Thursday, January 24, 2019

ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் உருக்கமான நினைவலைகள்.
ஒரிஸாவில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் நேற்று முக நூலில் பதிவிட்டிருந்ததை ஒரு தோழர் பகிர்ந்து கொண்டிருந்தார். இந்தியாவின் கறுப்பு தினமான கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் படுகொலை பற்றிய அந்த பதிவு உள்ளத்தை உருக்குவதாக இருந்திருந்தது.

திரு ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி சொல்லி அவர் பதிவை தமிழாக்கம் செய்து பகிர்ந்து கொண்டுள்ளேன்.


இருபத்தி ஐந்து வருடங்கள் கடந்து விட்டன.  கண் சிமிட்டும் நேரம் போல கடந்து விட்டன.

1999 ம் வருடம் இதே நாளில்தான் கிரஹாம் ஸ்டூவர்ட் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரு மகன்கள் பிலிப் (பத்து வயது), டிமோத்தி (ஆறு வயது) ஆகியோர் கந்துஜார் மாவட்டத்தில் மனோஹர்பூர் என்ற கிராமத்தில் தங்களின் ஸ்டேஷன் வேகன் வேனில் தூங்கிக் கொண்டிருக்கையில் கொடூரமான முறையில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள்.

அந்த சமயத்தில் நான் அருகிலிருந்த மயூர்பஞ்ச் மாவட்டத்தின் மாவட்ட நீதிபதியாகவும் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தேன். மயூர்பஞ்ச் மாவட்டத்தின் தலைநகரான பரிபாடாவில்தான் கிரஹாம் ஸ்டெய்ன்ஸூம் அவர் குடும்பத்தினரும் வசித்து வந்ததால் அவரை நான் நன்கு அறிவேன்.

கிரஹாம், அவரது மனைவி கிளாடிஸ், மகள் எஸ்தர், இரண்டு மகன்கள் பிலிப்  மற்றும் டிமோத்தி ஆகியோர் அந்த கோரமான கொலை நடப்பதற்கு முப்பது மணி நேரத்திற்கு முன்பாகத்தான் எங்கள் வீட்டிற்கு வந்து சில மணி நேரங்களை எங்களோடு கழித்து விட்டுச் சென்றனர் என்பதை வேதனையோடு நினைத்துப் பார்க்கிறேன்.

அவர் எப்படி தன் தாய்நாடான ஆஸ்திரேலியாவிலிருந்து மயூர்பஞ்ச் வந்து சேர்ந்தார் என்பதை அவரோடு விவாதித்து மகிழ்ந்திருக்கிறேன். அவரால் ஒடியா மற்றும் சந்தாலி மொழிகளில் சரளமாக பேச முடியும்.

கிரஹாம் ஒரு உன்னதமான ஆத்மா. தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை செய்வதிலும் அவர்களுக்கான மறு வாழ்விலும் அவர் தன்னலமின்றி பாடுபட்டு வந்தார். அவரது அர்ப்பணிப்பு மிக்க பணியை பல முறை அருகிலிருந்து பார்த்து “இந்த மனிதனால்  எவ்வாறு இப்படி இருக்க முடிகிறது” என்று வியந்து போயிருக்கிறேன்.

சம்பவம் பற்றி அறிந்ததும் நானும் என்னுடைய காவல்துறை கண்காணிப்பாளரும் உடனே அங்கே விரைந்தோம். மாவட்டத்தின் இன்னொரு பக்கத்திலிருந்த இருந்த அப்பகுதிக்குச் செல்ல நான்கு மணி நேர பயணமானது.

நான் சொல்லவொண்ணா துயரத்தில் மூழ்கிப் போனேன். தற்காலிக சவப்பெட்டிகளை தயார் செய்தோம். கட்டாக்கில் பிரேதப் பரிசோதனை முடிந்ததும் சடலங்கள் பரிபாடாவிற்கு கொண்டு வரப்பட்டன. சவ அடக்கம் மற்றும் பாதுகாப்புப் பணிகளை செய்து கொண்டிருந்தோம்.

சவ அடக்கம் செய்யும் இடத்தை விரல்களையும் பாதங்களையும் இழந்த சில தொழு நோயாளிகள் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்ததை நான் பார்த்தேன்.. அவர்கள் கதறி அழுது கொண்டிருந்தனர்.

நானும் மௌனமாக கதறினேன். ஆனால் வடிந்து கொண்டிருக்கும் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. தன்னுடைய கணவனையும்  இரு மகன்களையும் இழந்த கிளாடிஸ் என்னையும் என் மனைவியையும் தேற்றினார் என்பதை என்னால் மறக்க முடியாது.

சில வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா திரும்புவதற்கு முன்பாக மயூர்பஞ்ச் தொழு நோயாளிகளில் இல்லத்தில் ஒரு சிறிய கட்டிடத்தை திறந்து வைக்க கிளாடிஸ் என்னை அழைத்திருந்தார். அதன் பின்பு நான் டெல்லிக்கு சென்று விட்டேன்.

ஒடிசா மாநிலத்தின் தொழுநோயாளிகள் மத்தியில் ஆற்றிய பணிக்காக இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய விருதான பத்மஸ்ரீ விருது 2005 ல் கிளாடிஸிற்கு வழங்கப்பட்டது. சமூக நீதிக்காக வழங்கப்படும் அன்னை தெரஸா நினைவு விருதை அவர் 2016 ம் ஆண்டு பெற்றார்.

கிளாடிஸ் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். அவரது மகள் எஸ்தருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. எப்போதெல்லாம் கிளாடிஸ் இந்தியா வருகிறாரோ அப்போதெல்லாம் வாய்ப்பிருந்தால் சந்திப்போம். 2010 ல்  என் உடல் நிலை சரியில்லாத தருணத்தில் என்னை நலன் விசாரிக்க சென்னை வந்திருந்தார்.

கடந்தாண்டு நான் ஆஸ்திரேலியா சென்ற போது ஒரு நாள் இடைவெளியில் அவரைப் பார்க்கத் தவறி விட்டேன்.

கிரஹாம் படுகொலைச் சம்பவத்தை என்னால் மறக்க இயலாது. என் ஆழ் மனதில் ஏற்பட்ட நிரந்தர வடு இது. எந்நாளும் அப்படியே நிலைத்திருக்கும்.

கிரஹாம், பிலிப், டிமோத்தி அமைதியாய் துயிலிலிருக்கட்டும்.

கிளாடிஸ், எஸ்தர் மற்றும் அவர் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்.

மனிதமும் கருணையும் அன்பும் வாழிய, வாழியவே . . .

ஆர்.பாலகிருஷ்ணன்


3 comments:

  1. நெகிழ்ச்சியாக உள்ளது

    ReplyDelete
  2. மதவெறிக்கு பலியானவர்கள்.

    ReplyDelete
  3. It is because of these people that the earth survives.

    ReplyDelete