Saturday, August 13, 2016

காஷ்மீர் மீண்டும் பியூட்டிபுல் காஷ்மீராக

 
 
காஷ்மீர் பிரச்சினை பற்றி தமிழகத்து பிரதிநிதி அபத்தமான உளறிக் கொண்டிருந்த அதே மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி நிகழ்த்திய அறிவுபூர்வமான உரை. இவரது ஆலோசனையைக் கேட்டால் நல்லது. மோடி அரசு அப்படி செய்யுமா என்பது சந்தேகமே.
 
 
*காஷ்மீர் மக்களுடன் உடனே பேசுக!*
                        *-யெச்சூரி*
 
காஷ்மீரில் ரத்த வாடை நீடிக்குமானால், வல்லூறுகள் வட்டமிடத்தான் செய்யும்; எனவே உடனடியாக அரசியல் பேச்சுவார்த்தையை துவங்குங்கள் என்று நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீர் குறித்து நடைபெற்ற விவாதத்தில் சீத்தாராம்யெச்சூரி பங்கேற்று பேசியதாவது: காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வுகாண அரசியல் ரீதியாக நடவடிக்கைகளைத் தொடங்குங்கள். தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துங்கள். ஜம்மு-காஷ்மீரிலும் அவ்வாறு ஒரு கூட்டத்தைக் கூட்டுங்கள். அனைத்துத்தரப்பு இயக்கத்தினரையும் அழைத்துப் பேசுங்கள்.

அரசியல் பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள். இவ்வாறு எதுவும் செய்யாமல் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது.பாகிஸ்தான் தலையீடு இருக்கலாம், எல்லை தாண்டிய ஊடுருவல் இருக்கலாம். இவை எப்போதும் இருக்கத்தான் செய்யும். ஆயினும் இவற்றையெல்லாம் மீறி காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த நாடாளுமன்றமும்.

நாடும் எவ்விதத் தயக்கமுமின்றி எதிர்பார்க்கின்றன. சடலங்களிடமிருந்து ரத்த வாடை வீசுவதை அறியும்போதுதான் வல்லூறுகள் அவற்றைக் கொத்தித் தின்பதற்காக வரும். அதேபோல், காஷ்மீர் முழுவதும் மக்களின் ரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது. அவற்றைக் கொத்தித் தின்பதற்காக வல்லூறுகள் வருவதற்கு அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். ஏன் இப்படி மக்கள் ரத்தம் சிந்தப்பட வேண்டும்? காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்றைய தினம் மக்கள் மீது அவநம்பிக்கை ஏன்? மக்களிடம் அரசாங்கத்திற்கு எதிராக தனிமைப்படும் போக்கு ஏன் உருவாகி இருக்கிறது? இக்கேள்விகள் அனைத்தும் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு உரிய தீர்வு காணப்பட வேண்டும்.

*கலவரம் நடக்காத காஷ்மீர்*

அடுத்தது, காஷ்மீர் மக்கள் மத்தியில் நம்பிக்கை இன்மை ஏற்பட்டிருக்கிறது. ஏன்? நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில், காஷ்மீர் மக்கள், நம் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக பாகிஸ்தான் ஊடுருவலை உறுதியுடன் எதிர்த்து நின்று போராடினார்கள். மத வேறுபாடுகளுக்கு அவர்கள் இடம் கொடுக்கவில்லை.வட இந்தியா முழுவதும் குறிப்பாக, பஞ்சாப்பிலும், வங்கத்திலும் மதக் கலவரங்கள் ஏற்பட்டன. மகாத்மா காந்தி அப்போது இங்கே செங்கோட்டையில் இல்லை; வங்கத்தில் நவகாளியில் வகுப்புக்கலவரங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். ஆனால் காஷ்மீரில் இதுபோன்ற கலவரம் ஏதும் அன்றைய தினம் நடக்கவில்லை.

*நிலங்களைப் பகிர்ந்தளித்த காஷ்மீர்!*

தயவுசெய்து இதை நினைவுகூருங்கள். அவர்கள் சுதந்திரம் வேண்டும் என்கிற விருப்பத்துடன்தான் இந்தியாவுடன் சேர்ந்தார்கள். அங்கே இருந்த நிலப்பிரபுத்துவ நுகத்தடியை உடைத்தெறிந்தார்கள். நிலப்பிரபுக்களின் நிலங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, நிலப்பிரபுக்களுக்கு இழப்பீடு எதுவும் கொடுக்கப்படாது, உழுபவனுக்கே நிலம் சொந்தம் ஆக்கப்பட்ட ஒரு மாநிலம் காஷ்மீர் மாநிலம்தான்.

