நேற்றைய பதிவில் வீரம்,
ஜில்லா திரைப்படத்திற்கான விமர்சனம் இல்லை என்று எழுதினேன். இன்று அதைத்தான்
எழுதப் போகிறேன். என் மகன் வீரம் திரைப்படத்திற்கு போகலாம் என்று கேட்ட போது வேண்டாம்
என்று அலுப்போடு சொன்னேன். ஆனால் அதற்காக நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன்.
“ போன பதினைந்து நாளா வீட்டில
இருந்தியா? வெண்மணி போயிட்டு வந்த, உடனே பாபனாசம், இரண்டு நாளில மறுபடியும்
தூத்துக்குடி போயிட்ட, சனிக்கிழமை அரை நாள் ஆபிசுன்னு பேரு, செயற்குழு, பேரவைனு
ராத்திரிதான் வீட்டுக்கு வந்த, காலையிலயும் சங்கச்சுடர் அனுப்பனும்னு ஆபிஸ்
போயிட்ட, சனிக்கிழமை நாக்பூர் கிளம்பப் போற, என்னோட ஒரு சினிமாவுக்கு வரது மட்டும்
கஷ்டமா இருக்கா?”
இந்த அதிரடி கேள்விக்கு
என்னிடம் பதில் இல்லாததால் வீரம் பார்க்க புறப்பட்டு விட்டோம்.
இரண்டாவது வரிசையில் இடம். அண்ணாந்து
பார்க்க வேண்டும் என்பதே கிலி ஏற்படுத்தியது. எங்கள் அலுவலகத் தோழர் ஒருவர்
வந்திருந்தார். அவரது நிலை இன்னும் மோசம். முதல் வரிசையில் அவர் சீட் எண்கள்.
டைட்டில் போடும்போதே ரசிகக்
கண்மணிகளின் ஆரவாரம் தொடங்கியது. விஜயா கம்பைன்ஸ் படம் என்பதால் முதலில் எங்க
வீட்டுப் பிள்ளை காட்சியில் எம்.ஜி.ஆரைக் காண்பிக்கும் போதும் பிறகு உழைப்பாளி ரஜனியைக் கான்பிக்கும்பொதும் தொடங்கிய ஆரவார இரைச்சல் அஜித்தின் பெயரை போடும்போது செவிப்பறையை கிழித்தது. தவறு செய்து விட்டோமோ என்று யோசிக்க வைத்தார்கள் ரசிக்கக் கண்மணிகள். நல்ல வேலையாக அரை மணி நேரத்தில் அவர்கள் கலைத்து விட்டார்கள்.
புதிதான கதை என்று ஒன்றும் இல்லை. மசாலாதான் ஆனால் கலவை சரியாக இருந்தது.சுவாரஸ்யமாக வேகமாக இருந்தது. அஜித்தை துரத்தும் குண்டர்கள் அவருக்காக வரவில்லை, அமைதியை விரும்பும் நாசர், தமன்னா குடும்பத்தை அழிக்க விடப் பட்டவர்கள் என்பது நல்லதொரு திருப்பம்.
முகம் சுளிக்க வைக்கும் காட்சி அமைப்புக்கள் இல்லாமல் இருந்தது (ரமேஷ் கண்ணா வரும் ஒரு காட்சி தவிர) ஆறுதல் அளித்தது. சந்தானம் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமலேயே சிரிக்க வைத்தார். ஆனால் தம்பி ராமையா கொஞ்சம் பாவம்தான். தண்ணி காட்சிகளும் இருந்தது ஆனால் அதிகமில்லை.
பொதுவாக ஐந்து சகோதரர்கள் உள்ள படமென்றால் அதிலே மோதல் வந்து கடைசியில் மனம் திருந்தும் கதையமைப்பு இருக்கும். அப்படிப்பட்ட எதிர்பார்த்த திருப்பம் (அப்படி மோதல் வருவதாக பின் வரிசையில் உள்ளவர்கள் வேறு கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள்) இல்லாதது ஒரு நல்ல அம்சம். கத்தியும் ரத்தமும் இரண்டாவது பகுதியில் கொஞ்சம் அதிகம்.
அஜித் நன்றாக நடித்திருந்தார். நடனம் அவ்வளவாக வராத அவரை நடன இயக்குனர் படுத்தவில்லை. அதனால் நாமும் தப்பித்தோம். இன்னும் எத்தனை படங்களில் நரைத்த தாடியோடும் முடியோடும் வரப்போகின்றீர்கள் அஜித்? அமிதாப் குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார். நீங்கள் கதாநாயகராக வந்து காதலிக்கவெல்லாம் செய்கிறீகள். ஒருவேளை நீங்கள் சாயம் பூசியிருந்தால் சூப்பர் அழகு என்று கூட தமன்னா சொல்லியிருக்கலாம்.
வழக்கம் போல பன்ச் டயலாக்குகள் வலிய திணிக்கப் பட்டிருந்தாலும் "உழைக்கிற ஜாதி" என்ற வசனம் இன்றைக்கு அவசியமானது. நாசர் எனும் அற்புதக் கலைஞனை பிரேம்ஜி போல நடிக்க வைத்து பிரியாணியில் கொடுமைப் படுத்தியிருப்பார்கள். இதிலே அவருக்கு நிறைவான வேடம். நமக்கும் கூட.
பாடல்கள் என் காதிற்கு சுகமாக இல்லை. பின்னணி இசை வெறும் வாத்தியங்களின் இரைச்சல். ராஜாவுக்கு நிகராக பின்னணி இசைக்க வேறு யாரும் இல்லை என்பது நிரூபணமாகிக் கொண்டே இருக்கிறது. தேவிஸ்ரீ பிரசாத் கொஞ்சம் ஒநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் பின்னணி இசையைக் கேளுங்களேன்.
சில திரைப்படங்கள் பார்த்து விட்டு வெளியே வரும் போது எதற்காக வந்தோம் என்று நொந்து கொள்வோம். மகாநதி , சேது போன்ற சில படங்களின் தாக்கம் தூக்கத்தையும் கலைத்து விடும். இந்தப்படம் இரண்டு வகையும் கிடையாது. போரடிக்காமல் கொடுத்த காசுக்கு வஞ்சனை செய்யாத படம்.
எல்லா திரைப்படங்களிலும் கதாநாயகிக்கு இழைக்கப்படும் அராஜகம் இந்தப் படத்திலும் நிகழ்ந்தது. அந்தக் கொடுமை பற்றி நாளை பார்ப்போம்.
சினிமா பின்னணிஇல்லாமல் சிகரத்தை தொட்டிருக்கும் அஜீத்தின் வீரம் படத்தை நானும் பார்த்தேன். அதுவும் முதல் நாளே. அஜீத்திற்கு இவ்வளவு வரவேற்பா என்று அசந்தது நிஜம். . தோழர் எனக்கு ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் தங்களுடைய எண்ணங்களும் கருத்துக்களும் கிட்டத்தட்ட தொண்ணுற்று ஒன்பது சதவிகிதம் ஒத்து வருகிறது. அந்த ஒரு சதவிகிதம் கொஞ்சம் நெருடல்தான்.
ReplyDeleteஏதோ துணிச்சலில் வீரத்துக்கு போய் விட்டீர்கள் .. ஆனால் இதே போல் ஜில்லாவுக்கு போய் விடாதீர்கள் .
ReplyDeleteஅப்புறம் உங்களுக்கு அம்புலன்ஸ் அனுப்பி வைக்க வேண்டும்
good review
ReplyDelete