Friday, October 19, 2018

மறக்க முடியாத மாலை அது . . .



தொழிற்சங்க உரிமைகளுக்காகவும் தொழிற்சங்கம் அமைத்த காரணத்திற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட தங்கள் தோழர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள யமஹா தொழிலாளர்கள் தொடர்ந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  வேலை நிறுத்தம் இன்றோடு 29 நாட்களை தொட்டு விட்டது. 

நேற்று முன் தினம் புதன் கிழமையன்று எங்கள் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் அறைகூவல்படி போராட்ட களத்திற்கு, ஸ்ரீபெரும்புதூர் யமஹா நிறுவன ஆலைக்கு இருநூறு மீட்டர் தள்ளியிருந்த (ஆலை வாசலுக்கு அருகில் இருக்கக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவு) போராட்டப் பந்தலுக்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தோழர்கள் சுமார் 75 பேர் சென்றிருந்தோம்.




சென்னை 1 கோட்டம், சென்னை 2 கோட்டம், பொது இன்சூரன்ஸ் மற்றும் எங்கள் வேலூர் கோட்டத்திலிருந்து சென்றிருந்தோம். வேலூரிலிருந்து ஒரு வேனில் கோட்டத் தலைவர் தோழர் எஸ்.பழனிராஜ், பொருளாளர் தோழர் எல்.குமார், தென் மண்டல செயற்குழு உறுப்பினர் தோழர் டி.செந்தில்வேல் உள்ளிட்ட  18 தோழர்கள் சென்றோம். ஒரகடம்-தாம்பரம் சாலையில் உள்ள சிப்காட் வளாகத்தில் உள்ளது யமஹா தொழிற்சாலை.  பிரதான சாலையிலிருந்து ஒரு மூன்று கிலோ மீட்டர் இருக்கும். தங்க நாற்கர சாலையே, அங்கங்கே பல்லிளித்துக் கொண்டு இருக்கும். ஆனால் கார்ப்பரேட் முதலாளிகளுக்காக போடப்பட்ட சாலை அவ்வளவு உயர்தரம்!.

நாங்கள் சென்ற நேரத்தில் போராடும் அந்த தொழிலாளர்கள் ஆயுத பூஜை நடத்தி முடித்திருந்தார்கள். ஐம்பதிற்கும் மேற்பட்ட பைக்குகளில் பின்னே ஒருவரையும் அமர்த்திக் கொண்டு போராட்ட பந்தலிலிருந்து யமஹா வாசல் வரை ஆரவார முழக்கத்தோடு ஊர்வலமாக சென்று வந்த காட்சி, அதிலும் அந்த ஆலையின் வாசலில் எழுப்பிய குரல் அவர்களின் உற்சாகத்தை நமக்குள் உடனடியாக பரவ வைத்தது. 

அந்த இளைஞர்களை பார்த்துக் கொண்டே இருந்தேன். பெரும்பாலும் இருபதிலிருந்து இருபத்தி ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள். இருபத்தி ஏழு நாட்களாக ஊதியத்தை இழந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள்.

தொழிலாளர் ஆணையம் நடத்திய பேச்சு வார்த்தையின் போது அளிக்கப்பட்ட அறிவுரையை மதிக்காத ஆணவ நிர்வாகம், தொழிற்சங்க உரிமை என்பது அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமை, அரசாங்கத்திடமிருந்து நிலம், மின்சாரம், தண்ணீர், வரி விடுமுறை என்று அனைத்து சலுகைகளை பெற்றுக் கொண்டு இந்திய சட்டங்களை மதிக்காத நிர்வாகத்திடம் கொஞ்சமும் கடுமை காண்பிக்க முடியாத கையாலாக மாநில அரசு, கார்ப்பரேட்டுகளுக்காகவே ஆட்சி நடத்தும் தரகு மத்தியரசு ஆகியவையே இந்த போராட்டம் நீடிப்பதற்கான காரணம்.

நீண்ட போராட்டம் அந்த வாலிபர்களிடத்தில் எந்த சோர்வையும் தரவில்லை. அவர்கள் அனைவரது முகத்திலும் உறுதியையும் உற்சாகத்தையும் தவிர வேறெதையும் காணவில்லை. தங்களின் போராட்டம் வெல்லும் என்ற நம்பிக்கையை மட்டுமே காண முடிந்தது.

தமிழக இன்சூரன்ஸ் ஊழியர்களின் சார்பில் அவர்களுக்கு ரூபாய் நாற்பத்தி ஐயாயிரம் போராட்ட நிதியாக வழங்கப்பட்டது. சி.ஐ.டி.யு சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.கண்ணன் தலைமையில் ஒரு கூட்டமும் நடைபெற்றது. 

எங்களின் தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் டி.செந்தில்குமார், துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன், பொது இன்சூரன்ஸ் தென் மண்டலச் செயலாளர் தோழர் ஜி.ஆனந்த், சென்னை 1 கோட்ட பொதுச்செயலாளர் தோழர் எஸ்.ரமேஷ் குமார், சென்னை 2 கோட்டத் தலைவர் தோழர் கே.மனோகரன் ஆகியோரோடு வேலூர் கோட்டத்தின் சார்பில் நானும் வாழ்த்திப் பேசினேன்.















"உங்களுக்கு ஆதரவு தர வருகிறோம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உங்கள் உறுதியையும் இளைஞர் சக்தியிலிருந்தும் நாங்கள்தான் உற்சாகம் அடைந்துள்ளோம்" 

என்று குறிப்பிட்டேன்.

ஆம்.

அதுதான் உண்மை.

ஒவ்வொரு முறை வெண்மணி செல்கிற போதும் எப்படி பேட்டரி ரீசார்ஜ் ஆனது போல உணர்வேனோ, அது போன்ற உணர்வைத்தான் அந்த போராடும் இளைஞர்கள் அளித்தார்கள். 

அவர்கள் போராட்டம் நிச்சயம் வெல்லும். 
நிர்வாகத்தின் ஆணவமும் அராஜகமும் தகர்ந்து போகும்.

மறக்க முடியாத மாலைப் பொழுது அது. 






6 comments:

  1. அருமை. போராட்டம் வெல்லட்டும்

    ReplyDelete
  2. Hope they win and get to form their union.

    ReplyDelete
  3. assembly of violent thugs

    ReplyDelete
    Replies
    1. முதலாளிகளிடம் எலும்புத் துண்டுகளை பொறுக்கித் தின்னும் தரகு நாய்களுக்கு உழைப்பாளி மக்களைக் கண்டால் எரிச்சல் வரத்தான் செய்யும்.
      முகத்தை மூடிக் கொண்டு தாக்கும் கோழைக் கூட்டத்திற்கு நிமிர்ந்த நடையோடு நேர் கொண்ட பார்வையோடு போராடும் பாட்டாளிக்கூட்டம் தக்க பதிலடி தரும்

      Delete
  4. Schizophrenia வருண்October 20, 2018 at 7:11 AM

    புரட்சி ஓங்கட்டும்

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete