Monday, July 7, 2014

அவர்களுக்கு இல்லாத வெட்கம் எனக்கு மட்டுமே ஏன்?

தீக்கதி இதழின் ஞாயிறு இணைப்பான வண்ணக்கதிர் இதழின்
06.07.2014 இதழில் வெளியான எனது சிறுகதை "எனக்கு ஏன் வெட்கம்?"
இங்கே கீழே தந்துள்ளேன். படித்து விட்டு கருத்துக்களை பகிரவும்

எனக்கு ஏன் வெட்கம்?
வேலூர் சுரா

அன்று ட்ரெயினில் அவ்வளவு  நெரிசல் இல்லை. சனிக்கிழமை என்பதால் அரசு ஊழியர்கள் இல்லாமல் தாராளமாகவே இடம் இருந்தது. இருந்தாலும் ட்ரெயினில் ஏறி மேலே பொருட்களை வைக்கும் இடத்தில் படுத்துக் கொண்டேன். யாரும் எனது முகத்தை பார்க்காதபடி கைக்குட்டையால் மூடிக்கொண்டேன்.

இரண்டு மாதங்களாக என் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

வண்டி முன்னே வேகமாய் விரைந்து செல்ல என் மனம் மட்டும் பின்னோக்கிப் போனது.

ராஜஸ்தானிலிருந்து எனது தந்தை தமிழகத்திற்கு பிழைக்க வந்தவர். பணம் உள்ளவர்கள் அடகுக்கடைகளும் நகைக்கடைகளும் வைத்தார்கள். சொற்ப பணம் மட்டுமே இருந்ததால் என் தந்தையால் சிறிய அளவில் ஒரு துணிக்கடைதான் வைக்க முடிந்தது. என்னுடைய பெயரில் கிஷோர் ரெடிமேட்ஸ் என்று நகரத்தின் முக்கிய பஜாரில் அவரது கடை இருந்தது. நானும் வளர்ந்தேன். கடையும் வளர்ந்தது. ஒரு தரமான ரெடிமேட்ஸ் கடை என்ற பெயரும் கூட கிடைத்திருந்தது. படிப்பு சரியாக வராமல் நானும் கடைக்கே போய் விட்டேன். ஹ்ம், அவர் மட்டும் இருந்திருந்தால் எனக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்குமா?

பெரிய அளவில் வசதிகள் இல்லாவிட்டாலும் கூட நிறைவான வாழ்க்கை. அழகான ஒரு வீடு, குழந்தைகளுக்கு நல்ல படிப்பு என்று வாழ்க்கை சீராகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான் திடீரென சில மாற்றங்கள் ஊரில் தென்பட்டன. பெரிய நகரங்களில் இருந்த நகைக் கடைகள், துணிக்கடைகள் இங்கேயும் கிளைகள் திறந்தன. பிரம்மாண்டமான, குளிர்சாதனம் செய்யப்பட்ட, சீருடை அணிந்த பணியாளர்கள், அதிரடி விலை குறைப்பு விற்பனை எல்லாமே வாடிக்கையாளர்களை திசை மாற்றியது. ஆனாலும் கூட கிஷோர் ரெடிமேட்ஸின் வணிகத்தில் மிகப் பெரிய பாதிப்பில்லை.

“இருப்பதைக் கொண்டு திருப்தியடைந்திருந்தால் இப்படிப்பட்ட நிலைமை வந்திருக்காதே” என்று பெருமூச்சு விட்டேன்.

கால வெள்ளம் எப்போதும் ஒரே சீராகச் செல்வதில்லையே! ஒரு வருடமாக வந்து கொண்டிருக்கிற வாடிக்கையாளர் அவர். அந்த அழகிய நம்பி சார் சிரிக்க சிரிக்க பேசும் இயல்பு உடையவர். மனித உரிமை அமைப்பு, நுகர்வோர் அமைப்பு என்றெல்லாம் பொறுப்பில் இருக்கிற ஒரு தனியார் கம்பெனி ஊழியர். அவர்தான் முதலில் ஆசையை தூண்டி விட்டார்.

