Tuesday, August 30, 2011

பிரதமரின் குரலால் பறி போன அறுபது லட்ச ரூபாய்.

 எங்கள் மாத இதழ் சங்கச்சுடரில்  வரும் "ஊழல்களின் ஊர்வலம் "
தொடருக்காக  எழுதப்பட்டது.


24 மே 1971, புது டெல்லியின்  பரபரப்பான  ஸ்டேட் வங்கியின் 
பிரதான கிளையின் பிரதான காசாளர் வேத் பிரகாஷ் மல்ஹோத்ராவிற்கு
காலையில்  ஒரு தொலைபேசி வருகின்றது. மறு முனையில் அன்றைய
பாரதப் பிரதமர் திரு இந்திரா காந்தி. வங்க தேசத்தைச் சேர்ந்த  ஒருவர்
வருவார், அவரிடம் அறுபது  லட்ச ரூபாய்  கொடுத்தனுப்பவும்  என
அவர் கூறுகின்றார்.

அப்படியே  ஒரு நபர் வருகின்றார். 60 லட்ச ரூபாய் கைமாறுகின்றது.
மாலை வரை காசோலையோ  அல்லது பணம்  பெற்றதற்கான
அத்தாட்சியோ  வராததால் பிரதமரின்  வீட்டிற்குப் போகின்ற
வி.பி.மல்ஹோத்ரா வை  பிரதமர் யாரிடமும் பணம் கொடுக்கச்
சொல்லி  தொலைபேசியில் பேசவில்லை  என்று  பிரதமரின்
முதன்மை  உதவியாளர்  பி.என்.ஹக்சர்  அனுப்பி விடுகின்றார்.

காவல்துறையில்  புகார் கொடுத்ததும்  பணம்  பெற்றுச்  சென்ற
அந்த நபரை  கண்டு பிடித்து கைது செய்து விடுகின்றனர். உளவுத்
துறையான "ரா' அமைப்பைச்  சார்ந்த  நகர்வாலா  என்ற  அந்த
நபர்  இந்திரா காந்தி போல  மாற்றுக் குரலில்  பேசி  பணத்தை
மோசடி  செய்தார்  என வழக்கு பதிவு செய்து சிறையில் 
அடைக்கிறார்கள்.  அந்தப்பணம்  இந்திரா காந்தியின்  சொந்தப்பணம்
என்று எதிர்கட்சிகள்  குற்றம் சுமத்தின.  ஆனால்  அவற்றுக்கெல்லாம்
அவர் பதில் சொல்லவில்லை.

இந்த வழக்கில் பல மர்ம முடிச்சுக்கள் உண்டு. நான்கு ஆண்டு
சிறைத்தண்டனை பெற்ற நகர்வாலா  சிறையிலேயே  மன நிலை
பாதிக்கப்பட்டு  இறந்து போனார். வழக்கை விசாரணை செய்த
காஷ்யப்  என்ற  காவல்துறை அதிகாரி மர்மமான சாலை விபத்தில்
கொல்லப்பட்டார். 

எவ்வித அத்தாட்சியும் பெறாமல்  60 லட்ச ரூபாயை அள்ளித்
தந்த வி.பி.மல்ஹோத்ரா மீது  ஸ்டேட் வங்கி எவ்வித நடவடிக்கையும்
எடுக்கவில்லை. சஞ்சய் காந்தி துவங்கிய மாருதி உத்யோக் கார்
கம்பெனியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக  நியமிக்கப்பட்ட
அவருக்கு புது டெல்லியில்  பல்வேறு பேருந்துகளை இயக்க அனுமதி
வழங்கப்பட்டது.

பின்னாளில் சி.பி.ஐ யின் இணை இயக்குனர் மாதவன் இவ்வழக்கின்
கோப்புகளை ஆராய அப்பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

பிரதமர் இந்திரா காந்தியின் மர்மங்களில் ஒன்றாகவே  நகர்வாலா
வழக்கு  இன்னும் நீடிக்கிறது.

No comments:

Post a Comment