Sunday, October 28, 2018

நேரில் கேட்டது போல . . .

எங்களுடைய சென்னைக் கோட்டம் I ன் பொது மாநாட்டில் எங்கள் அகில இந்தியத் தலைவர் தோழர் அமானுல்லாகான் ஆற்றிய ஒரு அற்புதமான உரையை எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் மிக அழகாக தமிழில் தொகுத்து வழங்கியுள்ளார்.

இன்சூரன்ஸ் ஊழியர்களைத் தாண்டி இத்தேசத்தின் உழைக்கும் மக்களுக்கு செல்ல வேண்டிய முக்கியமான பல செய்திகள் இருப்பதால் இந்த சிறப்பான உரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நேரில் கேட்டது போன்ற உணர்வை தோழர் சுவாமிநாதனின் தொகுப்பு அளிக்கிறது.



மிகவும் நெருக்கடியான காலத்தை சந்தித்து வருகிறோம். 

ஊதிய உயர்வு, இன்னொரு பென்சன் வாய்ப்பு, நிறுவனத்தின் பாதுகாப்பு ஆகியன நமது கோரிக்கைகளாக உள்ளன. 

ஆனால் இன்று நிறைய கேள்விகள் நம் முன்னே எழுந்துள்ளன. இந்திய ஜனநாயகம் நிலைக்குமா? மதச் சார்பின்மை நிலைக்குமா? ஆகிய கேள்விகள் தொழிற்சங்கத்தின் எதிர்காலம், நமது கோரிக்கைகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துபவை ஆகும். 

இந்தியாவில் சிறந்த அரசியல் சாசனம் இருக்கிறது. ஆனால் அது போதுமா? 1919 ல் ஜெர்மனியில் சிறந்த அரசியல் சாசனம் இருந்தது. அது நிலைத்ததா? ஏன்? மக்களின் விழிப்பு, உறுதி, போராட்டமே அரசியல் சாசனத்தைக் காப்பாற்ற முடியும். 

2014 ல் காங்கிரஸ் தலைமையிலான அரசு மீது மக்களுக்கு அதிருப்தி, கோபம் இருந்தது. நாம் கூட நாக்பூர் மாநாட்டில் விவாதித்தோம். தனி நபர்கள் தேவதூதர்களாக ஆகமுடியாது. கொள்கைகளே முக்கியம் என்றோம். இருந்தாலும் தேர்தல் முடிவுகளில் தனிநபர் சாகசம் மீதான நம்பிக்கையே வெளிப்பட்டது. அதன் விளைவு இன்று நிறைய சவால்களை எதிர்கொள்கிறோம். பொதுத்துறை இன்று தாக்கப்படுகிறது. பன்முக கலாச்சாரம் தாக்கப்படுகிறது. கல்விக்குள் அறிவியலுக்கு புறம்பான திணிப்புகள் அரங்கேறுகின்றன. 

இந்திய அரசியல் கட்டமைப்பின் முக்கியமான நிறுவனங்கள் திடடமிட்டு சிதைக்கப்படுகின்றன.

சில நாட்களாக சி.பி.ஐ யில் நடைபெறுகின்ற மோதலை பார்க்கிறோம். அது இரு நபர்கள் பிரச்சினை அல்ல. சட்டத்தின் ஆட்சியே கேள்விக்குறியாகி உள்ளது. சபரிமலையில் நடந்ததை பார்த்தோம். கும்பல் வன்முறை அரசியல் சாசனத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. 

எமெர்ஜென்சியில் அரசியல் எதிரிகளின் இல்லங்களின் கதவுகள் நள்ளிரவில் தட்டப்படடன. இப்போதோ சி.பி.ஐ தலைவரின் இல்லக்கதவே தட்டப்படுகின்றன. அலோக் வர்மா என்ன கூறுகிறார்? " அரசு என் மீது மகிழ்ச்சியாக இல்லை. சில விசாரணைகள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக உள்ளது". 

சி பி ஐ மட்டுமல்ல. 

