Wednesday, July 16, 2014

பூங்கொத்துக்களும் கல்லடிகளும்

இன்றோடு எல்.ஐ.சி பணியில் இணைந்து இருபத்தி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இதில் என்ன முக்கியத்துவம்  என்கிறீர்களா? இன்னும் பதினோரு வருட பணிக்காலம் பாக்கி இருந்தாலும் இப்போது ஓய்வு பெற்றாலும் முழு பென்ஷன் கிடைத்து விடும். அதுதான் முக்கியத்துவம். 

இருபத்தி எட்டு ஆண்டுகள் உருண்டதே தெரியாதவண்ணம் காலம் அவ்வளவு வேகமாக கடந்திருக்கிறது. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் எல்.ஐ.சி பணியில் சேரும் போது இந்த வேலையில் இருந்து கொண்டே ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும், அல்லது ஒரு அதிகாரியாக வேண்டும் என்ற கனவோடுதான் வந்தேன். ஆனால் அதிகாரி ஆவதோ கலெக்டரோ ஆவது வாழ்க்கையில்லை என்பதை சங்கத்தில் தீவிரமாக செயல்படத் தொடங்கியதும்தான் உணர்ந்து கொண்டேன். 

இந்த இருபத்தி எட்டு ஆண்டுகள் வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்களை நல்லதும் கெட்டதுமாக ஏராளமாக கற்றுக் கொடுத்துள்ளது. இன்னும் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது.

பொருளாதார நிலையில் முன்னேற்றம் என்பது எல்.ஐ.சி பணியால் கிடைத்தது. கல்லூரி நாட்களில் எனக்கென்று சொந்தமாக வாங்கிய ஆடைகளை அணிந்ததை விட அண்ணனின், அக்கா கணவரின் உடையை ஆல்டெர் செய்து அணிந்ததுதான் அதிகம்.  பணியில் சேர்ந்த பின்பு  சென்னைக்கு அலுவலகப் பணியாக செல்லும் போது கிடைக்கும் பயணப்படியை  மிச்சம் செய்து நெய்வேலி பேடே பஜாரில் பதினைந்து ரூபாய்க்குக்  கிடைக்கும் காட்டன் சட்டைகளை  அவ்வப்போது வாங்கி கல்லூரிக் கால ஏக்கத்தை தீர்த்துக் கொண்டிருக்கிறேன். குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது அந்த சட்டைகள் நன்றாக உழைக்கும். 

கல்லூரி படித்து முடித்த சில மாதங்களுக்குள்ளேயே பணிக்கு வந்து விட்டாலும் இடைப்பட்ட காலத்தில் ஏளனமாக பார்த்த உறவினர்களின் பார்வையை மாற்றியது என்பதும் இந்த எல்.ஐ.சி பணிதான். இன்று பொருளாதார ரீதியில் நிறைவான வாழ்க்கை என்பது எல்.ஐ.சி கொடுத்த வரம். இரட்டை வரம், ஆம் என் மனைவியும் எல்.ஐ.சி ஊழியரல்லவா! ஆனால் அவை நிர்வாகம் தானாக தந்தல்ல. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் போராடிப் பெற்றுத் தந்தது.

இந்த இருபத்தி எட்டு ஆண்டுகளில் இந்தியா முழுதும் காஷ்மீரையும் வட கிழக்கு மாநிலங்களையும் தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் சென்று வந்தாகி விட்ட்து. அகில் இந்திய மாநாடுகள், தென் மண்டல மாநாடுகள், அகில இந்திய செயற்குழு என்று அமைப்பு ரீதியான பயணங்கள் தவிர விடுமுறைப் பயணச் சலுகையாலும் இந்தியாவின் முக்கியமான இடங்களுக்கு செல்லும் வாய்ப்பும் கிடைத்தது.