இரண்டு மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து காஷ்மீரிகளாகத்தான் வாழ ஆசைப்படுகிறார்கள். அப்படிப்பட்ட மக்கள் இன்றையதினம் ஏன் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்? இதனை நாம் ஆய்வு செய்திட வேண்டும்.அரசமைப்புச் சட்டம் 370 காஷ்மீருக்கு மட்டும் உரியது அல்ல. வடகிழக்கு இந்தியாவில் பல மாநிலங்களுக்கு நாம் அதனை விரிவுபடுத்தி இருக்கிறோம். அது சுயாட்சிக்கானதாகும்.

*பேச்சுவார்த்தையே தீர்வு!*

அரசியல்ரீதியாகப் பேச்சுவார்த்தை நடத்தாமல் காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. காஷ்மீர் மக்கள் மீது நம்பிக்கை வைத்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிட வேண்டும். காஷ்மீர் மக்களுக்கு இந்த அரசு தந்துள்ள உறுதிமொழிகளை அமல்படுத்துவதன் மூலம் மட்டுமே அவர்கள் நம்பிக்கையை பெற முடியும். அவர்களுக்கு அளித்த உறுதிமொழிகளை எப்படி அமல்படுத்தப் போகிறீர்கள்? இதற்கு அரசுத்தரப்பிலும் மக்கள் தரப்பிலும் பரஸ்பரம் நம்பிக்கை ஏற்பட வேண்டும்.

நம்பிக்கை இன்மை தொடருமாயின், நம்பிக்கையை உருவாக்குவதற்கான சூழ்நிலையை உருவாக்கிட வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை அகற்றிடுவோம் என்று தினம் தினம் சொல்லிக்கொண்டிருந்தீர்களானால் எப்படி அவர்களின் நம்பிக்கையைப் பெற முடியும்? பசுவைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் கொல்லப் போகிறோம் என்று சொன்னால் எப்படி நம்பிக்கையைப் பெற முடியும்? ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொய்க் குற்றச்சாட்டை சுமத்தி இரு முஸ்லிம்களைத் தூக்கில் தொங்க விட்டீர்கள். தாத்ரியில் அக்லாக்கைப் பொய்க் குற்றச்சாட்டின் பேரில் கொலை செய்தீர்கள். இவையெல்லாம் நம்பிக்கை ஏற்படுத்தும் செயல்களா?

*காஷ்மீர்..!*
*காஷ்மீரின் பிரச்சனை மட்டுமல்ல..!*

காஷ்மீர் பிரச்சனைஎன்பது உள்ளபடியே நம் அனைவரின் பிரச்சனையுமாகும். நாடு முழுவதும் உள்ள மக்களின் பிரச்சனையாகும். அதனைத் தீர்த்திட முதலில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள், அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவை அகற்றப்போகிறோம் என்று கூறுவதை நிறுத்துவதன் மூலம் அவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஊட்டுங்கள்.

நாடு முழுதும் மதவெறி நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதைக் கைவிடுவதன் மூலம் அவர்களின் மத்தியில் நம்பிக்கை விதையைத் தெளியுங்கள்.2010இல் நாங்கள் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்குச் சென்றிருந்தபோது, 200 முதல் 300 வரைக்குமான அளவிலேயே தீவிரவாதிகள் இருந்தார்கள் என்று எங்களுக்கு சொல்லப்பட்டது. ஆனால் இன்றைய தினம் அவர்கள் மூவாயிரத்திலிருந்து நான்காயிரம் வரை இருக்கும் என்று உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.சுயாட்சி குறித்த அரசு அளித்துள்ள உறுதிமொழிகள், அரசமைப்புச் சட்ட 370ஆவது பிரிவு என அனைத்து குறித்தும் பேசுங்கள். மனம் திறந்து வெளிப்படையாக பேசுங்கள்.

அனைவரின் கருத்துக்களையும் கேளுங்கள். இந்தியாவுடன் காஷ்மீர் இணையும்போது அம்மாநில மக்களுக்கு எவ்விதமான உறுதிமொழிகள் எல்லாம் அளித்தோமோ அவற்றின் அடிப்படையில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளுங்கள். அடுத்து முக்கியமாக மக்கள்மீது பெல்லட் குண்டுகள் வீசுவதை நிறுத்துங்கள். இவையே அரசாங்கத்திடம் நான் வலியுறுத்துபவைகளாகும்.

2 comments:

  1. இது மக்களுக்கான மாநிலங்களவையின் உரை!

    தமிழக கோமாளி செய்தது மொள்ள மாரித்தனம்! எதை எங்க பேசுவது, பாடுவது என்ற பெயரில் ஊளை இடுவது,(TMS உயிருடன் இல்லை என்றாலும் இப்படியா?) என்ற அடிப்படை அறிவிலிகள்.
    இவர்கள் கொத்தடிமைகள் அடிமைகள் என்பது அங்குள்ளவர்களுக்கு தெரியும். இப்ப எருமைகள் எனபதும் புரிந்து இருக்கும்!

    ReplyDelete
  2. அனைவருடைய உணர்வுகளையும் புரிந்துகொள்ளவேண்டும் என்பது முற்றிலும் ஏற்கப்படவேண்டியதே.

    ReplyDelete