Tuesday, July 1, 2014

பெருமையோடு சொல்கிறேன் – இதுதான் எங்கள் இயக்கம்

இன்றைக்கு எங்களுக்கு அறுபத்தி நான்காவது பிறந்த நாள். எங்கள் வாழ்வோடும் உயிரோடும் ஒன்றாக கலந்து விட்ட எங்களது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பிறந்த நாள். ஆம் 1951 ம் ஆண்டு மும்பையில் ஒரு சிறிய அரங்கில் உதயமாகி ஒரு மாபெரும் ஆல மரமாக விஸ்வரூபமெடுத்துள்ள எங்களது சங்கத்தின் 64 வது அமைப்பு தினம்.

1947 ல் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தாலும் அடிமைகளாய் வாழ்ந்தவர்கள் பலர் உண்டு. அவர்கள் இந்தியாவின் உழைப்பாளி மக்கள். அப்படி அடிமைகளாய் இருந்தவர்களில் ஒரு பகுதியினர் இன்சூரன்ஸ் ஊழியர்கள். இந்தியா முழுதும் சின்னதும் பெரியதுமாய் 245 இன்சூரன்ஸ் கம்பெனிகள் இருந்தன. இந்திய முதலாளிகளாலும் வெளி நாட்டு முதலாளிகளாலும் நடத்தப்பட்டு வந்தவை அவை.

அவர்களுக்குள் போட்டி இருந்தாலும் இரண்டு அம்சங்களில் ஒற்றுமை இருந்தது. தங்கள் கம்பெனிகளில் முதலீடு செய்கிற அப்பாவி பாலிசிதாரர்களை மோசடி செய்வது, தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களை கொடுமை செய்வது என்பதில் மட்டும் எல்லா கம்பெனிகளிலும் ஒரே நிலைமைதான்.

எப்படி பண்ணையார்களிடம் பணி புரிந்த விவசாயத் தொழிலாளர்கள் சூரிய உதயத்திற்கு முன்பு வயலில் இறங்கி சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் வீட்டிற்குச் செல்ல முடியாதோ, அது போன்ற நிலைமைதான் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டிற்கு வந்து போகிற மாமா யார் என்று தந்தையைப் பார்த்தே குழந்தைகள் கேட்பார்கள் என்று சொல்வார்கள். எப்போது வேலையை விட்டு நீக்குவார்கள் என்பதே தெரியாத அச்ச உணர்வோடு வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அப்படிப்பட்ட நிலையில் சில கம்பெனிகளில் சங்கம் தோன்றியது. சங்கத்தை உருவாக்கியவர்கள் பழி வாங்கப்பட்டார்கள், பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். இவற்றையெல்லாம் மீறித்தான் அகில இந்திய அளவில் சங்கம் உருவானது. மும்பையில் ஒரு சிறிய அறையில் தோன்றிய சங்கம் இன்று எல்.ஐ.சி யில் பணியாற்றும் எண்பத்தி ஐந்து சதவிகிதம் ஊழியர்களை உறுப்பினர்களாகக் கொண்டு பெரும்பான்மை சங்கமாக திகழ்கிறது.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் முன்வைத்த முதல் முழக்கமே இன்சூரன்ஸ் துறையை தேசியமயமாக்க வேண்டும் என்பதுதான், அக்கோரிக்கைக்காக நடந்த போராட்டங்களின் வெற்றியாக 1956 ல் ஆயுள் இன்சூரன்ஸ் துறை தேசியமயமானது. 01.09.1956 அன்று எல்.ஐ.சி ஆப் இந்தியா உருவானது.

பொதுவாக ஒரு நிறுவனம் உருவானதும் அங்கே தொழிற்சங்கம் அமையும். ஆனால் தொழிற்சங்கம் உருவாகி அங்கே ஒரு நிறுவனத்தை உருவாக்கிய பெருமை எங்களுக்கே உண்டு, அதனால்தான் எல்.ஐ.சி நிறுவனத்திற்கு வந்த ஆபத்துக்கள் பலவற்றையும் நாங்கள் தகர்த்துள்ளோம்.

எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிக்க இந்திரா காந்தி முயற்சி செய்தார். நீண்ட நெடிய போராட்டம் அம்முயற்சியை முறியடித்தது. உலக மயம் அறிமுகமான பின்பு 1994 ல் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுனர் ஆர்.என்.மல்ஹோத்ரா தலைமையில் ஒரு குழு அமைத்து எல்.ஐ.சி யை தனியார்மயமாக்க வேண்டும் என்று பரிந்துரை அளிக்க வைத்து அமலாக்க நரசிம்மராவ், மன்மோகன்சிங் கூட்டணி முயன்றது. பிறகு வந்த நிதியமைச்சர்கள் ப.சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா ஆகியோரும் முயன்றார்கள்.

மக்கள் மத்தியில் நடத்திய பிரச்சார இயக்கங்கள், இரண்டு கையெழுத்து இயக்கங்கள், பல்வேறு வேலை நிறுத்தங்கள் ஆகியவை மூலமாக இந்த முயற்சி தகர்க்கப்பட்டு எல்.ஐ.சி யின் பொதுத்துறைத் தன்மை எக்காலத்திலும் நீர்த்துப் போக அனுமதிக்கப் படக்கூடாது என்று நாடாளுமன்றம் முடிவு செய்து விட்டது.

லஞ்ச லாவண்யமோ, ஊழலோ இல்லாத நிறுவனம் என்ற பெயர் எல்.ஐ.சி க்கு இருக்கிறது என்பதற்கும் பணிக்கலாச்சாரம் மேம்பட்டு இருப்பதற்கும் எங்கள் சங்கம் காரணம் என்பதை பெருமிதத்தோடு சொல்லிக் கொள்ள முடியும். காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை நிறுவனத்திற்கு நேர்மையான உழைப்பை அளிக்க வேண்டும் என்று எங்களின் மகத்தான தலைவர் தோழர் சரோஜ் சவுத்ரி அவர்களும் உங்கள் மேஜையில் பாலிசிதாரர்களுக்கான சேவையை நீங்கள் சிறப்பாக செய்வதில்தான் நமது போராட்டமே துவங்குகிறது, அப்போதுதான் அவர்களை நம்முடைய நேச சக்திகளாக மாற்றிட முடியும் என்று இன்னொரு மாபெரும் தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களும் எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ள பாடம். (எங்கள் தலைவர்கள் பற்றியே நாளை  தனியாக ஒரு பதிவெழுதுகிறேன்)

இன்சூரன்ஸ் அலுவலகங்களின் நான்கு சுவர்களுக்குள் சுருங்கிப் போனதல்ல எங்கள் அமைப்பு. இத்தேசத்து மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய மூலதனத்தை அனுமதிப்பது  போன்ற பிரச்சினைகளுக்காக சுயேட்சையாகவும் மற்ற அமைப்புக்களோடும் இணைந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றோம்.

இந்தியா சுதந்திரம் பெற்று அறுபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் மிகப் பெரிய சமூக அவலமாக தீண்டாமைக் கொடுமை நீடிக்கிறது. தீண்டாமைக் கொடுமைகளை வேரறுக்க உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஒரு அங்கமாக எங்கள் சங்கம் உள்ளது. தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு இயக்கங்களில் தமிழகம் முழுவதும்  உள்ள எங்கள் உறுப்பினர்கள் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேர்வதற்காக நடக்கும் நுழைவுத் தேர்வுகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் வெற்றி பெற, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியோடு இணைந்து டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம், தமிழகத்தில் இருபது மையங்களில் எங்கள் சங்கம் நடத்தி வருகிறது. வேலூர் கோட்டப் பகுதியில் வேலூரிலும் கடலூரிலும் டாக்டர் அம்பேத்கர் பயிற்சி மையத்தை எங்களது வேலூர் கோட்டச்சங்கம் பொறுப்பேற்று பல மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றது.

இந்தியாவின் எந்த ஒரு  பகுதியிலும்  எதிர்பாராத இயற்கை சீற்றம் நிகழ்கிற போது  உடனடியாக உதவிக்கரம் நீட்டும் அமைப்பாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் உள்ளது. நேரடியாக எங்கள் சங்க உறுப்பினர்களே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று உதவிகள் வழங்குவது என்பதுதான் எங்கள் மரபு.

