Saturday, January 5, 2019

சோனியாஜி அது "லோக்கல்" பாலிட்டிக்ஸா?.


சபரிமலையில் பெண்கள் நுழைந்ததை முன்னிட்டு காவிகள் கலவரம் நடத்திக் கொண்டிருந்த அதே வேளையில் அதனை கறுப்பு தினமாக அனுசரிக்க, காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கேரள எம்.பி கையில் கட்டிக் கொள்ள கறுப்புப் பட்டை கொடுத்துக் கொண்டிருந்தாராம். 

அதை பார்த்து கண்டித்த சோனியா அம்மையார் அப்படி கறுப்புப் பட்டை அணிவது தவறு என்று சொன்னார் என அவருக்கு பாராட்டு மழையை பலரும் குவித்துக் கொண்டுள்ளார்கள். 

"நாம் பெண்களின் உரிமைகளை மதிப்பவர்கள். அங்கே நடக்கும் லோக்கல் பாலிட்டிக்ஸை இங்கே கொண்டு வராதீர்கள்"  என்றும் சொல்லியுள்ளார் என்று பாராட்டுபவர்களே சொல்கிறார்கள். 

கேரளாவில் காங்கிரஸ் கட்சி செய்வதை வெறும் லோக்கல் பாலிட்டிக்ஸ் என்று சுருக்கி விட முடியுமா திருமதி சோனியா அம்மையார் அவர்களே?

சபரிமலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி பெண்கள் செல்வதை உங்கள் கட்சியின் அகில இந்தியத் தலைமை வரவேற்கிற போது அகில இந்தியத் தலைமையின் கருத்துக்கு முரண்பட்டு கேரளத் தலைமை செயல்படுவதை வெறுமனே லோக்கல் பாலிட்டிக்ஸ் என்று மட்டும்தான் பார்ப்பீர்களா? 

இந்தியா முழுதும் யாருக்கு எதிராக அரசியல் நடத்துவதாக (போராடுவது என்ற வார்த்தை பொருத்தமில்லை) உங்கள் கட்சி சொல்கிறதோ, அவர்களோடு உங்கள் கேரள மாநிலத் தலைமை கைகோர்த்துக் கொண்டு கலவர அரசியல் செய்வது வெறும் லோக்கல் பாலிட்டிக்ஸ் மட்டும்தானா?

பெண்களின் உரிமைகளை மதிப்பதாகச் சொல்லும் ஒரு கட்சியின் மாநிலத் தலைமை பெண்களை இழிவுபடுத்துகிற, தாக்குகிற கேரளத் தலைமையை அது வெறும் லோக்கல் பாலிட்டிக்ஸ் என்று அந்த அராஜகம் தொடர அனுமதிக்கப் போகிறதா?

கேரளத் தலைமையின் லோக்கல் பாலிட்டிக்ஸ், அதை கண்டுகொள்ளாத உங்கள் போக்கு, அதன் மூலம் உங்கள் கட்சி இரட்டை வேடம் போடுவதாக  நாடு முழுதும்  பேசப்படுகிறதே, அது தெரியுமா உங்களுக்கு?

பாபர் மசூதியில் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட ராமர் சிலையை வழிபட அனுமதி கொடுத்த தவறான முடிவை உங்கள் கணவர் எடுத்ததால்தான் அந்த பிரச்சினை இன்று மிகப் பெரியதாக வளர்ந்துள்ளது. காவிகளின் அரசியல் ஆதாயத்திற்கும் உதவியுள்ளது.

உங்கள் கட்சியின் சார்பில் பிரதமராக இருந்த நரசிம்மராவ், மசூதியை இடிப்பதை வேடிக்கை பார்த்த கொடுமையைப் போல

உங்கள் கட்சி கேரளத்தில் காவிகளோடு கை கோர்த்து செய்யும் அராஜகத்தை "அது வெறும் லோக்கல் பாலிட்டிக்ஸ்" என்று வேடிக்கை பார்க்கும் முட்டாள்தனத்தை இனியாவது தொடராதீர்கள். 




No comments:

Post a Comment