விடுமுறைப் பயணச் சலுகையில் விமானத்தில் செல்கையில் தவறாமல் மனதில் ஒரு சம்பவம் நினைவிற்கு  வரும். மதுரையில் கல்லூரியில் படிக்கையில் இலங்கைப் பிரச்சினைக்காக அனைத்துக் கல்லூரிகளையும் கல்லூரி விடுதிகளையும் காலவரையின்றி மூடி விட்டார்கள். எனவே பேருந்துக்களில் பெரும் கூட்டம். மதுரையிலிருந்து விருத்தாச்சலம் வரை கால் கடுக்க நின்று கொண்டே வந்து விருத்தாச்சலத்தில் ஜன்னலோர இருக்கை கிடைத்ததும் உறக்கம் சுழட்டிக் கொண்டு வர நான் இறங்க வேண்டிய மந்தாரக்குப்பத்தை தவற விட்டு விட்டேன். நெய்வேலி மத்தியப் பேருந்து நிலையத்தில் இறங்கும் போது மணி 11.30. ஆட்டோவிற்குக் கொடுக்க பணமில்லாமல் இரண்டாவது காட்சி திரைப்படம் முடிந்ததும் ஓடும் டவுன் பஸ்ஸிற்காக 1.30 மணி வரை மீண்டும் கால்கள் கெஞ்ச கெஞ்ச நின்று கொண்டிருந்த நிலையை நான் மறப்பதே இல்லை.

சாலையில் மட்டுமல்ல அரசியலிலும் இடது பக்கம் செல்வது நல்லது என்ற உண்மையை எல்.ஐ.சி பணியிலும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திலும் இணையாமல் இருந்திருந்தால் கற்றுக் கொண்டிருப்பேனா என்பது சந்தேகமே.   சமூகம், வரலாறு, பொருளாதாரம் என்று இன்னும் கற்றுக் கொண்டே இருப்பதும் வேறு எங்காவது இருந்திருந்தால் எனக்கு சாத்தியமாகி இருக்குமா என்பதும் சந்தேகமே. 

தோழர்கள் சந்திர சேகர போஸ், சரோஜ் சவுத்ரி, என்.எம்.சுந்தரம், ஆர்.கோவிந்தராஜன், அமானுல்லா கான், கே.வேணுகோபால் என்ற மகத்தான தலைவர்கள் பேசியதைக் கேட்பதற்கும் எழுதியதைப் படிப்பதற்குமான வாய்ப்பு என்பதும் எல்.ஐ.சி பணியால் மட்டுமே கிடைத்த அரிய வாய்ப்பு. தோழர் சுனில் மைத்ரா அவர்களின் உரையைக் கேட்கும் வாய்ப்பை மட்டும் இழந்தவன் நான்.

தோழர் சரோஜ் மற்றும் தோழர் சுனில் ஆகியோர் எழுதிய,  இன்றைக்கும் பொருந்துகிற, தேவைப்படுகிற பல கட்டுரைகளை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்ற கனவு ஒன்று உள்ளது. பார்ப்போம் அது இந்த ஆண்டிலாவது நிறைவேறுகிறதா என்று.

ஏராளமான பிரச்சினைகளை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சில சங்கப்  பிரச்சினைகளில் அமைப்பின் நலனா அல்லது நட்பா என வருகிற போது அமைப்புதான் முக்கியம் என்று இருந்ததால் சில நட்புகள் பறி போயிருக்கிறது. மாறான காட்சிகள் சிலவற்றையும் பார்த்து நொந்திருக்கிறேன்.எந்த பிரச்சினையானாலும் அதை நேர்மையாக அணுக வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தது மார்க்சியமே.


இருபத்தி எட்டு ஆண்டுகளில் கிடைத்த மிகப்பெரிய அனுபவம் பல விதமான மனிதர்களோடு பழகுவதற்குக் கிடைத்த வாய்ப்புதான். தொழிற்சங்கப் பொறுப்பில் உள்ளதால் கிடைத்த வாய்ப்பு. எல்.ஐ.சி தாண்டியும் ஏராளமானவர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசத்தோடு பழகி உற்சாகப் படுத்துபவர்கள், தனி நபரை விட அமைப்பே பிரதானம் என்று உறுதியாக இருப்பவர்கள், ஏதேனும் காரியம் ஆக வேண்டும் என்றால் அந்த சந்தர்ப்பத்தில் ஒரு மாதிரியாகவும் மற்ற சமயங்களில் வேறு விதமாகவும் பழகுபவர்கள், பொறுப்பில் இருப்பதால் இவனை சகித்துக் கொள்ள வேண்டுமே என்று பழகுபவர்கள், நக்கீரன் வாரிசுகளாக குறை கூற மட்டுமே இருப்பவர்கள், கடினமாக உழைக்கிறீர்களே என்று ஆறுதல் சொல்பவர்கள், இதைச் செய்வதுதானே இவன் வேலை, செய்யட்டுமே என்று அலட்சியப்படுத்துபவர்கள் என்று பலரோடு பழகும் வாய்ப்பையும் இந்த இருபத்தி எட்டு ஆண்டுகள் அளித்துள்ளது.

