கத்தியும் இல்லை, ரத்தமும்
இல்லை. ஆனாலும் இதுவும் ஒரு வித கொலைதான்.
எங்கள் பகுதி குடியிருப்போர்
நலச்சங்கத்தின் சார்பாக சமீபத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. முதலில் கொஞ்ச நேரம்
குன்னக்குடி வைத்யநாதன் வாசித்த இசைத்தட்டுக்களை ஒலிபரப்பிக் கொண்டு இருந்தவர்கள் பிறகு
சிறப்பு விருந்தினரான வேலூர் மேயருக்கு வரவேற்பு அளிப்பதற்காக ஒரு நாதஸ்வரக்
குழுவை வாசிக்க வைத்தார்கள். “ தாமரை பூத்த தடாகத்திலே” என்று தொடங்கிய அவர்களின்
நாதம் என்னை நெய்வேலிக்கு அனுப்பியது.
நெய்வேலியில் எங்களது
வீட்டிற்கு அருகில் ஒரு சின்ன கல்யாண மண்டபம் உண்டு. அங்கேயும் ஒரு நாதஸ்வரக்குழு
வரும். முதலில் அவர்கள் சுருதி சேர்க்கும் போதே பட்டாக்கத்தியை கல்லில் வைத்து
தீட்டுவது போலத்தான் இருக்கும். மணமகளே மணமகளே வா வா, வாராயோ தோழி போன்ற
பாட்டுக்கள்தான் முக்கியமாக வாசிப்பார்கள். அதற்குப் பிறகு அப்போதைய லேட்டஸ்ட்
பாட்டுக்கள்.
ஆனால் இவற்றை தொடங்குவதற்கு
முன்பாக தங்களுக்கும் கர்னாடக சங்கீதம் தெரியும் என்பதை தெரியும் என்பதற்காக ஒரு
பாட்டு வாசிப்பார்கள். அது “ தாமரை பூத்த தடாகத்திலே” பாட்டு. நாதஸ்வரக்காரர் எதோ
வாசித்துக் கொண்டிருப்பார். அதற்கு கொஞ்சமும் தொடர்பில்லாமல் தவில்காரர் ஏதோ
தப்புத் தாளம் தட்டிக் கொண்டிருப்பார்.
நல்ல வேளையாக நாங்கள் அந்த
வீட்டில் இருந்தது கொஞ்ச காலம்தான். அவர்களின் இசையென்னும் இன்ப வெள்ளத்திலிருந்து
மூழ்காமல் தப்பித்து விட்டோம்.
வேலூர் பார்ட்டியும் நெய்வேலி
பார்ட்டிக்கு சளைத்தவர்கள் அல்ல. முதலில் தாமரை பூத்த தடாகத்தில் இறங்கி அதனை வற்ற
வைத்து விட்டு “மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலை வாணி” யை அழைத்தார்கள். கலைவாணி
தன் கையில் இருந்த மாணிக்க வீணையை இரண்டாக உடைத்து அவர்கள் கையில் உள்ள
நாதஸ்வரத்தை பிடுங்குவதற்கு முன்பாக நாங்கள் அலுவலகத்திற்கு புறப்பட்டு விட்டோம்.
கத்தி, துப்பாக்கியால்
மட்டும்தான் கொலை செய்ய முடியுமா என்ன?
நாதஸ்வரமும் கூட சிலர் கையில்
கொலைக்கருவியாகி விடுகிறது, தில்லானா மோகனாம்பாளில் மனோரமா வாசித்தது போல.
ஒரு சந்தேகமும் உள்ளது.
பார்வையாளர்களுக்கு இந்த குழு
வாசித்தால் போதும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ அல்லது திருமண வீட்டினரோ
முடிவு செய்கிறார்களா?
இல்லை
இந்த ஆட்களுக்கு இவ்வளவு
வாசித்தால் போதும் என்று அந்த கலைஞர்கள் முடிவு செய்கிறார்களா?
No comments:
Post a Comment