“என்ன சார், எவ்வளவு நாள் இப்படி சின்ன கடையாவே நடத்திக்கிட்டு இருப்பீங்க, சாதாரண மளிகைக் கடை வச்சிக்கிட்டுருந்த ஆளுங்கல்லாம் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்னு பெரிசா மாத்திட்டாங்க. நிறைய பேர் சத்துவாச்சாரி, காட்பாடினு பிராஞ்ச் ஆரம்பிச்சுட்டாங்க. நீங்க மட்டும் அப்படியே மாறாமலே இருக்கீங்களே!”

“அட போங்கஜி, அதுக்கெல்லாம் எங்க சார் பணம் இருக்கு?”

“என்னதான் பிசினஸ் பண்றீரோ? இப்பல்லாம் எவன் கையில காசு வச்சுக்கிட்டு தொழில் ஆரம்பிக்கிறான். எல்லாம் கடன்தான்”.

“நீங்க வேறஜி, பேங்குல கடன் வாங்க அலையற நேரத்துல இருக்கிற பிஸினஸும் போய்டும்.”

“உங்களை யார் அங்க போய் நிக்கச் சொல்றாங்க! உங்களை மாதிரி ஆளுங்களுக்கு கொடுக்கறதுக்குனே எவ்வளவு பேர் இருக்காங்க தெரியுமா? இப்ப சொல்லுங்க, நமக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க, நானே அழைச்சுக்கிட்டு போறேன்.”

“பாக்கலாம்ஜி, வட்டி கட்டி மாளாது”

ஆனால் அன்றோடு அந்த பேச்சுவார்த்தை முடியவில்லை. அடுத்தடுத்து வரும் போது வற்புறுத்திக் கொண்டே இருந்தார்.

“கொஞ்சம் கற்பனை செஞ்சு பாருங்க சார், இரண்டு மாடிக் கட்டிடம், புல்லா ஏ.சி, கீழே ஃபுல்லா குழந்தைங்க, லேடீஸ் ட்ரெஸ், மாடி ஃபுல்லா ஜெண்ட்ஸ்க்கு, திறப்பு விழா அன்னிக்கு சும்மா ஊர் முழுசும் ப்ளெக்ஸ் பேனர் வச்சா கூட்டம் வந்துடாதா!  சென்னையில உள்ள நம்ம ஃப்ரெண்ட்ஸ் மூலமா யாராவது டி.வி ஹீரோயின் யாரையாவது கூட்டிக்கிட்டு வரேன். காலேஜ் பசங்களுக்கு புடிச்சுப் போனா அப்புறம் உங்களை கையிலயே பிடிக்க முடியாது. உங்களுக்கு இருக்கிற டேஸ்டுக்கு பாம்பேலேந்து லேட்டஸ்டா கொண்டு வந்திர மாட்டீங்களா!”

கற்பனை செய்து பார்க்கும்போது சுகமாகத்தான் இருந்தது. புதிதாக கடை திறக்கும் போது எனக்கென்று தனி அறை, அதில் சுழல் நாற்காலி போட்டு உட்கார வேண்டும். அங்கங்கே கேமரா வைத்து யார் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். வாசலில் ஆறு பொம்மைகள் வைத்து தினசரி துணி மாற்ற வேண்டும். ஒரு டெய்லரை நிரந்தரமாக பணியில் வைக்க வேண்டும். மேஜைகள் நல்ல மரத்தால் இழைக்கப்பட்டிருக்க வேண்டும், வாடிக்கையாளர்களுக்கு நல்ல நாற்காலிகளாக போட வேண்டும். ராஜஸ்தான் போய் நல்லதாக மார்பிள் வாங்க வேண்டும், ஷாண்டலியர் விளக்குகள் மாட்டி வைக்க வேண்டும். இப்படி வரிசையாக கற்பனைகள். “உங்கள் கிஷோர் ரெடிமேட்ஸ் இப்போது இன்னும் சிறப்பாக, புதிய புதிய வெரைட்டிகளோடு” விளம்பர வாசகமே மனதில் உருவாகி விட்டது. அந்த கற்பனை சுகத்தில் மிதந்து கொண்டே அழகிய நம்பி சாரைப் பார்த்து