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆச்சாரியா கூறுகிறார். " ரிசர்வ் வங்கி தனது நிர்வாக சுதந்திரத்தை இழந்து வருகிறது".பண மதிப்பு நீக்க பிரச்சினையின் போதே இந்த கேள்வி எழுந்து விட்டது. இதே கேள்வியையே நாம் எல்.ஐ.சி நிர்வாகத்திடமும் எழுப்பி வருகிறோம். முதலீட்டு முடிவுகளில் அரசு தலையிடலாமா? இதுவெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வுகள். 

தேர்தல் ஆணையம் இன்னொரு உதாரணம். சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்படடவராக இருக்க வேண்டும் என்பார்கள். நம்மை பொறுத்தவரையில் சீசரும் சந்தேகத்திற்கு அப்பாற்படடவராக இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் காலை 12 மணிக்கு 5 மாநில தேர்தலை அறிவிக்கவேண்டிய கூட்டத்தை மதியம் 2 மணிக்கு தள்ளிப் போடுகிறது. ஏன்? ராஜஸ்தானில் மதியம் 12 மணிக்கு பிரதமர் பேசிய பொதுக் கூட்டம்தான். அவர் தேர்தல் விதிமுறைகள் குறுக்கிடாமல் அறிவிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் வழி செய்து தந்தது. 

உச்ச நீதி மன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள் வெளிப்படையாக 
" உச்ச நீதி மன்றத்தின் மாண்பை காப்பாற்று" என்று பொது வெளிக்கு வந்தார்கள். 

ஆகவே ஜனநாயகத்தை காப்பாற்று என்ற முழக்கம் தேவைப்படுகிறது. அதோடு இணைந்ததுதான் நமது உரிமைகள், போராட்டங்கள், பிரச்சினைகள், கோரிக்கைகள். 

மக்களின் பிரச்சினைகள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன. 15 லட்சம் கருப்பு பணம் வங்கி கணக்கில் வந்ததா? 10 கோடி வேலை வாய்ப்பு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா? இதுவெல்லாம் விவாதிக்கப்படுகிறதா? மௌல்விகள், பாதிரியார்கள், துறவிகள் அறிக்கைகள் விடுவதும், சர்ச்சைகள் ஆவதுமான பிரச்சினைகள் 24*7 தொலைகாட்சிகளில் விவாதிக்கப்படுகின்றன. அமித் ஷா கர்நாடகாவில் இந்து துறவிகள் கூட்டத்தை நடத்தி தேர்தலுக்கு வேண்டுகோள் விடுக்க வைக்கிறார். ஊடகங்கள் அது பற்றி விமர்சிக்க மறுக்கின்றன.

 இந்தியாவின் டாப் 10 சதவீதம் மட்டுமே வளர்ச்சியின் பயன்களை அனுபவிக்கிறார்கள். அமெரிக்க, பிரிட்டன் கனவுகளோடு இருக்கிறார்கள். அவர்களே பொருளாதார பாதையை தீர்மானிக்கிறார்கள். செல்வம் பெருகியுள்ளது. அதை அவர்களே அபகரித்துள்ளார்கள். அதில் ஒரு பகுதி கிடைத்திருந்தால் கூட வறுமையை ஒழித்திருக்க முடியும். 

மோடிக்கு "சோல்" விருது தரப்பட்டுள்ளது. குஜராத் ரத்தக்கறை அவரின் கரங்களில் உள்ளது. இன்றும் அவர் ஆட்சியில் தலித்துகள் தாக்கப்படுவதை தடுக்க அவர் செய்தது என்ன? 

க்ரெடிட் சுசி அறிக்கை கூறுவது என்ன? 135 கோடி மக்களின் 1.35 கோடி பேர் 52 சதவீத செல்வத்தை வைத்துள்ளனர். டாப் 10 சதவிதமானவர்கள் 76 சதவீத செல்வத்தை வைத்துள்ளனர். இந்தியா மிக அதிகமான சமத்துவமற்ற நாடாக இந்தியா மாறியுள்ளது. அமெரிக்க, ரஷ்யாவை விட சமத்துவமின்மை இங்கு அதிகம். மனித வளக் குறியிட்டில் இந்தியாவின் நிலைமை என்ன? எவ்வளவு நாள் வாழ்வார்கள்? கல்வியின் நிலைமை என்ன? சுகாதாரத்தின் நிலை என்ன? 180 நாடுகளில்  இந்தியாவின் இடம் 130. பங்களாதேஷ் இந்தியாவை விட முன்னணியில் உள்ளது.

