையில் ஒரு சொந்த வேலை. அலுவலகத்திற்கு விடுப்பு. மதியம் சென்னை புத்தக விழாவிற்கும் செல்லவுள்ளேன். ஆதலால் இன்று இப்போதும் மாலையும் இரண்டு நூல்கள் குறித்து பதிவிடலாம் என்றுள்ளேன்.நூல்                         : எம்.எஸ்.சுப்புலட்சுமி
                                       உண்மையான வாழ்க்கை வரலாறு
ஆசிரியர்            :  டி.ஜே.எஸ்.ஜார்ஜ்
தமிழில்                : ச.சுப்பாராவ்
வெளியீடு          : பாரதி புத்தகாலயம்
                                      சென்னை - 18
விலை                   : ரூபாய் 220.00

கம்யூனிஸ இயக்கத்தலைவர்களின் வாழ்க்கை வரலாறு நூல்களைத் தவிர மற்றவர்களின் வாழ்க்கை வரலாறு நூல்களை பெரும்பாலும் வாங்குவதில்லை. எங்கள் தோழர் சுப்பாராவின் மொழிபெயர்ப்பு என்பதாலும் பாரதி புத்தகாலயம் வெளியீடு என்பதாலும் வெண்மணி சென்ற போது வாங்கிய நூல்.

முதல் அத்தியாயம் பெரும்பாலும் கர்னாட இசையின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றியும் இன்றுள்ள கச்சேரி வடிவம் எப்படி தோன்றியது என்பது பற்றி கொஞ்சம் தத்துவ விசாரணைகளோடு அமைந்துள்ளது.

அடுத்த சில அத்தியாயங்கள் திருமதி எம்.எஸ் அவர்களின் தாய்,  குடும்பம், அவர் சார்ந்த தேவதாசி சமூகம்,  மதுரை நிலவரம், முதல் கச்சேரி, இசைத்தட்டு என்று சுற்றி வருகிறது.

கும்பகோணம் மகாமகத்தை ஒட்டிய கச்சேரியில் எம்.எஸ் ஏற்படுத்திய தாக்கம், அதிலிருந்து தொடங்கும் அவரது வாழ்க்கை முன்னேற்றம் என்று பக்கங்கள் ஓடுகிறது. 

திரு கல்கி சதாசிவம் அவர்களின் நுழைவிற்குப் பிறகுதான் அவரது வாழ்விலும் சரி நூலிலும் சரி பரபரப்பு. தன் தாயின் விருப்பத்திற்கு மாறாகவே திரு சதாசிவத்தை எம்.எஸ். திருமணம் செய்து கொள்கிறார்.  அந்த திருமணத்திற்கு சதாசிவம் காண்பித்த அவசரத்தின் பின்னணி, அவரது முதல் மனைவியின் மரணம் ஆகியவை எல்லாம் மர்ம நாவல் ரகம். 

நூலின் பெரும்பகுதி அதன் பின்பு சதாசிவத்தையே சுற்றி வருகிறது. ஒரு மிகப் பெரிய தந்திரக்காரராகவும் எம்.எஸ் அவர்களின் அனைத்து செயல்பாடுகளையும் தீர்மானிப்பவராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ் அவர்களின் திரைப்பட வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவர் அப்படி ஒன்றும் நடிப்பாற்றலை வெளிப்படுத்தவில்லை என்று அக்காலத்தில் வந்த விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எம்.எஸ் அவர்களின் சம கால கலைஞர்கள் பற்றிய தகவல்கள் அங்கங்கே வந்து போகிறது. அவர்களைக் காட்டிலும் பக்தி என்ற அம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவராக எம்.எஸ் திகழ்ந்துள்ளார்.

கணவரின் நிழலிலேயே வாழ்ந்தவராக எம்.எஸ் காட்சியளித்தாலும் அவரது இயல்பு பற்றி வாசந்திக்கு அளித்த பேட்டியில் தெரிகிறது என்றும் நூலில் குறிப்பிடப்படுகிறது.

நூலின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள "காதலுடன்" என்ற இணைப்பு அதிர்ச்சிகரமானது. 

நூலை வாசித்து முடித்தவுடன் ஒரு நிறைவு வரவில்லை. அது ஏனென்று தெரியவில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களை விட சதாசிவம் பற்றி நூல் அதிகமாக பேசியதாலா என்று தெரியவில்லை.

இந்த நூலில் எனக்கு பிடித்த ஒரு பத்தி ஒன்று உண்டு. 

அது காவிகளுக்கு சமர்ப்பணம்


No comments:

Post a Comment