“ஜி, உங்க வார்த்தைகள் கொடுக்கிற தைரியம்தான். நீங்கதான் எனக்கு பக்கத்தில இருந்து எல்லாம் முடிச்சுக் கொடுக்கனும்”

“கவலையே படாதீங்க சார். இன்னும் ஒரு வருஷத்தில நீங்கதான் நம்ம ஊர்லயே நம்பர் ஒன்”

நான் எனது முடிவை சொன்ன போது அவரும் எனது கடையின் கேஷியரை ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டதை நான் கவனித்தாலும் அதில் உள்ள வில்லங்கத்தை கவனிக்கத் தவறி விட்டேன்.

பிறகு காரியங்கள் மின்னல் வேகத்தில் நடந்தது.  ஊருக்கு வெளியே எப்போதோ வாங்கிப் போட்ட மனையை விற்று புதிதாக கடைகள் வந்து கொண்டிருக்கிற சாலையிலேயே ஒரு இடத்தை பிடித்து 99 வருட லீஸிற்கு எடுத்தேன். நம்பி சார் ஒரு பைனான்ஷியரிடம் கூட்டிச்சென்றார்.

வெள்ளை கலரில் பேண்ட், ஷர்ட், ஷூ கூட வெள்ளைக் கலரில், இரண்டு கைகளிலுமாக வைரக்கல் பதித்த நான்கு மோதிரங்கள், கழுத்தை ஒட்டி ஒரு செயின், ஓம் என்று டாலர் போட்டு  தாம்புக் கயிறு போல இன்னொரு செயின், கையில் பிரேஸ்லெட்டோடு சாயம் பூசிய தலையோடு இருந்தார்.

“நான் சொன்னேன்ல சார்தான்” என்று அறிமுகம் செய்து வைத்தார் நம்பி சார்.

“உங்களுக்கு பணம் எவ்வளவு வேணும்னாலும் தரேன். ஆனா வட்டி மட்டும் கரெக்டா வந்திடனும். ரெண்டு வருஷத்தில அசலை திருப்பிடுவீங்கனு நம்பி சொன்னார். வட்டியோ, அசலோ தேதி தப்பினா நான் என்ன செய்வேன்னு தெரியாது. பின்னாடி வருத்தப்படாதீங்க”

கறாராக அவர் பேசும் போது ஒரு நிமிடம் யோசித்தேன். அந்த யோசனையை கலைத்தபடி அழகிய நம்பி,

“அண்ணா, சார் அதெல்லாம் கரெக்டா கட்டிடுவாரு. அவங்க ஆளுங்கல்லாமே இந்த தொழில் பண்றவங்கதான, அவருக்கு தெரியாததா. சொந்தக்காரங்க கிட்ட போக வேண்டாம்னுதான் உங்க கிட்ட வந்திருக்காரு”

வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்திட்டு, கையெழுத்திட்ட வெறும் செக்குகள் ஆறைக் கொடுத்து விட்டு சூட்கேசில் பணத்தை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். நல்ல நாள் பார்த்து கட்டிட வேலை தொடங்கியது. வேகமாகவும் நடந்தது. இந்த வருடம் தீபாவளிக்கு நல்ல விற்பனை. பெரிய கடைகளுக்கு நிகராக எனது கடையிலும் வியாபாரம். பொங்கலுக்கு முன்பாக புதிய கடையை திறந்து விட்டால் நன்றாக இருக்கும் என்று இஞ்சினியரையும் அவசரப் படுத்தினேன்.

