திகில் திரைப்படங்களின் உச்சகட்ட காட்சி போன்றதொரு
பிரமையை அனைத்து ஊடகங்களும் உருவாக்கியிருந்தனர்.
என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்ற பதட்டத்தில் உலகில்
உள்ள எல்லா பங்குச்சந்தைகளும் தடுமாறிக்
கொண்டிருந்தன. பேச்சு வார்த்தைகள் நடந்து
கொண்டே இருந்தன.
இவ்வளவு பரபரப்பை உருவாக்கிய நிகழ்வு எது?
அமெரிக்கா தனது சட்ட பூர்வமாக அனுமதிக்கப்பட்ட
கடன் அளவான 4.3 ட்ரில்லியன் டாலர் என்ற அளவைக்
கடந்திருந்தது. அதன் கஜானாவில் இருந்த கையிருப்பு
குறைந்து கொண்டே போயிருந்தது. ஆகஸ்ட் மாதம்
இரண்டாம் தேதிக்குள் அனுமதிக்கப்பட்ட கடன் அளவை
உயர்த்தாவிட்டால் அமெரிக்க அரசு செலுத்த வேண்டிய
எந்த ஒரு தொகையையும் செலுத்த இயலாது, ஏனென்றால்
பணம் இருக்காது.
சாதாரண நடுத்தர ஊழியர், மாதத்தின் கடைசி தினங்களில்
படுகிற அவஸ்தையை அமெரிக்க அரசு அனுபவித்தது.
வெள்ளை மாளிகைக்கு காய்கறி வாங்கக் கூட் முடியாத
அளவிற்கு நெருக்கடி இருக்கும் என சொல்லப்பட்டது.
அமெரிக்க அரசு செலுத்த வேண்டிய கடன், வட்டி
தொகைகள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான
ஊதியம் மற்றும் பென்ஷன் ஆகியவற்றை
வழங்க முடியாது, அரசுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி
வரும் ஒப்பந்ததாரர்களுக்கான ஒப்பந்தத் தொகையை
அளிக்க முடியாது என்ற நிலை உருவாகும் என்று
சொல்லப்பட்டது.
அனுமதிக்கப்பட்ட கடன் அளவை உயர்த்தினால்
இந்த நிலைமையை சமாளிக்க முடியும் . ஆனால் அது
அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஏனென்றால்
அமெரிக்க நாடாளுமன்றம் அதனை ஏற்க வேண்டும்.
ஜனாதிபதி பாரக் ஓபாமாவின் ஜனநாயகக் கட்சியை விட
எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சிக்கு கூடுதல்
உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்களின் ஆத்ரவு
இல்லாமல் கடன் வரம்பு அளவை ஒபாமாவால்
உயர்த்த முடியாது. அவர்களின் ஆதரவு கோரப்பட்டது.
இன்சூரன்ஸ் துறையை நாசமாக்கும் ஐ.ஆர்.டி.ஏ மசோதாவை
பா.ஜ.க அரசு அறிமுகம் செய்த போது காங்கிரஸ் கட்சி
ஆதரவளித்தது. இந்தியத் தொழிலாளர்களின் எதிர்காலத்தை
நாசம் செய்யும் பென்ஷன் ஆணைய மசோதாவை அறிமுகம்
செய்ய இப்போது பாஜக ஆதரவளித்தது. மக்களுக்கு எதிரான கொள்கைகள் என்று வருகிற போது இரண்டு முதலாளித்துவக்
கட்சிகளுமே கூட்டுக் களவாணிகளாக உள்ளனர்.
அமெரிக்காவின் இரு பெரும் கட்சிகளும் கூட அப்படித்தான்.
ஆனாலும் இந்த சிக்கலான நிலையை குடியரசுக் கட்சி
பயன்படுத்திக் கொண்டது. ஜார்ஜ் புஷ்ஷால் இழந்த
ஆட்சியை மீண்டும் பெறுவதற்கு, ஒபாமா ஒரு
செயலற்ற தலைவர் என்று நிரூபிப்பதற்கு
இச்சந்தர்ப்பத்தை மிகவும் நன்றாகவே
பயன்படுத்திக் கொண்டது. கடன் அளவை
உயர்த்துவதற்கு பல நிபந்தனைகளை விதித்தது.
கடன் அளவை உயர்த்த வேண்டும் என்றால் செலவினங்களை குறைத்திட வேண்டும் என்று குடியரசுக்கட்சி நிபந்தனை விதிக்க, அப்படிச்செய்தால் மக்கள் நல திட்டங்களை அமுலாக்க
முடியாதே என ஒபாமா புலம்ப, மேலே முதலில் சொன்ன
திகில் நாடகம் தொடங்கியது. நாடகக் காட்சிகளுக்கு
ஏற்றவாறு பங்குச்சந்தைகளும் ஏற்ற இறக்கம் கண்டது.