ஆனால் வறுமை, அடிமைத்தனம், லஞ்சம் குறியீடுகளில் மிகவும் பின் தங்கி உள்ளோம். 25 கோடி மக்கள் இரவு உணவின்றி தூங்க செல்கிறார்கள். கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு இன்றி உள்ளனர். பிரதமர் மீதே சந்தேக நிழல் ரபேல் ஒப்பந்தத்தால் விழுந்திருக்கிறது. ஆகவே இக் குறியிடுகளில் எல்லாம் பின் தங்கி இருக்கிறோம். 

அஸிம் பிரேம்ஜியின் அறிக்கை 2014- 17 ல் 70 லட்சம் வேலைகள் காணாமல் போயுள்ளன. 16 சதவீத இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். 

 குஜராத்தில் ஒரு புலம் பெயர் தொழிலாளி பாலியல் வன்முறையில் ஈடுபட்டான் என்று பிரச்சினை வெடித்தவுடன் ஒட்டு மொத்த வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படடனர். 50000 தொழிலாளர்கள் வெளியேறினார்கள். 5 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் சூரத் வைரத் தொழிலில் உள்ளனர். மிக மோசமான பணி நிலைமையில்தான் அவர்கள் உள்ளனர். ஆனால் குஜராத் இளைஞர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது. அவர்களின் கோபம் தொழிலதிபர்கள் மீது வரவில்லை. ஆனால் கோபம் வெளி நாட்டு தொழிலாளர்கள் மீதே வருகிறது. இது உலகமயத்தின் சாட்சியம். 

இது போலவே பொருளாதார பாதையின் பயன்களை அனுபவிப்பது அம்பானி, அதானி, டாடா, பிர்லா போன்றோர். ஆனால் சாமானிய மக்களின் கோபம் நடுத்தர வர்க்கம் மீதே வெளிப்படுகிறது. 

இதுதான் தொழிற்சங்க இயக்கம் சந்திக்கிற சவால். வெவ்வேறு பிரிவு உழைப்பாளி மக்களின் வாழ்நிலை பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை தொழிற்சங்கம் உணர்த்த வேண்டும். 

எல்.ஐ.சியின் வளர்ச்சி தடைபட்டுள்ளது. அக்டோபரில் வளர்ச்சி எதிர்மறை விகிதத்தில் உள்ளது. ஒற்றை பிரிமியமே அதிகம் வருகிறது. கால முறை பிரிமியம் வருவதில்லை என வருத்தப்படுகிறோம். ஏன்? வசதி படைத்தோர்தான் ஒற்றை பிரிமியத்தை தாங்க முடியும். 92 சதவீத பெண் உழைப்பாளிகளும், 80 சதவீத ஆண் உழைப்பாளிகளும் மாதம் ரூ 10000 க்கு கீழே சம்பாதிக்கிறார்கள். எப்படி கால முறை பிரிமியம் அதிகமாகும்? என்றாலும் ஒற்றை பிரிமியமும் முக்கியம். ஏனெனில் " காலாவதி"  அபாயம் அதில் இல்லை. ஆனால் காலமுறை பிரிமியம் விரிவாவது சாதாரண மக்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு கிடைக்க வழிவகுக்கும்.

நாம் இந்த சூழலில்தான் நாம் ஊதிய உயர்வு கேட்கிறோம். ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுவது என்ன? " செலவழிக்கத் தக்க உபரி சம்பளம் வரலாற்று ரீதியான சரிவை சந்தித்துள்ளது". 
இச் சூழலில்தான் எல்.ஐ.சி வணிகத்தின் எதிர் காலம், ஊதிய உயர்வின் எதிர்காலம் பற்றி நாம் விவாதிக்க வேண்டியுள்ளது. 