“சார், மார்பிள் வாங்கிக் கொடுத்திட்டா தரையைப் போட்டுடலாம், பெயிண்ட் வேலையையும் முடிச்சுடலாம். உட் வொர்க் கூட பாதி முடிஞ்சுடுச்சு. இந்த வேலை முடியறதுக்குள்ள அதுவும் முடிஞ்சுடும்”  
இஞ்சினியர் சொன்னதுமே ராஜஸ்தான் புறப்பட ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினேன். காட்பாடியிலிருந்து புறப்படும் கேரளா எக்ஸ்பிரசிலேயே மறுநாள் புறப்பட கேஷியர்  டிக்கெட் வாங்கிக் கொடுத்து விட்டார். ஜோத்பூரில் ஒரு வாரம் மாமனார் வீட்டில் தங்கி மார்பிள் மற்றும் பல பொருட்களை வாங்கி லாரியில் அனுப்பினேன். புதிதாக கடை திறப்பதில் சொந்தக்காரர்களுக்கெல்லாம் ரொம்பவே சந்தோஷம். ராஜஸ்தானின் பிரத்யேக இனிப்பான பூசணிக்காய் அல்வாவை கிலோக்கணக்கில் வாங்கி தனது பெண்ணுக்கும் பேரப்பசங்களுக்கும் வாங்கிக் கொடுத்தார்கள். வேலூர் திரும்பும் முன்னதாக தீர்த்தங்கரர்களின் ஆசி பெறலாம் என்று மவுண்ட் அபு போயிருந்தேன்.
 தில்வாரா கோயிலில் ஆதிநாதர் கோயிலில் நின்று கொண்டிருந்த போதுதான் அந்த அதிர்ச்சியூட்டும் தொலைபேசி வந்தது. நான் அனுப்பிய செக் பவுன்ஸாகி விட்டதாக பம்பாயில் உள்ள வணிகரிடமிருந்து போன். அதற்கடுத்து இன்னும் சிலரிடமிருந்தும். "ஐம்பதாயிரம் ரூபாய் கூட அக்கவுண்டில இல்லாமல் செக் கொடுப்பீங்க" என்று இஞ்சினியர் வேறு கடுப்படித்தார்.
 என்ன நடக்கிறது என்னை சுற்றி?
குளிர்காலத்தின் தொடக்கம் என்பதால் காற்று சிலுசிலுவென்று வீசிக் கொண்டிருந்த போதே வியர்த்துக் கொட்டியது. நிற்பதற்கு கால்களில் வலுவில்லாமல் ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு கீழே அமர்ந்தேன். 
கேஷியருக்கு போன் போட்டால் அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. கடை எண்ணுக்கு போன் போட்டால் ரிங் போய்க்கொண்டே இருந்தது. கடை திறக்கவில்லையா என்ன? ஏன் யாரும் போனை எடுக்கவில்லை? மனைவிக்கு போன் போட்டால் "அந்த பைனான்சியர் வந்து மிரட்டி விட்டுப் போனதாக" அழுது கொண்டே சொன்னாள்.   
 ஐந்தாறு முறை முயற்சித்த பின்பு பேங்க் மேனேஜர் போனை எடுத்தார். அவர் சொன்ன தகவல் இன்னும் அதிர்ச்சியளித்தது.  தலையை சுற்ற வைத்தது. "உங்க கேஷியர் பெயரில் நீங்கள் கொடுத்திருந்த மூன்று செக்குகளை அவர் கணக்கில் போட்டுக் கொண்டார். எனக்குக் கூட சந்தேகம் வந்து கேட்டதற்கு நீங்கள் வர ஒரு மாதம் ஆகும் என்பதால் கட்டிட வேலைகளை என்னை பார்க்க சொல்லியுள்ளார் என்று கூறினாரே. செக்கில் உள்ள கையெழுத்து உங்களுடையதுதான் என்பதை உறுதி செய்த பிறகுதான் அவரது கணக்கிற்கு மாற்றினோம். மறுநாள் அவர் பணம் எடுக்க வந்த போது உங்க ப்ரெண்டு  நம்பியும் கூட  இருந்தாரே"

நம்பி சாரின் போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. செக்புக் என்னிடம் உள்ளது. பிறகு நான் கையெழுத்திட்ட செக் எப்படி அவனிடம்? அழகிய நம்பி ஏன் அவனுடன் வங்கிக்கு போனார்? பைனான்ஷியருக்கான வட்டியைத்தான் ஒவ்வொரு மாதமும் நம்பி சார் வாங்கிக் கொண்டு போனாரே? அவர் மிரட்ட வேண்டிய அவசியம் என்ன?

