Saturday, January 5, 2019

மறக்க இயலா கொடுங்கனவு
வெண்மணி கொடூரம் குறித்த ஒரு வித்தியாசமான தொகுப்பு நூலான “அரை நூற்றாண்டு கொடுங்கனவு – கீழ்வெண்மணிக் குறிப்புகள்” என்ற இந்த நூலின் ஆசிரியர் தோழர் செ.சண்முகசுந்தரம் எங்கள் தஞ்சைக் கோட்டத் தோழர் என்ற பெருமிதத்தை முதலில் பதிவு செய்கிறேன். முகநூலில் விலாசத்தை எழுதியதும் மறு நாளே நூலை அனுப்பி வைத்தமைக்கு நன்றியையும் பதிவு செய்கிறேன். (ஆனால் நான்  தொகையை  மிகுந்த தாமதத்தோடு கொஞ்ச நேரம் முன்புதான் அனுப்பி வைத்தேன் என்ற தகவலையும் கூட) 


நூல் அறிமுகம்

நூல்                               : “அரை நூற்றாண்டு கொடுங்கனவு
                                            கீழ்வெண்மணிக் குறிப்புகள்
ஆசிரியர்                     : செ.சண்முகசுந்தரம்
வெளியீடு                    : அன்னம் பதிப்பகம்
                                           தஞ்சாவூர்
விலை                            : ரூபாய்  150.00

ஆதி பொதுவுடமைச் சமூகத்தில் அனைவருக்கும் பொதுவாக இருந்த நிலம் எப்படி சிந்து சமவெளி நாகரீகக் காலத்தில்  சிலரின் நிலக்குவியலாய் மாறத் தொடங்கியது, மௌரியர் ஆட்சிக் காலத்தில் சாணக்யன் ஆலோசனைப்படி சிலருக்கு மட்டும் இலவச நில வினியோகம்,  சோழப் பேரரசில் விவசாயிகள் ஒடுக்கப் பட்ட கொடூரம்,போன்ற தகவல்களோடு  முகலாயர் ஆட்சிக் காலம், பின்பு ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் ஆகியவற்றில் நிலம் பட்ட பாடு, ஜமீந்தார்கள், மிராசுதார்கள் உருவான வரலாற்றுப் பின்னணியோடு விரிகிறது நூல்.  

கீழத்தஞ்சை மாவட்டத்தில் எந்தெந்த மிராசுதார்கள் வசம் எவ்வளவு நிலங்கள் இருந்தது என்றும் அவை வந்த பின்னணியையும் சொல்கிற நூல் அவர்கள் அன்று கட்டவழித்த கொடுமைகளையும் கூறுகிறது. வெண்மணிக்கு முந்தைய விவசாயத் தொழிலாளர்களின் எழுச்சியையும் ஏற்பட்ட  ஒப்பந்தங்களையும் பற்றி கூறுகிற நூல் தெலுங்கானா போராட்டம், வங்கத்தின் தேபாகா போராட்டம் பற்றியும் பதிவு செய்கிறது.  இப்போராட்டங்களுக்கு நிகரான எழுச்சி மிக்க போராட்டம் கீழத்தஞ்சை விவசாயிகளின் போராட்டம் என்றும் பதிவு செய்கிறது.

இருளைக் கிழித்த பேரொளி என்ற தனித்தலைப்பில்  விவசாயத் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்த நாயகன் தோழர் பி.சீனிவாசராவ் பற்றி உணர்ச்சிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாம்பவனோடை சிவராமன் பற்றியும் கூட.

அதே போல தோழர் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் பற்றிய கட்டுரையும் முக்கியமானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எந்த பதிவுகளிலும் அவரது பெயர் இடம் பெறவில்லை என்ற விமர்சனமும் உள்ளது. தோழர் ஏ.ஜி.கே குறித்து நான் முதலில் அறிந்தது தோழர் தியாகு எழுதிய “சுவருக்குள் சித்திரங்கள்' மூலமாகத்தான். சொல்லப் போனால் இந்த நூலைப் படித்த பின்பு நேற்று மீண்டும் “சுவருக்குள் சித்திரங்கள்'  நூலை எடுத்து தோழர் ஏ.ஜி.கே வரும் பகுதிகளையும் அந்தணப்பேட்டை முக்கொலைகள் பற்றி படித்தேன்.  அழித்தொழிப்புக் கொள்கையில் தனக்கு கொஞ்சமும் உடன்பாடு கிடையாது என தோழர் ஏ.ஜி.கே ஆணித்தரமாக சொன்னதாக அதிலே தியாகு குறிப்பிட்டிருப்பார்.

எனக்கு நினைவுக்கு வரும் ஒரு தகவலை இங்கே பதிவு செய்வது அவசியம் என்று கருதுகிறேன். தோழர் பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய “ராமையாவின் குடிசை” மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னெடுப்பு. தயாரிப்பில் தொடங்கி விசிடி வெளியீடு வரை மார்க்சிஸ்ட் கட்சி செய்ததுதான். தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களின் முழுமையான வழிகாட்டுதல் இல்லையென்றால் இந்த ஆவணப் படம் சாத்தியமே இல்லை என்று தோழர் பி.கே கூறியுள்ளார். தோழர் என்.சங்கரய்யா வெளியிட்ட இந்த ஆவணப்படத்தில் தோழர் ஏ.ஜி.கே முழுமையாக பயன்படுத்திக் கொள்ளப் பட்டிருப்பார். முக்கியமான இரண்டு தோழர்களான தோழர் கோ.வீரய்யன் மற்றும் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி  ஆகியோர் பெயர்கள் கூட இந்த நூலில்  விடுபட்டுள்ளது. உதவிய நூல்கள் பட்டியலில் தோழர் ஜி.வி யின் “செங்கொடியின் கீழ் நீண்ட பயணம்” நூல் இடம் பெற்றுள்ளது.

