
ஆற்காடு நீதிமன்ற வளாகத்தில் ஒரு உறவினரது வழக்குக்காக சென்றிருந்தேன். இன்றைய பொழுது முழுதும் அங்கேயே கழிந்தது. காத்திருக்கும் நேரத்தில் சுற்றும் முற்றும் கவனிப்பதுதானே நமக்கு வழக்கம்!
அப்படி கவனித்ததில் பிச்சையெடுக்கும் பாட்டி ஒருவர் அந்த வளாகத்தில் சுற்றி வந்தார். என் உறவினர் அவருக்கு முதலில் ஒரு பத்து ரூபாய் கொடுத்தார். அந்தப் பாட்டி இன்னிக்குத்தான் சாப்பிடுவேன் என்று சொன்னதில் மனம் நெகிழ்ந்து இன்னும் ஒரு பத்து ரூபாய் அளித்தார்.
அதன் பின்பு வேறு சிலரிடம் கேட்டதில் ஐந்து ரூபாய், இரண்டு ரூபாயாக அவருக்கு மொத்தம் ஐம்பது ரூபாய் வசூலானது. அதன் பின்பு அவர் அந்த வளாகத்தை விட்டு சென்று விட்டார்.
ரங்கராஜன் குழு பரிந்துரை செய்து மோடி அரசு ஏற்றுக் கொண்ட புதிய அளவுகோல் படி நகர்ப்புறமான ஆற்காட்டில் பிச்சையெடுத்து வாழ்வு நடத்தும் அந்த பாட்டியின் வருமானம் நாற்பத்தி ஏழு ரூபாயைக் கடந்து விட்டதால் அவர் வறுமைக் கோட்டைத் தாண்டி சம்பாதிக்கிறவர். பணக்காரர் பட்டியலில் இணைகிறார்.
நாளை ஒருவேளை இவரை வருமான வரி வரம்பிற்குள் அருண் ஜெய்ட்லி கொண்டு வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பி.கு : படத்தில் இருப்பது அந்த பாட்டி அல்ல, கூகுள் இமேஜில் எடுத்தது
No comments:
Post a Comment