விடை தெரியாத கேள்விகளோடு  வீடு வந்து சேர்ந்தேன். கேஷியர் வீடு பூட்டிக் கிடந்தது. பைனான்ஷியருக்கு வட்டி கட்டிய ரசீதுகள் கடையிலிருந்து காணாமல் போயிருந்தது. நான் பணம் கொடுத்ததற்கான ஆதாரம் எதுவும் என்னிடம் இல்லை. வங்கிக்கு சென்று பார்த்தால் பைனான்ஷியருக்கு கொடுத்த காசோலைகள் மூலம்தான் கேஷியர் கணக்கிற்கு பணம் மாறியிருந்தது. 

அந்த மனிதனைப் போய்ப் பார்த்தால் 

“பத்து பைசா வட்டி கூட இன்னும் வரல. கணக்கு போட்டா நான் கொடுத்த அசல் ஐம்பது லட்சம், வட்டி அபராத வட்டி, கூட்டு வட்டி எல்லாம் சேர்ந்து ஒரு சி வந்துடுச்சு. ஒரு வாரத்தில கட்டு. இல்லைனா ஜெயில்தான். நான் மாதாமாதம் வட்டி கட்டியதையோ அவரிடம் கொடுத்திருந்த காசோலைகள் மூலம்தான் என் வங்கி பாலன்ஸ் முழுதும் சுரண்டப்பட்டிருந்தது என்பதையோ அவர் காது கொடுத்து கேட்க தயாரில்லை. 

நம்பி சாரை வீட்டில் சென்று பார்த்தால் அவரது தொனியே மாறியிருந்திருந்தது. நீங்க ஏமாந்தா நான் என்ன பண்ணுவேன் என்றவரிடம் நீங்கள்தானே கேஷியரோட பாங்குக்கு போனீங்க என்று கேட்டவுடன் எகிற ஆரம்பித்து விட்டார்.

“பிரண்டோட கடையில வேலை செய்யறவன் கூப்பிட்டான்னு போனா திருட்டுப்பட்டம் கட்டறியா, ஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்து என் கூடயே தகறாரு பண்றியா?, நான் யாருனு தெரியுமில்ல, ஒழிச்சிடுவேன். உன் கிட்ட வேலை பாத்தவனுக்கு நீ சம்பளம் கொடுத்தியோ கொடுக்கலயோ, அவன் ஓடிட்டான், போ, போய் போலீசில கேஸ் கொடு. அப்ப உன் வண்டவாளம்லாம் வெளியே வரும்”

இத்தனை நாள் சிரிக்க சிரிக்க பேசிக்கொண்டிருந்த அழகிய நம்பியா இவர்? அவர் வீட்டுச் சுவரில் புதிதாக தொங்கிக்கொண்டிருந்த 42 இஞ்ச் எல்.இ.டி தொலைக்காட்சி, இரண்டு ஸ்பிலிட் ஏசி, குஷன் சோபா இவை எல்லாமே அவர் கையில் புதிதாக பணம் புரண்டுள்ளது என்பதன் சாட்சியாக இருந்தது. என் பணம்தானோ?
வக்கீலிடம் போனேன். அனைத்தையும் கேட்டு விட்டு அவர் நிதானமாகச் சொன்னார்.
“ உங்களைச் சுற்றி ஒரு சதி வலையை அழகாக பின்னியிருக்கிறார்கள். இதில் பைனான்சியர், அழகிய நம்பி, கேஷியர் எல்லோருமே கூட்டு. உங்களை ராஜஸ்தான் அனுப்பி விட்டு உங்கள் பணத்தை துடைத்து எடுத்து விட்டார்கள். கேஷியரை எங்காவது அனுப்பி இருப்பார்கள். மற்றவர்கள் சம்பந்தப்பட்டதற்கு நேரடி தொடர்பு கிடையாது. கேஷியர் மீது போலிசில் புகார் கொடுங்கள். அவன் கிடைப்பானா, கிடைத்தாலும் பணம் கிடைக்குமா என்பது சந்தேகம். ஆனால் பைனான்ஷியர் கேட்கும் தொகையை கட்டாமல் இருக்க முடியாது. இன்னும் அவனிடம் மூன்று செக் இருக்கு. அதை பாங்கில போட்டு பவுன்ஸ் ஆக வச்சு செக் மோசடி என்று உங்களை உள்ளே கூட தள்ள முடியும்”