பெரியார் குறித்த அவதூறுகள் கட்டுரையில் கோபாலகிருஷ்ண நாயுடு தந்தை பெரியாரை சந்தித்ததாக சொல்லப்படும் தகவல் தவறு என்றும் பெரியார் பார்க்க மறுத்த ஒரே நபர் கோபால கிருஷ்ண நாயுடு என்று ஆதாரபூர்வமாக நிறுவுகிறார் ஆசிரியர். வெண்மணி சம்பவம் குறித்து பெரியார் வெளியிட்ட அறிக்கை முழுதுமாக அளிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே இன்றைய தேவையாகவும் இருக்கிறது. வெண்மணி நிகழ்வு குறித்த தன் கோபத்தை வெளிப்படுத்துகிற தந்தை பெரியார், அதற்கான தீர்வைச் சொல்லுகிற போது சறுக்கி விடுகிறார் என்பதையும் ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார். கம்யூனிஸ அறிக்கையை முதலில் தமிழில் வெளியிட்ட தந்தை பெரியார் பிறகு தனது ஜஸ்டிஸ் பார்ட்டி சகாக்களின் நிர்ப்பந்தம் காரணமாக சமதர்ம பிரச்சாரத்தை கைவிட வேண்டிய நிலை என்பதையும் சொல்கிறார். இந்த முரண்பாடுகள் காரணமாக தந்தை பெரியாரை அவதூறு செய்ய வரலாறு அனுமதிக்காது என்பது சரியான பார்வை.   

சி.பி.எம்மின் அன்றைய நாகை வட்டச்செயலாளர் தோழர் வே.மீனாட்சிசுந்தரம் தமிழக முதல்வர் அண்ணாவிற்கு அனுப்பிய நீண்ட கடிதத்தை பிரசுரித்துள்ள ஆசிரியர் அக்கடிதத்தின் மீது மட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் வெண்மணி சம்பவமே நிகழ்ந்திருக்காது என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.  “அன்றைய திமுக அரசாங்கம் யார் பக்கம் இருந்தது?  காலம் காலமாக சீழ்ப்பிடித்துப் போயிருந்த நிலப்பிரபுத்துவ சாய்மானம் கொண்ட அதிகார வர்க்கத்தின் மென்னியைப் பிடித்துத் திருகி மாற்ற முடியாமல் அண்ணா திணறினாரா? முதலமைச்சர் அண்ணாவும் அமைச்சர் மு,கருணாநிதியும் எங்கே தவறினார்கள்? “ என்ற கேள்விகளோடு அக்கட்டுரை முடிகிறது.

வெண்மணி பற்றி வெளியான படைப்புக்களான இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல், தோழர் சோலை சுந்தரப்பெருமாளின் செந்நெல், மீனா கந்தசாமியின் குறத்தியம்மன், பாட்டாளியின் கீழைத்தீ பற்றி நூல் வெகுவாக அலசியுள்ளது. கோபால கிருஷ்ண நாயுடு ஆண்மைக்குறைபாடு உள்ளவன், அந்த உளவியல் சிக்கல்தான் வெண்மணி சம்பவத்திற்கு காரணம் என்று சித்தரித்த குருதிப்புனல் தொடர்பான விவாதங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதிலே தமுஎகச கௌரவத்தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனத்திற்கு தோழர் தமிழ்ச்செல்வனே விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

கோபாலகிருஷ்ண நாயுடுவை வதம் செய்ய வந்தவர்களை வெண்மணி மக்கள் எப்படி அணுகியிருப்பார்கள் என்ற புனைவோடு நூல் முடிகிறது.

இந்த நூலின் சிறப்பாக சரளமான மொழி நடை என்று சொல்வேன். உணர்ச்சிகளின் குவியலாக அமைந்துள்ளது வேகமான வாசிப்புக்கு உதவுகிறது. பொருத்தமான இடங்களில் தோழர் இன்குலாப் அவர்களின் கவிதைகள் கையாளப்பட்டுள்ளது கூடுதல் அழுத்தம் அளிக்கிறது.

ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் சொல்லப்பட்டுள்ள குறிப்புக்கள் மற்றும் நூலின் இறுதியில்  நூல் உருவாக்கத்திற்கு உதவிய நூல்கள் என்று அளிக்கப்பட்டுள்ள நீண்ட பட்டியல் தோழர் சண்முகசுந்தரம் அவர்களின் அபாரமான உழைப்புக்கு ஒரு அசைக்க முடியாத சான்று.

வெண்மணி - வாழ்வில் என்றும் மறக்க இயலாத கொடுங்கனவு. 

வெண்மணி பற்றிய "அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு" - மறக்க இயலாத முக்கியமான வரலாற்றுக் குறிப்பு 

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தோழர்


1 comment:

  1. Red salute to both the writer and the introducer comrades.

    ReplyDelete