வலைப்பக்கத்தில் வருவது போல பூங்கொத்துக்களும் வன்மமான கல்லடிகளும் இணைந்தே வந்திருக்கிறது. அதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம் என்பதை இத்தனை வருட  அனுபவம் கற்றுக் கொடுத்திருக்கிறது. கல்லடிகளை விட பூங்கொத்துக்கள் அதிகம் என்பது நிறைவளிக்கிறது.

நமக்கு வரும் சிக்கல்தான் நமது உண்மையான நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காட்டும் என்பதை உணர்ந்த அனுபவமும் உள்ளது. அடியாட்களால் தாக்கப்பட்ட போதும் சரி, விபத்தில் சிக்கி கால்கள் பாதிக்கப்பட்ட போதும் சரி உண்மையான நேசத்தை உணர முடிந்தது. உண்மையான அக்கறையுள்ள தோழர்களின் ஆதரவான வார்த்தைகளே விரைவில் மீண்டு வர உதவியது.

அதே நேரம் சில மோசமான நிகழ்வுகளின் போது உள்ளம் ரணப்பட்ட நேரத்தில் நாங்கள் இருக்கிறோம் என்று கரம் கொடுத்து நொந்து போன இதயத்திற்கு ஆக்ஸிஜன் பாய்ச்சியவர்களும் உண்டு, எவன் வீட்டிலோ நிகழ்ந்த எழவு என்று தனி நபர் பிரச்சினையாக நினைத்து புறக்கணித்து நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சியவர்களும் உண்டு.

தான், தன் சுகம் என்று உலகமய நுகர்வுக் கலாச்சாரம் உருவாக்கியுள்ள மோசமான பின் நவீனத்துவ கருத்தோட்டத்தையும் மீறி சக மனிதர்கள் மீதும் சமூகத்தின் மீதும் கவலைப்படுபவர்களாக பெரும்பான்மையானவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதுதான் வாழ்க்கையின் மீதும் எதிர்காலத்தின் மீதும் நம்பிக்கையளிக்கிறது.

இருபத்தி எட்டு ஆண்டுகள் எனக்கு அளித்த பெரும் கொடை பேசுவதும் எழுதுவதுமே.

125 ஊழியர்கள் பணியில் சேர்ந்த அந்த முதல் நாள் பயிற்சி வகுப்பில் I am S.Raman from Neyveli, BBA Graduate from Madurai Kamaraj University என்று சொல்வதற்குள் கைகால்கள் நடுங்கி, வியர்த்து சட்டை தொப்பலாக நனைந்து போன அந்த நாளிலிருந்தும் அரை பக்க கடிதத்தை ஐந்து முறை எழுதி கிழித்துப் போட்ட அந்த முதல் நாளிலிருந்தும் எவ்வளவோ முன்னேறியிருக்கிறேன்.

எந்த சவாலையும் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கையை நெஞ்சுக்குள் விதைத்தது வேலை தந்த எல்.ஐ.சியும்  அந்த எல்.ஐ.சி பணியை பாதுகாத்து வருகிற எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமுமே.  

இன்னும் வேகமாய் என் பயணம் தொடரும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துக்களையும் பூங்கொத்துக்களையும் பகிர்ந்து கொண்டு விடை பெறுகிறேன்.

 http://www.ftdimg.com/pics/products/RP84_330x370.jpg


 



5 comments:

  1. long live trade union movement.hope the work force in banking and insurance sector get something out of this
    pro-rich and anti labour BJP GOVERNMENT. BEST WISHES FOR YOUR 28TH ANNIVERSARY OF
    INSURANCE SERVICE

    ReplyDelete
  2. சாலைப் பயணம் மட்டுமல்ல
    தங்களின் வாழ்க்கைப் பயணமும்
    இடது பக்கத்திலேயே
    இருபத்தி எட்டு ஆண்டுகள்
    வாழ்த்துக்கள் நண்பரே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நன்றி ஜெயக்குமார் சார்

    ReplyDelete
  4. தாங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள் தோழரே

    ReplyDelete