பணி நியமனங்கள் அரசால் தடுக்கப்படுகின்றன. நிரந்தர வேலைகள் அரசால் விரும்பப்படவில்லை. 40 சதவீத மத்திய அரசு வேலைகள் நிறந்தரமற்றவை. 45 சதவீத கர்நாடக அரசு வேலைகள் நிரந்தரமற்றவை. தமிழகத்திலும் இதே போன்ற நிலைதான் இருக்குமென்று நினைக்கிறேன். ஐ.எம்.எப் வழிகாட்டல் இது? Hire and Fire. ஐ.ஏ.எஸ் அந்தஸ்திலுள்ள மத்திய அரசு துணை செயலாளர்கள் பதவிக்கே " வரையறுக்கப்பட்ட மூன்றாண்டு பணிக் காலத்திற்கு" Fixed term employment ஆக நியமிக்கப்பட அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

எல்.ஐ சி ஊழியர்களின் சராசரி வயது 51. ஊழியர் சராசரி வயதே நிறுவனத்தின் வயதையும் தீர்மானிக்கிறது. செயற்கை அறிவூட்டல், பெரும் தரவு ஆகியனவும் வேலைகளை தாக்குகிற காலம் இது. மறு திறன் பயிற்சிக்கு உள்ளாக்கப்படாவிட்டால் 2030 ல் 55 சதவீத இந்திய உழைப்பாளிகள் நீடிக்க மாட்டார்கள். வங்கிகளில் ரோபோக்கள் வந்து விட்டன. 

பென்சனுக்கு மற்றுமோர் வாய்ப்பு கேட்கிறோம். ஆனால் அது பொருளாதார பிரச்சினை மட்டுமல்ல. எல்.ஐ.சி, ஜிப்சா நிர்வாகங்கள் கூடுதல் பொருளாதார சுமையை ஏற்க முடியும் என்று தெரிவித்த பின்னரும் அரசு மறுப்பது ஏன்? சமூக பாதுகாப்பு குறித்த அரசியல் அணுகுமுறை இது. 

ஏன் அரசு மறுக்கிறது? வட்டி விகிதங்களில் வீழ்ச்சி. எல்.ஐ.சி ஊழியர் சராசரி வாழும் காலம் 85 ஐ தொட்டுள்ளது. அதிகம் வாழ்வதை பிடிக்காத அரசை நாம் சந்திக்கிறோம். 

10 நாட்களுக்கு முன்பு 50000 கைம்பெண்கள் டெல்லியில் குறைந்த பட்ச பென்ஷனை ரூ 3000 ஆக உயர்த்த கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களுக்கு மாத பென்ஷன் ரூ 200. என்ன வாங்க முடியும்? எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? 

 மத்திய அரசில் 19 லட்சம், மாநில அரசின் 39 லட்சம் ஊழியர்கள் புதிய பென்ஷன் திடடத்தை ரத்து செய்யக் கோரி வருகிறார்கள். ரிசர்வ் வங்கி, பொது இன்சூரன்ஸ் ஊழியர்களும் பென்ஷன் குறித்த கோரிக்கைகளை வைத்துள்ளனர். ஜனவரி 8, 9 வேலை நிறுத்தம் இக் கோரிக்கையை முன்னிறுத்துகிறது. 

ஜனவரி 8, 9 வேலைநிறுத்தம் முன்னிறுத்துகிற முதல் கோரிக்கை குறைந்த பட்ச ஊதியம் ரூ 18000 என்பதாகும். ஆகவே இயல்பாக குறைந்த பட்ச பென்ஷன் 50 சதவீதம் எனில் ரூ 9000 என்றிருக்க வேண்டும். 

விவசாயக் கடன் ரத்து செய்யப்பட வேண்டும். 2014-17 க்கும் இடையில் 1,80,000 கோடி கார்ப்பரேட் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் சிறு பகுதியை செலவழித்தால் விவசாயக் கடன்களை ரத்து செய்து விடலாம். ஆனால் முதலாளிகளுக்கு கடன் ரத்தும் கிடைக்கும். ரஃபேல் டீலும் கிடைக்கும். 11 லட்சம் வராக்கடன். யாருடைய பணம்? யாருடைய சேமிப்பு? யாரிடம் இருந்து பெறப்படும் வருவாய்? சுரங்கம், ஆறு, மலை, இயற்கை வளங்கள்... சாதாரண மக்களுக்கு அல்ல என்கிறது அரசு. இதற்கும் பொதுத்துறை மீதான தாக்குதலுக்கும் சம்பந்தம் இல்லையா?5 கார்ப்பரேட் நலனுக்கான இலக்குகள்தானே இவையெல்லாமே! ஜனவரி 8, 9 மகா சங்கமம் இதை பேசப்போகிறது.