தெருவோர வித்தைக்காரர்களின் பாம்பு - கீரிச் சண்டை
என்னாளும் நிகழ்ந்ததில்லை என்பது போல இவர்களின்
மோதலால் அமெரிக்கா ஸ்தபித்துப் போகும் நிலை
வராது என்பது தெளிவாக இருந்த போதும் பரபரப்பை
தவிர்க்க இயலவில்லை.
இறுதியில் கடன் அளவு 400 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உயர்த்தப்பட்டது. குடியரசுக் கட்சி நிர்ப்பந்தித்தது போல
2.4 ட்ரில்லியன் டாலர்கள் அளவிற்கு செலவினங்களைக்
குறைக்கவும் ஒபாமா அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
இம்முடிவு ஒருமனதாக எடுக்கப்படவில்லை.
குடியரசுக் கட்சியின் 174 உறுப்பினர்களும் ஜனநாயக்
கட்சியின் 95 உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களித்தனர்.
குடியரசுக் கட்சியின் 66 உறுப்பினர்களும் ஜனநாயக்
கட்சியின் 95 உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்தனர்.
செலவினங்களை வெட்டியது போதாது என்பது எதிர்த்து
வாக்களித்த குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் நிலைப்பாடு.
குடியரசுக் கட்சிக்கு ஒபாமா அதிகம் பணிந்து விட்டார்
என்பது எதிர்த்து வாக்களித்த ஜனநாயகக் கட்சியின்
உறுப்பினர்களின் கோபம்.
கடன் அளவு உயர்ந்து விட்டதால் அமெரிக்காவின்
உடனடிப் பிரச்சினை தீர்ந்து போயுள்ளதே தவிர,
அமெரிக்காவின் பொருளாதார சிக்கலுக்கு
எவ்வித தீர்வும் வரவில்லை. வரப்போவதுமில்லை.
மாறாக புதிய சிக்கல்களைத்தான் ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் இது நாள் வரை 61 அமெரிக்க வங்கிகள்
திவாலாகி உள்ளன. வீட்டுக் கடன் பிரச்சினை நீடிக்கிறது
என்பதற்கான உதாரணம் இது. அமெரிக்க நாடாளுமன்றத்
தீர்மானத்தின் படி 2.4 ட்ரில்லியன் டாலர்கள்
செலவினத்தை வெட்ட வேண்டுமானால், அது மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவழிக்கப்பட்டும் தொகையை கட்டுப்படுத்தினால் மட்டுமே சாத்தியம். அப்படி
செய்கின்றபோது ஏற்கனவே சிரமத்தில் தவிக்கும் அமெரிக்க
ஏழை மக்கள் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.
நலத்திட்டங்களில் கை வைக்காமல் நிலைமையை சமாளிக்க வாய்ப்புண்டா என பார்த்தால் ஆம், இருக்கிறது என்பதே பதிலாக இருக்கும்.
அமெரிக்கா தனது இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களுக்காக
நேரடியாக 900 பில்லியன் டாலர்களை நேரடியாகவும் அதனை விட
அதிகமான தொகையை மறைமுகமாகவும் ஒவ்வொரு ஆண்டும்
செலவழித்து வருகின்றது. அமெரிக்கப் படைகள் அங்கிருந்து
வெளியேறினால் ஏராளமான தொகை மிச்சமாகும்.
ஆனால் அப்படி செய்ய அமெரிக்கா முன் வராது. அதன் ஏகாதிபத்திய
குணாம்சம் அனுமதிக்காது. ஆனால் அமெரிக்கா தனது சிக்கல்களை,
பாரத்தை மற்ற நாடுகளின் தோள்களின் மீதுதான் இறக்கி வைக்கும்.
மன்மோகன்சிங், மாண்டெக் சிங் அலுவாலியா, சிதம்பரம், பிரணாப்
முகர்ஜி போன்ற விசுவாசிகள் இருக்கும் வரை அமெரிக்காவிற்கு
என்ன கவலை! எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது நம்மைப்
போன்ற உழைக்கும் மக்கள்தான்...
பின் குறிப்பு : இப்பதிவிற்கு பொருத்தமான படத்தை அனுப்பிய
எனது முகநூல் நண்பர் தோழர் அனு மல்ஹோத்ரா, லூதியானா
அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
super
ReplyDeleteThank you for Information.Good Job Sir.
ReplyDeleteஅமெரிக்காவின் பொருளாதாரம் இந்த யுத்தங்களை நம்பியே இருக்கிறது .அது தவிரவும் அங்கு சில மாபியாக்களும் கார்ப்பரேட் குழுமங்களுமே அரசையும் பொருளாதாரத்தையும் ஆட்டி வைக்கின்றன. ஆனால் இந்த வீணாய் போன பொருளாதாரக் கொள்கையை நாம் ஏன் இப்படி வெறித்தனமாக பின்பற்றிக் கொண்டிருக்கிறோமோ தெரியவில்லை .
ReplyDeleteநல்ல கட்டுரை.
ReplyDeleteஅமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டது குறித்த அருமையான பதிவு நன்றி
ReplyDelete