என்னுடைய இத்தனை வருட உழைப்பு, குடும்ப பாரம்பரியம், எல்லாமே வீதிக்கு வந்து விட்டது. நான் ஏமாற்றப்பட்டேன் என்பதை நம்ப பலரும் தயாராக இல்லை. இவனுக்கு நல்லா வேணும் என்று மனதிற்குள் மகிழ்ந்தவர்கள் உண்டு. பைனான்ஷியரின் நெருக்கடி முற்ற வேறு வழியில்லாமல்    பழைய கடை, பாதியில் நின்று போயிருந்த கடை, கடையில் இருந்த ஸ்டாக், மனைவியின்  ஐம்பது  சவரன் நகை அனைத்தையும் விற்று அந்த பாவியின் கடனை கட்டி ஒழித்தேன். வீடும் பைக்கும் மிஞ்சியது. எந்த பொங்கல் பண்டிகைக்கு முன்பு புதிய கடையை திறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ, அந்த பொங்கலின் போது பழைய கடையே கையை விட்டு போயிருந்தது.
வீட்டை விற்று புதிதாக தொழில் செய்யலாமா என்றால் அதற்கு தைரியம் வரவில்லை. இருக்கிற சொத்தையும் வித்துட்டு எங்களை நடுத்தெருவில் நிக்க வைக்கப் போகிறாயா என்ற மனைவியின் கண்ணீருக்கு பதில் சொல்ல முடியவில்லை. வயிற்றுப் பாட்டுக்கு என்ன வழி என்ற கேள்விக்கு என்னிடமும் பதில் இல்லை. அவளிடமும் பதில் இல்லை. ராஜஸ்தானுக்கே போகலாம் என்றாலும் தன்மானம் தடுக்கிறது. கடையை அப்படி செய்யப் போகிறேன், இப்படி செய்யப் போகிறேன் என்று பேசி விட்டு வந்து சில மாதங்கள்தான் ஆகிறது. இப்போது நொடித்துப் போய் திரும்பினால் என்ன நினைப்பார்கள்? வீட்டை விட்டு வெளியே வரவே பிடிக்கவில்லை. நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது. ஓரிரு மாதங்கள் கடந்திருந்தது.
ஒரு நாள் இரவு பத்து மணிக்கு வாசல் கதவு தட்டப்பட்டது.

திருவண்ணாமலையில் புதிதாக துணிக்கடை திறந்திருக்கிற எனது நண்பர் அவர். பாரம்பரியமாக நகை வியாபாரம் செய்து வருபவர்கள். தூரத்து சொந்தமும் கூட.

“ஏம்பா, ஒரு பிரச்சினைனா எங்கிட்ட சொல்ல மாட்டியா? யாராவது பெரியாளுங்க மூலமா பஞ்சாயத்து பண்ணியிருக்கலாம் இல்ல, அவசரப்பட்டு கடையை வித்துட்டியே”