நம்பிக்கை அளிக்கின்ற நிகழ்ச்சிகளும் உண்டு. நாசிக்கில் இருந்து மும்பை வரை 40000 விவசாயிகள் நடைப் பயணம் மேற்கொண்டனர். 3 லட்சம் விவசாயிகள் டெல்லியில் திரண்டனர். கருத்துரிமைக்காக அறிவு ஜீவிகள் பலர் வீதிக்கு வருகிறார்கள். பல பகுதியினர் போராட்ட களத்திற்கு வந்துள்ளனர். 

இந்த ஒற்றுமை இன்று சிதைய வேண்டுமென முயற்சிக்கிறார்கள். இன்று கர்நாடக இசை இந்து தெய்வங்களைப் பற்றி மட்டுமே பாட வேண்டும் என்கிறார்கள். கிறித்தவ, இஸ்லாமிய பாடல்களை பாடக் கூடாது என டி.எம்.கிருஷ்ணா மிரட்டப்படுகிறார். ஜுகல் பந்தியில் கர்நாடக இசையும் இந்துஸ்தானியும் இணைந்து இழையோடுவது எவ்வளவு இனிமையானது? அரிஹரன், உஸ்தாத் வாசித் கான் இணைந்த டூயட் " கிருஷ்ணா நீ வர வேண்டும்..." என்ற பாடலைக் கேட்டு பாருங்கள். ஏன் இசையில் மத வெறியை கொண்டு வருகிறிர்கள்? இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் ஒரே உணவு, ஒரே உடை என்று இருக்கிறார்களா? தமிழ் இந்துவுக்கும் அஸ்ஸாம் இந்துவுக்கும் இடையிலான ஒற்றுமையை விட தமிழ் இந்துவுக்கும் தமிழ் இஸ்லாமியருக்கும் இடையிலான ஒற்றுமை அதிகம். 

பிரேம்சந்த் சிறந்த இந்திய இலக்கியவாதி. 1944 ல் அவர் சொன்னார். " தூய இந்து கலாச்சாரம், இஸ்லாமியக் கலாச்சாரம், கிறித்தவ கலாச்சாரம் என்று ஒன்று இருக்கிறதென்று சொன்னால் அது பைத்தியக்காரத்தனமானது". இதுவே பன்முக கலாச்சாரம். ஒன்றோடு ஒன்று ஊடாடுகிற கலாச்சாரம். 

உழைப்பாளிகளை பிரிக்கிற நிகழ்ச்சி நிரல்கள் முன்னுக்கு வருகின்றன. நாம் இவற்றை எதிர்கொள்ள வேண்டும். ஒற்றுமைக்காக நமது குரல் எழ வேண்டும். மத சார்பின்மை, சன நாயகம், பொதுத் துறை, பொருளாதாரக் கோரிக்கைகள் பாதுகாக்கப்பட ஒற்றுமை தேவை என்பது சாரம். 

13 வது நூற்றாண்டு பெர்சிய கவிஞர் கூறியது முக்கியமானது. 

" எல்லா அடித்தளங்களும்  பலவீனமானவை.  
அன்பு என்ற அடித்தளம் ஒன்றே பலமானது"

மிருல்யாகுடாவில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினர் பாலசாமியின் மகன் 23 வயதான பிரனாய் சாதி மறுப்பு திருமணத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளான். தொழிற்சங்க நிகழ்ச்சி நிரலில் சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பும் இணைய வேண்டும் என்பதை உணர்த்துகிற சோக நிகழ்வாகும். 

இத்தகைய விரிந்த வியூகத்தோடு முன்னேறுவோம். நமது எதிர்காலம், இயக்கத்தின் எதிர்காலம், தேசத்தின் எதிர்காலம்... எல்லாமே அத்தகைய கைகோர்ப்பினால் மட்டுமே பாதுகாக்கப்படும். 

1 comment:

  1. Very proud of our leaders.seedng good thoughts for the society and for the members.Translator steals our hearts by wonderful translation.hats off to both of them.

    ReplyDelete