Friday, July 25, 2014

வேலையில்லா பட்டதாரி - பரவாயில்லை, பார்க்கலாம்

 http://www.selliyal.com/wp-content/uploads/2014/07/vip_17714_m1.jpg

வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தை வெளியான இரண்டாம் நாளே மகனின் வற்புறுத்தலால் பார்த்தாலும் அப்படம் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள என்னவோ இன்றுதான் நேரம் கிடைத்தது.

சில வருடங்களுக்கு முன்பாக, தனுஷ், சிம்பு போன்றவர்கள் நடிக்க வந்த காலத்தில்  சிவாஜி எம்.ஜி.ஆர் பற்றிய விவாதம் நடக்கும் போது தனுஷ், சிம்பு இவர்கள் எல்லாருமே எம்.ஜி.ஆரை விட நன்றாக நடிக்கிறார்கள் என்று சொல்லுவேன். 

இப்போது பார்த்தால் தனுஷ் உண்மையிலேயே மிகச் சிறந்த நடிகர் என்ற நிலைக்கு வந்து விட்டார். இந்தப் படத்திலும் அதை நிரூபித்து இருக்கிறார். அமுல்பேபி தோற்றத்தில் இருக்கும் வில்லன் நடிகரிடம் அவர் பேசும் அந்த நீளமான வசனத்தின் போதும், குடித்து விட்டு வந்து கதவைத் திறக்கச் சொல்லி அம்மாவிற்கு ஐஸ் வைக்கும் இடத்திலும் தியேட்டரில் விசில் பறக்கிறது.

கதை என்று பார்த்தால் புதிதாக எதுவும் இல்லை. ஆனால் காட்சிகளின் வேகத்தால் படம் போவதே தெரியவில்லை. அதே போல் இயல்பாகவும் பல காட்சிகள் இருக்கிறது.  சமுத்திரக்கனி, சரண்யா இருவரும் நச்சென்று அப்பா, அம்மா பாத்திரங்களில் பொருந்துகிறார்கள். அமலா பாலுடன் தனுஷிற்கு வரும் காதல் கூட இயற்கையாக இருக்கிறது. 

ஓசியில் ஓட்டிய மோஃபா வை இத்திரைப்படம் நினைவு படுத்துகிறது. நல்லவன் வாழ்வான் என்ற நீதியைச் சொல்லும் இத்திரைப்படத்தில் மிகவும்  பொருத்தமாக மவுலிவாக்கம் கட்டிட விபத்து பற்றிய வசனத்தையும் இணைத்து விட்டார்கள்.

ஆபாசமான காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய விதத்தில்  அமைந்திருப்பது படத்திற்கு பலம். இளையராஜாவின் இனிமையான பாடல்களை சுவாசித்தே வாழ்வதால் "வாட்ட கருவாட்" போன்ற  பாடல்களை மட்டும் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் - பார்க்கலாம் தனுஷிற்காக. 

No comments:

Post a Comment