நடந்தவற்றை  கண்ணீரோடு  நானும் என் மனைவியும் சொல்ல
"இத்தனை வருஷம் பிசினசில் இருந்தும் உனக்கு ஆட்களை எடை போடத் தெரியலயே. அந்த நம்பியைப் பார்த்தாலேயே உனக்கு டுபாக்கூர்னு தெரியலயா? அவனையெல்லாம் முழுசா நம்பியிருக்கே! மனித உரிமை, நுகர்வோர் அமைப்புக்கள் பெயரைச் சொல்லி இந்த மாதிரி ப்ராடுங்க நிறைய பேர் பெருகிட்டாங்க"
  "சரி, அடுத்து என்ன செய்யப் போற"
 கேட்டதோடு இல்லாமல் அவரே ஒரு வழியும் சொன்னார்.
 "என்னால நகைக்கடை. ஜவுளி இரண்டையும் கவனிக்க முடியலை. உனக்கு நல்ல அனுபவம் இருக்கு. பேசாம என்னோட டெக்ஸ்டைல்ஸ் கடைக்கு வொர்க்கிங் பார்ட்னரா வந்துடு. மாதம் ஒரு அமவுண்ட் சம்பளமா எடுத்துக்க, லாபத்தில் பத்து பர்ஸண்ட் கொடுத்திடறேன்"
 பதிலேதும் பேசாமல் மௌனமாக இருந்தேன். என் மனைவியைப் பார்த்தேன்ஒப்புக் கொள்ளுங்கள் என்று கண்ணாலேயே ஜாடை கொடுத்தாள்.
அவரது கரத்தோடு என் கரத்தை கோர்த்துக் கொண்டேன். இப்போது மீண்டும் கண்களில் நீர் வடிந்தது. நட்பிற்கு இன்னும் அர்த்தமிருக்கிறது என்பதை உணர்ந்ததால் பெருகிய கண்ணீர்
 ஒரு நல்ல நாளாக பார்த்து பொறுப்பேற்றுக் கொண்டேன். குழந்தைகள் படிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காக தினசரி திருவண்ணாமலை போகத் தொடங்கினேன். வாரத்தில் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்வேன். தெரிந்தவர்கள் யாரும் பார்த்து துக்கம் விசாரிக்கக் கூடாது என்பதற்காக ட்ரெயினில் மேலே ஏறி படுத்துக் கொள்வேன்
தடால் என்று வண்டி நிற்க எனது சிந்தனையோட்டமும் கலைந்து போனதுகண்ணமங்கலம் ஸ்டேஷனில் வண்டி நின்றிருந்தது. எதிரில் வரும் இன்னொரு ட்ரெயின் கடக்கும் வரை இங்கேதான் நிற்கும். இயற்கையின் உபாதை உறுத்த கீழே இறங்கி டாய்லெட் சென்று திரும்பினேன்.
"சார் எப்படி இருக்கீங்க. என்னாச்சு கடைய யாருக்காவது கொடுத்தீட்டீங்களா?"
முகத்தில் அறைந்தது போல ஒரு குரல். எது நடக்கக்கூடாது என்று ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்தேனோ, அது நடந்து விட்டது. வாழ்வில் நான் வெறுக்கிற கேள்வி மீண்டும் கேட்கப்பட்டு விட்டது
அவர் ஒரு வாடிக்கையாளர்
 வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு 
 "சில எதிர்பாராத பிரச்சினைகள் வந்தது. அதனால கடைய கைமாத்தி விட வேண்டிய கட்டாயம்" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டேன்.
 "உங்க கடையில் இருந்த வெரைட்டி வேற எங்கயும் இருக்கிறதில்லை. அதே மாதிரி நீங்க எடுத்துக் கொடுக்கிற மேட்சும் கச்சிதமாக இருக்கும். நியாயமான விலை" என்று அவர் புகழ்ந்து கொண்டே போக நானோ ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன்.
 அவரும் வெளியே பார்த்தார். ஸ்டேஷனுக்கு வெளியே வரையப் பட்டிருந்த ஒரு சுவர் விளம்பரத்தையும்  பல வண்ணங்களில் ப்ரிண்ட் செய்யப் பட்டிருந்த ஒரு போஸ்டரையும் காண்பித்தார்.
 அந்த சுவர் விளம்பரம் நாடாளுமன்றத் தேர்தலுக்கானது இன்னும் அழிக்கப் படாமல் இருந்தது. அதிலே ஒருவர் கைகளை கூப்பிக் கொண்டு சிரித்துக் கொண்டிரூந்தார். போஸ்டரிலோ ஒரு சாமியாருடைய பிறந்தநாள் விழாவிற்கு வரச்சொல்லி கூப்பிட்டிருந்தார்கள்.
"கள்ளச்சாராயம் காய்ச்சிக்கிட்டு இருந்தவன் காலேஜ் ஆரம்பிச்சான். அங்கயும் அடாவடி செஞ்சவன், ஹாஸ்டல் பொண்ணுக்கிட்ட தப்பா நடந்து போலீஸ் துரத்தினபோது ஓடி ஓளிஞ்சவன். பணத்தை கொடுத்து எல்லாத்தையும் சரிக்கட்டிட்டுதான் வெளியே வந்தான். இவனை எம்.பியக்காக்குங்கனு ஒரு கட்சி சீட்டு கொடுக்குது. இவனுக்கும் வெட்கமில்லை, இவன் கட்சிக்கும் வெட்கமில்லை"
 அவர் பொறிந்து தள்ளினார்.
 "அந்த சாமியார் மட்டும் லேசுப்பட்டவனா? எவ்வளவு தூரம் பேப்பர்லயும் டி.விலயும் அசிங்கப்பட்டான்"
 இது இன்னொரு பயணி.
 அந்த அரசியல்வாதி பற்றியும் சாமியார் பற்றியும் காரசாரமான விவாதம் ஓடிக்கொண்டிருக்கையில் என் மனதில் வேறு ஓன்று ஓடத் துவங்கியது.
 "கொள்ளையடித்தவனும் மக்கள் பணத்தை திருடியவர்களும் ஊழல பேர்வழிகளும்  பெண்களிடம் தவறாக நடந்து கொண்டவர்களும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் வலம் வரும்போது நான் ஏன் ஒதுங்கி பதுங்கி வாழ வேண்டும், நான் ஏமாற்றப்பட்டவன். துரோகத்திற்கு உள்ளானவன். யாரையும் ஏமாற்றவில்லை. சதி வலையில் சிக்கி எல்லாவற்றையும் இழந்தவன். என்னை ஏமாற்றிய பைனான்ஷியரையும் அழகிய நம்பியையும் போன்ற ஆட்களுக்கெல்லாம்   இல்லாத   வெட்கம்   எனக்கெதற்கு".
 நான்   நிமிர்ந்து  உட்கார்ந்தேன்.