அனைத்து பணிகளையும் பட்டியல் போடுவது இயலாத ஒன்று. அதனால் சிலவற்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறோம். நில நடுக்கத்தால் பாதிக்கப் பட்ட குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தில் எங்கள் சங்கத்து உறுப்பினர்கள் அளித்த நிதி கொண்டு ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மருத்துவமனை ஏழை மக்களுக்கு சேவை செய்து கொண்டு இருக்கிறது.

தென் தமிழகக் கடற்கரை ஆழிப் பேரலை சுனாமியால் தாக்குண்ட போது களத்திற்கு உடனடியாய் விரைந்த அமைப்பு எங்களுடையது. உடனடித் தேவையான உணவு, உடைகள் தொடங்கி குடும்பத்திற்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள், அரிசி என்று  தமிழகம் முழுதும் பல லட்சம் ரூபாய் மதிப்பில் நிவாரணப் பணி வழங்கப்பட்டது. சடலங்களை அகற்றி நல்லடக்கம் செய்யும் பணியிலும் கூட எங்கள் உறுப்பினர்கள் ஈடுபட்டனர். வேலூர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் சுமார் பத்து லட்சம் ரூபாய்க்கு  நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.  பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மூன்று மீனவர் கிராமங்களில் இன்னிசை நிகழ்ச்சியும் நடத்தினோம்.

இது மட்டுமல்லாமல் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிரந்தர நிவாரணப் பணியாக, நாடு முழுதுமுள்ள எங்கள் உறுப்பினர்கள் அளித்த நிதி கொண்டு திருவனந்தபுரம் அருகில் அட்டிங்கல் என்ற இடத்தில் பள்ளிக் கட்டிடம், நாகை மாவட்டத்தில் புதுப் பட்டிணம் என்ற கிராமத்திலும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் கிள்ளையிலும் சமுதாயக் கூடம் கட்டித்தரப் பட்டுள்ளது. இந்தப் பணிகள் அறுபத்தி ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் செய்யப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ‘தானே’ புயல் கடலூர் மற்றும் புதுவையை தாக்கிய போதும் தமிழகம் முழுதுமுள்ள எங்கள் உறுப்பினர்கள் அளித்த நிதி கொண்டு ரூபாய் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

எங்களுடைய வேலூர் கோட்ட மகளிர் துணைக்குழு சர்வதேச மகளிர் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் சமூக நல உதவிகள் செய்வதன் மூலம் சிறப்பாக அனுசரிக்கிறது. முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம், மாற்றுத் திறனாளிகள் இல்லம் என ஆதரவு தேவைப்படும் அமைப்புக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் அளவில் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்த தேசத்தின் மக்கள் சந்திக்கிற பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வு நம்முடைய சமுதாய அமைப்பை மாற்றுவதில்தான் அடங்கி இருக்கிறது என்பதில் உறுதியாக நம்புகிற அமைப்பு ஏ.ஐ.ஐ.இ.ஏ. அதற்கான புரிதலை ஊழியர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் உருவாக்குவதோடு செயல்ப்பட்டு வருகிற அமைப்பு.

என் வாழ்நாளில் கிடைத்த அரிய வாய்ப்பு, மிகப் பெரிய பெருமை என்பது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் ஊழியன் என்பதே. அந்தப் பெருமிதத்தோடு உரக்கச் சொல்கிறேன்

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வாழ்க

பின் குறிப்பு : மேலே உள்ள வரைபடம் முகநூலில் பதிவு செய்வதற்காக தயார் செய்தது. கறுப்பு வெள்ளை 1951 ல் சங்கம் அமைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட அரிய படம். வண்ணப்படம் இவ்வருட துவக்கத்தில் நாக்பூரில் நடந்த அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்டது. நடுவில் இருப்பவர் இம்மாநாட்டில் அகில இந்தியப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் வி.ரமேஷ். அவரது வடது பக்கம் இருப்பவர் இதுநாள் வரை பொதுச்செயலாளராக இருந்து இப்போது துணைத்தலைவராகியுள்ள தோழர் கே,வேணுகோபால். இடது பக்கம் இருப்பவர் எங்கள் அகில இந்தியத் தலைவர் தோழர் அமானுல்லாகான்.
No comments:

Post a Comment