Friday, June 3, 2011

ஜெயலலிதாவை பாராட்டும் வேலூர் மக்கள் - நிஜம்தான் நக்கலில்லை.

வழக்கமான  ஜெ  அதிரடி நடவடிக்கைதான்.  ஆனால்  அது  அவரது கட்சிக்காரர்கள்  மட்டுமல்லாமல்  வேலூர் மக்களையும்  பாராட்ட 
வைத்துள்ளது.  
1977  தேர்தலுக்கு பிறகு  இந்த முறைதான்  அதிமுக  முதல் முறையாக 
வேலூர் சட்டமன்ற தொகுதியை  வென்றது.  அதிமுக வேட்பாளரான 
டாக்டர் விஜய்  சுகாதாரத்துறை  அமைச்சராகி , இந்திய சுதந்திரத்திற்குப் 
பின்பு  வேலூர்  தொகுதியிலிருந்து  அமைச்சரான  முதல் எம்.எல்.ஏ  என்ற
பெருமையையும்  பெற்றார். 



வேலூர் மாவட்டத்தில்  திமுக வின் சார்பாக   அமைச்சராக இருந்த துரைமுருகன்    அருகாமை காட்பாடி தொகுதியைசேர்ந்தவர். ஜெ வின் முந்தைய ஆட்சிக்காலத்தில்  அமைச்சர்களாக இருந்த  ஜி.விஸ்வநாதன், கன்னத்தில் போட்டுககொல்லுதல்  புகழ்  பாண்டுரங்கன்  ஆகியோர் வேலூருக்கு  இன்னொரு பக்கத்தில்  இருக்கும்  அணைக்கட்டு  தொகுதியை  சேர்ந்தவர்கள்.    



அமைச்சராக டாக்டர் விஜய் பதவியேற்ற பின்பு   வேலூருக்கு  முதல் முறையாக  வந்த போதே  அருகில் இருந்த சில நபர்களை பார்த்து 
மக்கள்  முகம் சுளித்தனர்.  அதிலே  மிக முக்கியமானவர்  ஜி.ஜி.ரவி 
என்ற கல்வி வள்ளல்.  அனைத்து விதமான சமூக விரோத செயல்களையும்   செய்பவர்கள்  போல  ஒரு பொறியியல் கல்லூரி
துவங்கி   வள்ளல் வேடம் போட்டாலும்  எந்த பழைய தொழில்களையும்
இன்னும் விடாமல்  உறுதியாக  தொடருபவர். 



காங்கிரஸ், தமாகா , காங்கிரஸ்,  என்று  வலம்  வந்து  எம்.எல்.ஏ சீட் 
கிடைக்காமல்  முலாயம் கட்சி வேட்பாளராக, சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு  இறுதியில்  அதிமுகவில் அடைக்கலம் ஆகி கவுன்சிலராக 
உள்ளவர். இவரும்  சில   தொழில் முறை மோசடிப் பேர்வழிகளும்தான்
அமைச்சரை  சுற்றி வலம் வந்தனர். ஆட்டமும் தொடங்கியது. 
ஆனால் ஆட்டம் நெடு நாட்கள் நீடிக்கவில்லை. இவர்களைப் பற்றிய 
புகார் மேலே  செல்ல  ஜெ வும் இவர்களை  அனைவரையும்  கட்சியில் 
இருந்து நீக்கி விட்டார். மறு நாளே  ஒரு ரியல் எஸ்டேட்  அதிபரை 
மிரட்டிய புகாரில்  கைது  செய்து  உள்ளேயும் தள்ளி விட்டார்.   



அராஜகப் பேர்வழிகள்  அரசு நிர்வாகத்தில்  தலையிட அனுமதிக்க மாட்டோம் என்று  அரசு சொல்லிய செய்தியாகவே  வேலூர் மக்கள் 
பார்க்கிறார்கள்.  துணிச்சலான நடவடிக்கை , திமுக என்றால் வாய்ப்பே 
கிடையாது  என்று   திமுக  அனுதாபிகளே  சொல்கின்றனர். 
ஆரம்ப உற்சாகமாக  இல்லாமல்  இந்த அணுகுமுறை  தொடர வேண்டும் 
என்பதே  அனைவருக்கும்  உள்ள    எதிர்பார்ப்பு.

 
 

1 comment:

  1. ஏனுங்க அம்மணி அம்புட்டுக்கு மாறிட்டாங்க... மனசுக்கு சந்தோசமா இருக்குங்க..

    ReplyDelete