7 comments:

 1. வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 2. ராஜஸ்தான் சேட்டு ஒருத்தர் இவ்வளவு ஏமாருபவராக இருந்திருக்கிறார் எனபதை நம்பவே முடியவில்லை, அவர் மீண்டும் இழந்த செல்வங்களைப் பெற மனம் விரும்புகிறது.

  ReplyDelete
 3. நன்றி ஜெயகுமார் சார்

  ReplyDelete
 4. நிஜத்தில் பார்த்திருக்கிறேன் ஜெயதேவ்தாஸ் சார்

  ReplyDelete
  Replies
  1. அதாவது, அவங்க எல்லோரையும் சாமார்த்தியசாளிகலாகவே பார்த்து பார்த்து இப்படி எப்படி ஒருத்தர்ன்னு தோணுச்சு, நீங்க சொல்வதில் சந்தேகம் என்றில்லை!!

   Delete
 5. // "கொள்ளையடித்தவனும் மக்கள் பணத்தை திருடியவர்களும் ஊழல பேர்வழிகளும் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டவர்களும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் வலம் வரும்போது நான் ஏன் ஒதுங்கி பதுங்கி வாழ வேண்டும், நான் ஏமாற்றப்பட்டவன். துரோகத்திற்கு உள்ளானவன். யாரையும் ஏமாற்றவில்லை. சதி வலையில் சிக்கி எல்லாவற்றையும் இழந்தவன். என்னை ஏமாற்றிய பைனான்ஷியரையும் அழகிய நம்பியையும் போன்ற ஆட்களுக்கெல்லாம் இல்லாத வெட்கம் எனக்கெதற்கு".//

  சேட்டு ஏமாறுவான்னு நம்புறது இயலாதது. இந்த வரிகள் மிகவும் உண்மையானைவைகள். நன்றி.

  ReplyDelete
 6. நன்றி பக்கிரிசாமி சார். நான் பார்த்த ஒரு உண்மை சம்பவத்தை ஒரு வேளை இப்படி நடந்திருக்கலாமோ என்ற கற்பனையும் கலந்து எழுதியது. சேட்டுக்கள் ஏமாற மாட்டார்கள் என்பது நமது பொதுவான அனுமானம். 99 % உண்மையும் கூட. அவர்களையும் ஏமாற்றும் எத்தர்களும் இருக்கிறார்களே!.

  ReplyDelete